தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் 2026 சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த மார்ச் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார், திருச்சி கிழக்கில் போட்டியிடுவதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் இந்த இரண்டு வேட்புமனுக்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் வயது 52 என குறிப்பிட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 51 என வயதை குறைத்து காட்டப்பட்டிருந்தது.
இதனால் இரண்டு தினங்களில் வயதை குறைப்பது எப்படி என விமர்சனங்களும் எழுந்தன.
அதுபோன்று பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவில், எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் திருச்சி கிழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 2025ஆம் ஆண்டு மதுரை மாநாட்டின் போது நடந்த மோதல் தொடர்பான ஒரு வழக்கும், மார்ச் 30ஆம் தேதி கொளத்தூர் பிரசாரத்தின் போது விதிமீறல் தொடர்பாகப் பதியப்பட்ட மற்றொரு வழக்கும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி முரண்பாடுகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படலாம் எனவும் சொல்லப்பட்டது.
இந்தசூழலில் திருத்தப்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என தவெக சார்பில் கூறப்பட்டது.
அதன்படி இன்று பெரம்பூர் தொகுதியில் திருத்தப்பட்ட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. விஜய் இன்று புதுச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவரது சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா புதிய பிரமாண பத்திரத்தை இன்று தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
