கரூர் சம்பவத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் சாலை விபத்துகளில் சிக்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 4) விஜய் புதுச்சேரியில் அறிவிக்கப்படாத ரோடுஷோ நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது காரில் ஏறி விழுந்து ரசிகர்க்ள ஆபத்தான முறையில் அவரை பார்க்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இன்று புதுச்சேரியில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 5ஆம் தேதி தவெக சார்பில், விஜய் 22 மையங்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பேச அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு மறுப்பு தெரிவித்தது.
புதுச்சேரியில் ஏப்ரல் 7ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், அனைத்து கட்சித் தலைவர்களும் அடுத்தடுத்து பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் அதிக நேரம் ஒதுக்க இயலாது எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் பிரச்சாரம் செய்வார் அறிவுறுத்தப்பட்டது.
நேற்று தவெக தரப்பில், விஜய் 3 இடங்களில் மட்டுமே பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் பிரச்சாரத்துக்கு வந்த விஜய்யின் காரை இளைஞர்கள் வழிமறித்து அவரைப் பார்க்க முயன்றனர். சிலர் கார் மீது ஏறி விழுந்ததால், அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. விஜய்யின் பாதுகாவலர்கள் இளைஞர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.
ரோடு ஷோ நடைபெற்றபோது, விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்த சில ரசிகர்கள் விபத்தில் சிக்கினர். இதில் சிலர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், விஜய்யைப் பார்க்க வந்த ஒரு பெண் மயங்கி விழுந்தார். அவர் ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கரூர் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விஜய் அனுமதி பெறாமல் ரோடு ஷோ நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
