ஆளுநருக்கு 12 கேள்விகளை எழுப்பி, ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Supreme Court asks questions
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ரவி காலதாமதம் செய்வதாகவும், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனங்களில் தலையிடுவதாகவும் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ஜேபி பரிதிவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
விசாரணையின் போது, ஆளுநர் தரப்புக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில், ஆளுநர் தரப்புக்கு 12 கேள்விகளை எழுப்பி, ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமாக பதில்மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1. மாநில சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது. முதலாவது நடவடிக்கையில் குடியரசு தலைவருக்கு அனுப்பாத ஆளுநர், மீண்டும் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பும்போது குடியரசு தலைவருக்கு அனுப்ப அதிகாரம் இருக்கிறதா?
2. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் போது, மாநில அரசின் ஆலோசனையின் படி மட்டும் தான் ஆளுநர் செயல்படக்கூடியவரா? அல்லது ஆளுநர் தன்னிச்சையாக செயல்படலாமா?
3. மத்திய அரசு சட்டத்துடன் முரண்படும் மசோதாவை மட்டும் தான் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியுமா? அல்லது அனைத்து மசோதாக்களையும் அனுப்பலாமா?
4. 200-ஆவது விதியில் இடம்பெற்றுள்ள ‘அறிவிக்கலாம்’ என்ற சொல், குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா?
5. ஆளுநருக்கான தனிப்பட்ட அதிகாரம் (பாக்கெட் வீட்டோ) என்றால் என்ன? அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 111, 200, 201 பிரிவுகளில் இது உறுதிசெய்யப்பட்டிருக்கிறதா?
6. தனது ஒப்புதலுக்கு வரும் மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சட்டமன்றத்திற்கு ஆளுநர் அனுப்புகிறார். மீண்டும் அந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டதும் அதை நிறுத்தி வைக்கிறார். தனது முதல் நடவடிக்கையிலேயே ஆளுநருக்கான ஒப்புதல் வழங்கும் அதிகாரம் முடிந்துவிடுகிறதா? அல்லது தனக்கு அனுப்பப்படும் இரண்டு மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்க கடமைப்பட்டவரா?

7. அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் நான்கு முடிவுகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?
8. மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட கடமைப்பட்டுள்ள குடியரசு தலைவர், மாநில பேரவையின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கட்டாயமற்றவராகிறாரா?
9. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் பேரவைக்கு அனுப்ப ஆளுநருக்கு குடியரசு தலைவர் ஒருவேளை உத்தரவிட்டால், அதே மசோதா பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் மறு பரிசீலனைக்கு வந்தால் அவர் எப்படி செயல்படுவார்?
10. மசோதாவை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை சட்டமன்றத்திற்கு வழங்காமல், அதை நிறுத்திவைப்பதாக ஆளுநர் அறிவித்தால் சட்டமன்றம் அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்து ஆளுநருக்கு அனுப்ப முடியாது என்று கருதலாமா?
11. அரசமைப்பின் 200-ஆவது விதியை இரு பகுதிகளாக கருதி, முதல் பகுதியில் மசோதா மீது முடிவெடுப்பது ஆளுநரின் சுய விருப்பத்துடன் உட்பட்டதாக கருதலாமா?
12. தனது ஒப்புதலுக்கு வரும் மசோதாக்களில் எதை குடியரசு தலைவருக்கு அனுப்புவது என தாமாகவே தேர்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா?
என 12 கேள்விகளுக்கு ஒருவாரத்திற்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு ஆளுநர் பதிலளித்ததும், தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Supreme Court asks questions
