தமிழக தேர்தல் பண்பாடு – தேர்தல் ஆணைய செயல்பாடுகள் ஓர் பரிசீலனை!

Published On:

| By Kavi

நா.மணி

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல் துறை தலைவர் (பொறுப்பு) வெங்கட்ராமன், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டுவிட்டனர்.

ADVERTISEMENT

மாற்றம் செய்வதற்கான ஒரே காரணம் – அவர்கள் இருந்தால் தேர்தல் நியாயமாக, நேர்மையாக, சுதந்திரமாக நடைபெறாது என்பதே. எனவே அவர்களை மாற்றுகிறோம் என்பதுதான் பொருள்.

இதுபற்றி 7/4/2026 அன்று மின்னம்பலத்தில் தேர்தல் ஆணையம்: அதிகாரமா? பொறுப்பா? என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் விரிவாகப் பார்த்தோம்.

ADVERTISEMENT

இன்றைய கட்டுரையில் தமிழ்நாட்டின் தேர்தல் பண்பாடும் தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான செயல்களையும் பரிசீலனை செய்வோம்.

தமிழக தேர்தல் கள யதார்த்தம்

ADVERTISEMENT

தீவிர வாக்காளர் சீர்திருத்தப் பணிகள் முடிந்து, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு வாக்குச் சாவடி நிலை அலுவலரிடமும் உள்ளது. வாக்குச் சாவடி முகவர்களிடமும் உள்ளது.

விழிப்புணர்வு உள்ள வாக்காளர்கள் பலர் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா இல்லையா என்று சுயமாக பார்த்து தெரிந்து கொண்டுள்ளனர். பார்க்காதவர்கள், பார்த்தவர்கள் என எல்லோரையும் சேர்த்து, வாக்குச் சாவடி முகவர்கள் யாருக்கு ஓட்டு உள்ளது என்று பகுப்பாய்வு செய்து வைத்திருப்பார்கள்.

எந்தெந்த ஊர், வீடு, வாக்காளர் யார் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற அனுமானங்களும் அவர்களிடம் தெளிவாக இருக்கும். எல்லாவற்றையும் அவர்களால் முடிந்தவரை துல்லியமாக கணக்கிட்டு வைத்திருப்பார்கள். பெரும்பாலான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து இருப்பார்கள். மீதமுள்ள வாக்குகளைப் பெறவே தேர்தல் பிரச்சாரம் பல வடிவங்களில் நடைபெற்று வருகிறது.

தமிழக தேர்தல் பண்பாடு

தேர்தல் நாளன்று எல்லோருக்கும் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் வழங்கப்படும். மக்கள் சென்று வரிசையில் வாக்களிக்கின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து அரசு ஊழியர்களும் தேர்தல் ஆணைய ஊழியர்களாகவே செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேர்தல் நடைபெறும் போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசு ஊழியர்கள் தேர்தல் ஆணைய ஊழியர்களாகவே நடந்து கொள்கிறார்கள். இதுவும் தமிழ்நாட்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்று. அதேபோல் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் பெரிய அளவில் அரசு ஊழியர்களை தொந்தரவு செய்வதில்லை. எந்த அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் சுமூகமாக நடைபெறுகிறது.

தமிழ் நாட்டில் தேர்தல் ஓர் திருவிழா

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத காலத்தில், ஒருவர் வாக்கை மற்றொருவர் மாற்றிப் போடுவது, இறந்தவரின் ஓட்டைப் பதிவு செய்வது போன்ற பல சிக்கல்கள் இருந்தன. அவை தீர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் வாக்குப்பதிவு சீராக, அமைதியாக நடைபெறுகிறது. மதியம் மூன்று மணிக்குப் பிறகு ஓரிருவர் குடித்து விட்டு வரலாம்; அவர்களை காவலர்கள் கவனிக்கிறார்கள்.

பல வாக்குச் சாவடிகளில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆகியோரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பொருள் என்ன? பார்வை மாற்றுத் திறனாளி ஒருவருக்கு சாலையை கடக்க உதவி செய்வது போல் தமிழக வாக்குச் சாவடிகளில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு உள்ளது என்று பொருள். விதிவிலக்குகள் தனி. தேர்தல் வாக்களித்தல் என்ற ஜனநாயகத் திருவிழாவை தமிழ்நாட்டு மக்கள் உரிய முறையில் கொண்டாடுகின்றனர்.

தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்கத் தெரியாதவர்கள் வரும்போது, அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது பலர் “சின்னம்” என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்துவதில்லை. “உங்களுக்கு பிடித்த ஒரு பொம்மைக்கு நேர் உள்ள பட்டனை அழுத்துங்கள்” என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். வாக்குச் சாவடியில் பணியில் இருக்கும் தொடக்கநிலை அலுவலர்களே இவ்வளவு கவனமாக இருக்கிறார்கள்.

கிராமங்களில் தேர்தல் பணி ஒத்துழைப்பு

இன்று பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை வசதி, டைல்ஸ் போட்ட தரை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. எதுவும் இல்லாத காலத்தில் கிராமங்களில் பணிக்குச் செல்லும் பெண்களை தங்க, குளிக்க உள்ளூர் மக்கள் அழைத்துச் செல்வார்கள். நாள் முழுவதும் கவனித்துக் கொள்வார்கள். ஆனால் பிரதிபலனாக எதையும் எதிர்பார்த்ததில்லை; கேட்டதில்லை. இது நமது சிறந்த பண்புகள். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் திரும்பிப் பார்க்க வைக்கிறது; சொல்ல வைக்கிறது.

தேர்தல் ஆணையம் என்ற அமைப்பிலிருந்து யாரோ வந்து மிரட்டி, உருட்டி, மாவட்ட ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர் வரை பணியிடை மாற்றம் செய்து மிரட்டல் விட வேண்டிய அவசியம் இல்லை.

தேர்தல் ஆணையம் எதை விதைக்கிறது?

தேர்தலை, தேர்தல் ஆணையமே நடத்துகிறது. அதன் கட்டுப்பாட்டில் தான் அனைத்து ஊழியர்களும் செயல்படுகிறார்கள். அவர்கள் நடக்கவில்லை என்றால், எந்த உத்தரவுகளை அமலாக்கம் செய்யவில்லை என்பதை வெளிப்படையாக கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதுவும் சொல்லாமல் பணியிடை மாற்றம் செய்தால் அதற்கு என்ன பொருள்? பொதுமக்கள் மத்தியில் “இவர் தவறு செய்திருக்கிறார்”, “இங்குள்ள அரசு தேர்தலை நேர்மையாக நடத்த விடாமல் செய்கிறது”, “இந்த அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு அனுதாபிகள்” என்ற எண்ணங்களை உருவாக்குகிறது. ஒன்னுமே இல்லாமல் இவ்வளவு பெரிய அதிகாரியை மாற்றுவார்களா என்ற சந்தேகத்தையும் உருவாக்குகிறது.

மேலும் தேர்தல் ஆணையம் வானளாவிய அதிகாரம் கொண்டது; அது நினைத்தால் எதையும் செய்யலாம் என்ற பிம்பத்தையும் தோற்றுவிக்கிறது. மொத்தத்தில் இத்தகைய மாற்றங்கள் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகின்றன. இது மிகவும் ஆபத்தானது.

பொதுத் தேர்தல்களை நியாயமாக, நேர்மையாக, சுதந்திரமாக நடத்தவே இந்திய அரசியல் சாசனம் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது. அது கேள்வி கேட்க முடியாத அதிகாரம் அல்ல; நெறிப்படுத்த முடியாத அதிகாரமும் அல்ல. அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் எழும்போது, அதற்கு தேர்தல் ஆணையம் தானாகவே முன்வந்து பதிலளிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் நாடு எதிர்பார்ப்பது என்ன?

1978 ஆம் ஆண்டு மொகிந்தர் சிங் கில் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கீழ்க்காணும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் விரைவாகவும் தெளிவாகவும் பதிலளிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் இல்லை. காரணம் கூறாமல், சட்டத்தின் துணை இல்லாமல் “சுதந்திரமான தேர்தல்” என்ற பெயரில் எந்த செயலையும் செய்யக்கூடாது.

அரசியல் சாசனத்தின் 324வது பிரிவு, எங்கு சட்ட விதிமுறைகள் இல்லையோ அங்கு மட்டுமே தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கிறது. ஆனால் இந்திய குடிமைப் பணி அதிகாரிகளின் பணிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே “அகில இந்திய குடிமைப் பணி சட்டம்” மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வகிக்கும் விதிமுறைகள் உள்ளன.

தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்த நடவடிக்கையும் இவற்றுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். எனவே அந்த சட்டங்களையும் விதிகளையும் கருத்தில் கொள்ளாமல், அரசியல் சாசனத்தின் 324வது பிரிவை தனித்து அமலாக்கம் செய்ய முடியாது.

தேர்தல் ஆணையம் ஏற்கனவே உள்ள சட்டங்களை புறக்கணித்து எப்படி செயல்பட முடியும் என்பதை சட்டரீதியாக விளக்க வேண்டும். மாநில அரசு ஊழியர்களை நிர்வகிக்க மாநில அரசின் நிர்வாக விதிமுறைகள் உள்ளன. திடீர் பணியிடை மாற்றங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவது சரியா என்ற கேள்வியும் எழுகிறது.

அரசியல் சாசனத்தின் 324வது பிரிவு கட்டுப்படுத்த முடியாத அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத, ஆதாரம் இல்லாத நடவடிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்கலாம்; நீதிமன்றத்தை அணுகலாம்.

தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு செயலுக்கும் சட்டப் பின்புலம் அவசியம்

“தேர்தலை நியாயமாக நடத்துகிறோம்” என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தன்னிச்சையாக இயற்கை நீதிக்கு எதிராக செல்லக்கூடாது.
தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் தவறாக நடந்துள்ளனர் என்ற ஆதாரம் இன்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது. “தவறு நடக்க வாய்ப்பு உள்ளது” என்ற அனுமானம் மட்டும் நடவடிக்கைக்கு போதுமானதல்ல. சந்தேகத்தை நிரூபணமாகக் கொள்ள முடியாது.

பணிமாற்ற அதிகாரத்தை அளவுக்கு மீறி பயன்படுத்தும் போது, அந்த மாநிலத்தின் குடிமைப் பணி அதிகாரிகள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். நன்றாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு அச்சத்தை உருவாக்குவது சரியல்ல. நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு!


பேராசிரியர் மேனாள் தலைவர் தமிழ் நாடு அறிவியல்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share