சோபியா குரேஷி குறித்து பேச்சு : அமைச்சரை விளாசிய உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Kavi

Talk about Sophia Qureshi

ராணுவ அதிகாரி சோபியா குரேஷி  குறித்து பேசிய மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Talk about Sophia Qureshi

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரி சோபியா குரேஷி  செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். 

இந்தநிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர்  விஜய் ஷா,  “பாகிஸ்தானுக்கு அவர்களது சகோதரியை வைத்தே பதிலடி கொடுத்திருக்கிறோம்” என்று குரேஷியின் இஸ்லாமிய மதத்தை ஒப்பீடு செய்து பேசியிருந்தார். 

இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் மத்திய பிரதேச காவல் துறையினர் சில தகவல்களை விட்டுவிட்டு ஏனோ தானோவென எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். 

இதற்கும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 

இந்தநிலையில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து விஜய் ஷா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  Talk about Sophia Qureshi

இந்த மனு இன்று (மே 19))  நீதிபதிகள் சூர்ய காந்த், கோடீஸ்வர் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது விஜய் ஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணீந்தர் சிங், அமைச்சர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார். பொதுவெளியில் அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கிறார் என்று வாதிட்டார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ”என்ன மாதிரியான மன்னிப்பு? எப்படி கேட்டார்? சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க இதுபோன்று கேட்கிறார்… எல்லாம் முதலை கண்ணீர். உங்கள் மன்னிப்பு எங்களுக்குத் தேவையில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். 

உங்கள் மன்னிப்பை ஏற்க  நாங்கள் தயாராக இல்லை. அதை நிராகரிக்கிறோம்.  நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. மக்கள் பிரதிநிதி. பேசும் போது யோசிக்க வேண்டாமா? 

ஒரு பெண் ராணுவ அதிகாரி குறித்து மிகவும் மோசமான முறையில் உங்களது பேச்சு இருந்திருக்கிறது. நீங்கள் வழக்கை சந்தித்தே தீர வேண்டும்” என்று காட்டமாக கூறினர். 

மேலும், அமைச்சரின் பேச்சு குறித்து விரிவாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட சிறப்பு குழுவை நாளை காலை 10 மணிக்குள் மத்திய பிரதேச டிஜிபி அமைக்க வேண்டும்.  இந்த குழுவுக்கு ஒரு ஐஜி தலைமை தாங்க வேண்டும்.  மற்ற இரண்டு உறுப்பினர்களும் எஸ்.பி அல்லது அதற்கு மேல் பதவியில் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.  இந்த அதிகாரிகள் எல்லாம் வேறு மாநில அதிகாரிகளாக இருக்க வேண்டும். 

இந்தக் குழு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மே 28ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர். 

மேலும் எப்.ஐ.ஆர் சரியாக பதிவு செய்யாததற்கு மத்திய பிரதேச அரசுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். ஒரு மாநில அரசு என்றால் அது மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என்று அதிருப்தி தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.  Talk about Sophia Qureshi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share