தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 4) பிரச்சாரம் மேற்கொண்டார்.
வரும் ஏப்ரல் 9ஆம் தேதி புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று மூன்று இடங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதையொட்டி இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புதுச்சேரி கிளம்பிய விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழக்கம் போல் சிலர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.
ரசிகர் ஒருவர், விஜய் பயணித்த காரின் முன்பக்கம் பாய்ந்து கண்ணாடிக்கு முத்தமிட்ட வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தநிலையில் தட்டாஞ்சாவடியில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், “இங்க ஏற்கனவே இருக்கிற கூட்டணியைப் பத்தி கொஞ்சம் நீங்க தெரிஞ்சுக்கணும் இல்லையா? இந்த காங்கிரஸ் திமுக கூட்டணி இருக்கே, அதுல காங்கிரஸ் மட்டுமே அஞ்சாறு முறைக்கு மேல இங்க ஆட்சியில இருந்தாங்க. அந்த கூட்டணியில் இருந்த ஒரு தலைவர் மக்களை மட்டும் ஏமாத்தல, அவங்களோட தலைவரையே வெட்ட வெளிச்சமா எப்படி ஏமாத்துனார்ன்னு உலகமே பார்த்து கை தட்டி சிரிச்சது. அதுக்கப்புறம் அந்த கட்சி இங்க எந்த நிலைமையில இருக்குன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்.
திமுகவும் இரண்டு மூன்று முறைக்கு மேல ஆட்சியில இருந்தாங்க. இப்போ ரெண்டும் கூட்டணி…. பேருக்குதான் கூட்டணி, ஆனா திமுகவும் காங்கிரசும் கூட்டணின்னு சொல்லிக்கிட்டே சில தொகுதிகள்ல ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து நிக்கிறாங்க. தமிழ்நாட்டிலயும் திமுக காங்கிரஸ் குழப்ப அணியாதான் இருக்குது, புதுச்சேரியிலயும் அதே மாதிரி குழம்பிப் போன அணியாதான் இருக்குது.
அப்புறம் இன்னொரு கூட்டணி இருக்கே, அதான் என்ஆர் காங்கிரஸும் பாஜகவும் சேர்ந்த கூட்டணி. அது சேர்ந்த கூட்டணி எல்லாம் இல்ல, சேர்ந்திருக்க முடியாம சோர்ந்து போன கூட்டணி. கூட்டணி இருக்குன்னு ஒரு பக்கம், கூட்டணி இல்லைன்னு இன்னொரு பக்கம்… தினம் தினம் ஒரு நியூஸ் வந்துச்சு. இதுல நம்மள வச்சு அவங்களா ஒரு அரசியல் நடத்துனாங்க பார்த்திருப்பீங்க.
இங்க இன்னொரு அரசியல் வியாபாரமும் நடக்குது. தமிழ்நாட்டில எப்படி இரண்டு பேர் சீக்ரெட் அலையன்ஸ் வச்சிருக்காங்களோ அதே ஃபார்முலா தான் புதுச்சேரியிலயும். நம்மள பத்தி தப்பு தப்பா கதை சொன்னாங்கல்ல, இப்ப என்ன ஆச்சு? இப்ப நாம தனியா நிக்கிறப்பவே நாம யார் கூடவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒட்டி உறவாடவே இல்லைன்னு தெரிஞ்சிருச்சு. நாம அப்படிதாங்க, சும்மா தில்லா கெத்தா மக்களை நம்பி ‘வா பாத்துக்கலாம்’ன்ற கேட்டகிரி தான்.
நாம் மக்கள் பக்கம் நிக்கிறோம், நம்ம மக்கள் நம்ம பக்கம் நிக்கிறாங்க. அப்படி இல்லாம யாரு எப்போ யார் முதுகுல குத்துவாங்கன்னு பயத்தோடவே சுத்துனா அந்த கூட்டணி வொர்க் அவுட்டே ஆகாது. ஃபுல்லா வாஷ் அவுட் தான் ஆகும்.

