இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தனது 2026 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவித்தது. ஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.12,224 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் 12.22% அதிகரித்து ரூ. 13,718 கோடியாக உயர்ந்துள்ளது. காலாண்டு அடிப்படையில் லாபம் 28.72% அதிகரித்துள்ளது.
வருவாய் 10% அதிகரிப்பு:
டிசிஎஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 64,479 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 9.64% அதிகரித்து ரூ. 70,698 கோடியாக உயர்ந்துள்ளது. காலாண்டு அடிப்படையில் இது 5.38% அதிகரித்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பல்வேறு வருவாய் பிரிவுகளில் உள்ள தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
டிசிஎஸ் ஈவுத்தொகை:
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு நிறுவனத்தின் வெளியீட்டு விலையில் ரூ.1 மதிப்புள்ள ஒவ்வொரு பங்குக்கும் ரூ.31 இறுதி ஈவுத்தொகையாக (Dividend) பரிந்துரைத்துள்ளது. இந்த ஈவுத்தொகை, நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, 31வது ஆண்டுப் பொதுக் கூட்டம் (AGM) முடிவடைந்த மூன்றாவது நாளில் வழங்கப்படும்.
இந்தக் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாப வரம்புகள் நிலையாக இருந்தன. ஒருமுறைச் செலவுகளைத் தவிர்த்து செயல்பாட்டு லாப வரம்பு 25.3 சதவீதமாக இருந்தது. இது முந்தைய காலாண்டை விட 10 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாகும். இந்தக் காலாண்டிற்கான நிகர லாப வரம்பு 19.4 சதவீதமாக இருந்தது.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி:
செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வணிகங்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. AI தீர்வுகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், நான்காம் காலாண்டில் AI மூலம் கிடைக்கும் ஆண்டு வருவாய் 2.3 பில்லியன் டாலரைத் தாண்டியது. இந்தக் காலாண்டில் OpenAI, AMD, NVIDIA, Cisco மற்றும் ServiceNow போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஒத்துழைப்புகள் உட்பட AI சார்ந்த திறன்கள் மற்றும் கூட்டாண்மைகளில் அந்நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்தது. இதன் மூலம், நிறுவன AI மற்றும் டிஜிட்டல் உருமாற்றத் துறையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது
