தமிழகத்தில் திமுக இருக்கும் வரை மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 27ஆம் தேதி (நான்காம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, சசிகலா அணி மற்றும் டாக்டர் ராமதாஸ் அணி என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடந்த மார்ச் 28ஆம் தேதி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மறுநாள் (மார்ச் 29) திமுகவின் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார்.
மார்ச் 30ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு, அப்பகுதியில் திறந்த வேனில் ரோடு ஷோ செய்து மக்களிடம் ஆதரவு திரட்டினார். மறுநாள் (மார்ச் 31) திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தொடர்ச்சியாக பல்வேறு கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள முதல்வர், நேற்று காலை விருதுநகரிலும் மாலை மதுரை திருமங்கலத்திலும் பிரச்சாரம் செய்தார்.இரண்டு கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள முதல்வர், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 65 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியுள்ளார்.
மூன்றாவது கட்ட பிரச்சாரத்தை இன்று மாலை 5 மணி அளவில் புதுச்சேரியில் தொடங்க உள்ளார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ள மும்மொழிக் கொள்கை குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை அது நடைமுறைப்படுத்தப்படாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, “வெற்றி வாய்ப்பு சூப்பராக இருக்கிறது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று உற்சாகமாகக் கூறினார்.