இந்த புதுச்சேரி மக்களோட மாநில அந்தஸ்து கோரிக்கை எத்தனை வருஷமா இருக்குது? அதை காங்கிரஸ் கவர்மெண்ட்டும் கொண்டு வரல, பாஜக கவர்மெண்ட்டும் கொண்டு வரல. சுஷ்மா சுவராஜ் குழு ஒரு அறிக்கை கொடுத்தாங்க, அந்த அறிக்கையில புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கலாம்னு சொன்னாங்க. 20 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியும் கூட இதுவரைக்கும் ஏங்க ஒரு கவர்மெண்ட் கூட கண்டுக்கவே இல்லை?
இந்த ஒரு கேள்விக்கு இங்க இருக்கிற காங்கிரஸ் திமுக கூட்டணியோ இல்ல பாஜக கூட்டணியோ பதில் சொல்லுவாங்களா? நேரடியா கேட்கிறோம், மனசாட்சி இருந்தா மக்கள் மேல அக்கறை இருந்தா இந்த கோரிக்கை ஏன் இவ்வளவு நாளா இழுக்குறீங்க? இப்படி நாம கேட்டதும் இவங்க யாரு கிட்டயும் ஒழுங்கான பதில் இல்லாததால…. என்ன சொல்லுவாங்க தெரியுமா? ‘இந்த விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை’ன்னு சொல்லுவாங்க.
அப்படித்தான் நான் போன முறை பாண்டிச்சேரி வரும்போது அந்த ரேஷன் கடை பிரச்சனையை பத்தி நான் ஒன்னு சொல்லி இருந்தேன்.
அப்படியே ஒரு வாதத்துக்கு நான் தெரியாம சொன்னேன்னு கூட வச்சுக்கோங்க, ஆனா விகடன் வெப்சைட்ல ஒரு நியூஸ் போட்டாங்களே அதுல என்ன சொன்னாங்க? சுமார் 15 வருஷத்துக்கு முன்னாடியே ரேஷன் கடைகள்ல கோதுமை, மைதா, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களோட விநியோகம் நிறுத்தியாச்சு. சிகப்பு அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோனு அரிசி மட்டும் இலவசமா வழங்கப்பட்டு வந்துச்சு.
அதுவும் கடந்த 2016 ஆம் ஆண்டு கவர்னராக இருந்த கிரண்பேடி அரிசி கொள்முதல்ல மிகப்பெரிய முறைகேடு நடக்கிறதா சொல்லி அரிசிக்கு பதிலா பேங்க் அக்கவுண்ட்ல மக்களுக்கு பணம் போடுறதுக்கு உத்தரவு போட்டாங்க.
ரேஷன் கடைன்னு பிராப்பரா இருந்த இடத்துக்கு வருஷக்கணக்கா வாடகை தரல, அதனால அந்த பில்டிங் ஓனர்ஸ் கடையை பூட்டிட்டாங்க. அங்கங்க ஸ்கூல்ல வச்சுதான் அரிசி மட்டும் தர்றாங்க, அதுகூட இப்பதான் கொஞ்ச காலமா தர்றாங்க. அதைவிட இன்னொன்னும் சொல்லி இருந்தாங்க, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அஞ்சு வருஷமா சம்பளமும் தரலன்னு சொல்லி இருந்தாங்க.
விஜய் தெரியாம சொன்னாருன்னு மினிஸ்டர்ஸ்ல இருந்து கவர்மெண்ட்ல இருக்கறவங்க எல்லாரும் சொன்னாங்கல்ல, இப்போ விகடன் சொன்னதுக்கு என்ன அர்த்தம்னு அந்த மாண்புமிகு மனிதர்கள் கொஞ்சம் பதில் சொல்ல முடியுமா?
எலக்ஷன் என்றது என்னங்க? எக்ஸாம் பேப்பரா? அதுல கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதுவதற்கு அந்த எக்ஸாம் கூட கஷ்டம் இல்லைங்க. ஆனா இங்க எலக்ஷன்றது மக்கள் சம்பந்தப்பட்டது. மக்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லத்தான் தில்லு வேணும்.
