கோடைக்காலத்தில் அக்குள் கருமைப் பிரச்சனை பலருக்கும் ஏற்படலாம். அக்குள் கருமையை நீக்கும் வீட்டு வைத்தியக் குறிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அக்குள் கருமை என்பது பலரையும் வாட்டும் ஒரு பிரச்சனையாகவே உள்ளது. சிலர் தனிப்பட்ட முறையில் சுகாதாரமாக இருந்தாலும் கூட அக்குளில் கருமை ஏற்படுகிறது. இதனால் உங்களுக்குப் பிடித்தமான கை இல்லாத ஆடைகளை அணிவதையோ அல்லது பொது இடங்களில் நம்பிக்கையுடன் நடமாடுவதையோ தடுக்கிறது. அக்குள் கருமையைக் குறைக்க சந்தையில் பல வகையான கிரீம்களும் சிகிச்சைகளும் உள்ளன. ஆனால், அவற்றில் எதன் தேவையுமின்றி , அக்குள் சருமத்தை (Underarms darkness) மென்மையாகவும் வெண்மையாகவும் மாற்ற உதவும் வீட்டு வைத்தியக் குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
படிகாரம் + ரோஸ் வாட்டர்
குளித்த பிறகு உடலை சுத்தமாக துடைத்துவிட்டு ஈரமான படிகாரக் கல்லை அக்குள் பகுதியில் மெதுவாகத் தேய்க்க வேண்டும். படிகாரத்தின் பாக்டீரியா (Padikaram Antibacterial) எதிர்ப்புப் பண்புகள், வியர்வை துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாக்களைக் கொல்கின்றன. அதுமட்டுமின்றி, அதில் உள்ள துவர்ப்புப் பண்புகள் சருமத்தை இறுக்கி, சருமத் துளைகளை மூட உதவுகின்றன. இது வியர்வை உற்பத்தியைக் குறைப்பது மட்டுமல்லாமல், இறந்த சரும செல்களை அகற்றவும், அக்குள் பகுதியில் உள்ள கரும்புள்ளிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
இதேபோல ஒரு தேக்கரண்டி படிகாரப் பொடியை எடுத்து, அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டரைக் கலந்து மென்மையான பசையாக தயாரிக்க வேண்டும். இந்தப் பசையை அக்குள் பகுதியில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்வதன் மூலமும் அக்குள் பகுதியில் உள்ள கருப்பை குறைக்கலாம்.
கற்றாழை ஜெல் + படிகாரம்
ஒரு டீஸ்பூன் படிகாரப் பொடியை எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லைச் சேர்க்க வேண்டும். நன்கு கலந்த கற்றாழை ஜெல் மற்றும் படிகாரக் கலவையை அக்குள் பகுதியில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் இதைச் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். கற்றாழையில் (Aloe vera gel reduces dark underarms) உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகின்றன. படிகாரத்தில் உள்ள கிருமி நாசினி பண்புகள் கற்றாழை ஜெல்லுடன் சேர்ந்து சருமத்தை சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கின்றன.
எலுமிச்சை சாறு + மஞ்சள்
ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பசைபோல் எடுத்துக்கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன் இந்தப் பசையை அக்குள் பகுதியில் மெதுவாகத் தடவி, சுமார் பத்து நிமிடங்கள் காய விடவும். அதன் பிறகு, குளிர்ந்த நீரில் கழுவலாம். எலுமிச்சை சாற்றில் இயற்கையான வெளுக்கும் (Lemon benefits for skin) பண்புகள் உள்ளன. இது துர்நாற்றம் மற்றும் சருமம் கருமையாவதைக் குறைக்க மிகவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, எலுமிச்சை மற்றும் மஞ்சள் ஆகியவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகின்றன.
உருளைகிழங்கு சாறு
அக்குள் கருமைக்கு உருளைக்கிழங்கு சாறு (Potato juice) ஒரு நல்ல தீர்வாகும். உருளைக்கிழங்கில் கேட்டகோலேஸ் என்ற நொதி, ஒரு இயற்கையான வெளுக்கும் காரணியாகச் செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள கருப்புப் புள்ளிகளையும் நிறமிகளையும் படிப்படியாக நீக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. உருளைக் கிழங்கு சாற்றை அக்குளில் மெதுவாகத் தேய்த்து, சுமார் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழு வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கடலை மாவு + தயிர்
கடலை மாவு மற்றும் தயிர் கலவையானது, சருமப் பராமரிப்பிற்கு ஒரு இயற்கையான பேக்காகவும், இயற்கையான சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. இது சருமத்தில் படிந்துள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை திறம்பட நீக்குகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் (Lactic acid) ஒரு இயற்கையான வெளுப்பாக்கும் காரணியாகச் செயல்பட்டு, கரும்புள்ளிகளைக் குறைக்கிறது. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு கடலை மாவு மற்றும் தயிர் எடுத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு பசை போல ஆக்க வேண்டும். பிறகு அக்குள் பகுதியை வியர்க்காமல் சுத்தம் செய்து, இந்தக் கலவையை நன்றாகப் பூசி, சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உலர விட்டு, பின்னர் கழுவி விடவும். சில நாட்களிலேயே நல்ல ரிசல்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
