2019 தேர்தலின்போது ‘கலைஞரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள், இது பற்றி அரசு விசாரிக்கும்’ என்று வாய்க்கொழுப்போடு பேசியவர்தான் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை (ஏப்ரல் 4) நாகர்கோயிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். மேலும் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இல்லத்தரசிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவரித்து பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், “நேற்று நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் குறித்து பழனிசாமி பேசிய தரம் கெட்ட பேச்சை கண்டித்து நான் பேசுகிறேன். அதைக் கேட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சிக்காரர்கள் போனிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது ஆதரவை என்னிடம் கொட்டித் தீர்த்தார்கள். ‘எங்கள் மனதில் இருந்ததைப் பேசிவிட்டீர்கள். எங்கள் மனதில் என்னென்ன இருந்ததோ அதையெல்லாம் பேசிவிட்டீர்கள்’ என்று சொன்னார்கள்” என்றார்.
மேலும், “மறைந்த தலைவர்களைப் பற்றி இப்படித் தவறாகப் பேசுவது அரசியல் மாண்பு அல்ல. அம்மையார் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரை எதிர்த்தும், அவரது ஆட்சியில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியும் நாம் நேரடியாக அரசியல் செய்திருக்கிறோம். ஆனால் அவர் மறைந்த பிறகு உச்சபட்ச அரசியல் நாகரீகத்தை நாம் இன்றும் கடைப்பிடித்து வருகிறோம்.
திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்கென்று யோகம் அடித்த மாதிரி பழனிசாமியிடம் இந்த நாகரீகத்தை எதிர்பார்க்க முடியுமா? அவர் இப்படிப் பேசுவது இது முதல் முறை அல்ல. 2019 தேர்தலின்போது ‘கலைஞரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள், இது பற்றி அரசு விசாரிக்கும்’ என்று வாய்க்கொழுப்போடு பேசினார்.
அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? மக்களால் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகும் மேலும் மேலும் தோல்விகளைச் சந்தித்தாலும், அதிலிருந்து அவர் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. 2021, 2024, 2026 எனப் பழைய ரெக்கார்டு போலவே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தமிழக மக்கள் கொள்கையைப் பேசுவதைத்தான் ஆதரிப்பார்கள். வாய்க்கொழுப்போடு பேசினால் அதை வரவேற்க மாட்டார்கள். பழனிசாமியிடம் சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லை; மக்கள் பட்ட வேதனைகள்தான் உள்ளன. பாஜகவிற்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூட துணிச்சல் இல்லை” என்று காட்டமாக விமர்சித்தார்.
மேலும், நாகர்கோயில் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான மகேஷ், ஆஸ்டின், ராஜேஷ் குமார், தாரகை கட்பெத், பிரவீன், செல்வசுவாமி ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.