இங்க ஏற்கனவே அரசியல்ல இருக்கிறவங்களுக்கு மக்களுக்கு பதில் சொல்லத் தெரியல. கூட்டணி அது இதுன்னு சொல்லி மக்களை ஏமாத்தத்தான் பார்க்கிறாங்க. அதனாலதான் மக்கள் சார்பா நாம வந்து கேட்டா உடனே கோவப்படுறாங்க. மக்களே, இந்த ஏமாத்து கூட்டணிகளுக்கும், பொருந்தா கூட்டணிகளுக்கும், ஓட்டை உடைசலாய் இருக்கிற கூட்டணிகளுக்கும் ஓட்டு போட்டு தயவு செஞ்சு ஏமாந்துறாதீங்க.
சிறுபான்மை சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வேணும். சிறுபான்மை வேஷம் போடுற கூட்டணியையும் நம்பாதீங்க, சிறுபான்மை மக்களுக்கு எதிரான கூட்டணியையும் நம்பாதீங்க. ரெண்டு பேருக்கும் ஓட்டு போடுறது வேஸ்ட்தான். புதுச்சேரி மக்களே, திமுக கூட்டணியில பேருக்கு இருக்கிற காங்கிரஸும் சரி, பாஜக கூட்டணியில நிர்பந்தத்தில சேர்ந்திருக்கிறவங்களுக்கும் சரி, ஒருத்தரை ஒருத்தர் முழுங்கி ஏப்பம் விடப் பார்க்கிற இந்த ரெண்டு கூட்டணியும் உங்களுக்கு ஒன்னும் செய்யவே மாட்டாங்க.
உங்களுக்கு நல்லாட்சி வேணும், நம்பிக்கையான ஆட்சி வேணும். அதனால இந்த தீயசக்தி திமுக இருக்கிற உடைஞ்சு ஓட்டையான காங்கிரஸ் கூட்டணியும் வேணாம், பிஜேபி இருக்கிற கூட்டணியும் வேணாம். மக்களுக்கு விரோதமான ஆளுங்களோட கூட்டணி அமைச்சா மக்கள் எப்படி ஏத்துப்பாங்க? அதை இங்க இருக்கிற அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தியே ஆகணும்.
அதனால மக்களுக்காக மக்களோட மக்களா நிக்கிற, நம்ம வெகுஜன மக்களை மையமாக வச்சிருக்கிற நம்ம தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு தயவு செஞ்சு ஓட்டு போடுங்க.
உங்க விஜய்க்கு ஓட்டு போடுறதா நினைச்சு ஓட்டு போடுங்க. உங்களோட தேவைகள் நிறைவேற நம்ம டிவிகே துணை நிற்கும். எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க. இந்த விஜய் உங்க விஜய் உங்களுக்கு துணையாய் இருப்பான். தமிழ்நாட்டில நம்ம டிவிகே ஆட்சிதான் அமையும், அதே மாதிரி புதுச்சேரியிலயும் நம்ம டிவிகே ஆட்சிதான் அமையணும்.
புதுச்சேரி மக்களோட தேவைகள் நிறைவேற, புதுச்சேரி மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சி அமைய உங்க சின்னம் நம்ம சின்னம் வெற்றி சின்னமான விசிலுக்கு தயவு செஞ்சு ஓட்டு போடுங்க. ஒருவிரல் புரட்சியான விசில் புரட்சியை புதுச்சேரியிலயும் உருவாக்குங்க” என்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து தவெக தேர்தல் பிரச்சாரபாடலை பாடிய விஜய் புதுச்சேரிக்கான வாக்குறுதிகளை அறிவித்தார்.
துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தைப் பெற சட்டப்படி 100% முயற்சிப்போம்.
ஆறு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்.
25,000 ரூபாய் மகப்பேறு உதவித் தொகையாக வழங்கப்படும்.
அனைத்து அரசு வேலைகளில் உள்ள காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
100% பயிர் காப்பீடு வழங்கப்படும்.
மீன் பிடிக்கச் செல்வோருக்கு லிட்டருக்கு ரூபாய் 20 டீசல் மானியம் வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமின்றி மின்சாரம் வழங்கப்படும்.
ஸ்டேட் யூனிவர்சிட்டி – புதுச்சேரி யூனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்சஸ் அண்ட் ஆர்ட்ஸ் உருவாக்கப்படும்.
காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் 25 சதவீதம் வளர்ச்சி செலவினங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார் விஜய்
