டாக்டரேட் வாங்கும் அளவுக்கு துரோகம் – எடப்பாடியை விளாசிய முதல்வர்

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

தமிழுக்கும் – தமிழினத்துக்கும் – தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பா.ஜ.க.வின் வழக்கம்! அதற்குத் துணை போவதுதான் அ.தி.மு.க.வின் பழக்கம்! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் இன்று (ஏப்ரல் 11) தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

ADVERTISEMENT

மேலும் திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் புதிதாக அறிவிக்ககப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் “பா.ஜ.க.வின் கிளைக் கழகச் செயலாளராக இருக்கும் பழனிசாமியால் சாதனைகளை சொல்லி, வாக்கு கேட்க முடியுமா?

எங்கேயாவது, அவர் சாதனைகளை சொல்லி, பார்த்திருக்கிறீர்களா? எங்கேயாவது, கொள்கைகளைப் பற்றி பேசி பார்த்திருக்கிறீர்களா? எங்கேயாவது, மாநில உரிமைகளுக்கு பழனிசாமி குரல் கொடுத்து பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள்!

ADVERTISEMENT

ஏன் என்றால், பாதம்தாங்கி பழனிசாமியிடம் கொள்கைகளும் இல்லை; சாதனைகளும் இல்லை! அதனால்தான், சாக்கடைக்கு சமமான சொற்களையும், அவதூறுகளையும் பேசி, அவர் ஒரு தரமற்றவர் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

N.D.A. எனும் பேரிடரை, தமிழ்நாட்டுக்குள் பின்வாசல் வழியாக கொண்டு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதன்மை அடிமைதான், பழனிசாமி! அவர் பழனிசாமி இல்லை. ஆமாம்சாமி! அடிமைசாமி!

ADVERTISEMENT

அ.தி.மு.க. எந்தக் கூட்டணியில் அடிமை சாசனம் எழுதி கொடுத்து சேர்ந்திருக்கிறது? அன்னைத் தமிழுக்கும் – தமிழினத்துக்கும் – தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்யும் N.D.A. கூட்டணியில் சேர்ந்திருக்கிறது! அந்தக் கூட்டணி டெல்லியில் வைத்து முடிவு செய்யப்பட்ட கூட்டணி! அனைவருக்கும் தெரியும். ஊழல்வாதிகளும் – தேர்ந்த துரோகிகளும், காவி கும்பலை தோளில் சுமந்து கொண்டு வருகிறார்கள்.

நேற்றுகூட, பா.ஜ.க.வில் இருக்கும் ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே என்ன சொல்லியிருக்கிறார்? தமிழ்நாட்டில் N.D.A. கூட்டணி ஆட்சியை அமைப்போம் என்று பேசியிருக்கிறார். அடிமைசாமியான பழனிசாமி இதற்கு ஏதாவது பதில் சொன்னாரா? என்ன சொல்வார்? ஒன்றும் சொல்லவில்லை…

தமிழ்நாட்டுக்கு வரும் பா.ஜ.க. அமைச்சர்கள் எல்லாம் என்னவெல்லாம் பேசிவிட்டு போகிறார்கள் என்று பத்திரிகைகளில், டி.வி.யில், செய்திகளில் வருகிறது. அனைத்தையும் பார்க்கிறீர்கள்…

அமைச்சராக இருக்கக்கூடிய பியுஷ் கோயல் – அமைச்சராக இருக்கக்கூடிய தர்மேந்திர பிரதான் என்று இங்கு வருபவர்கள் எல்லாம், இந்தித் திணிப்புக்கு ஆதரவாக மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து அடிமைசாமி ஏதாவது குரல் கொடுத்திருக்கிறாரா?

ஒன்றிய கல்வி அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான் அவர்களின் வேலை என்ன? கல்வியை வளர்ப்பதில்லை; கல்வியை காவிமயமாக்கினார்! இந்தியைத் திணிக்க மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசிவிட்டு செல்கிறார். இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நம்முடைய குழந்தைகளின் படிப்புக்கு கொடுக்க வேண்டிய, இரண்டாயிரம் கோடி ரூபாய் கல்வி நிதியை கொடுக்காமல் தடுப்பது! இதெல்லாம்தான், அவரது வேலை.

மும்மொழித் திட்டத்தை செயல்படுத்துங்கள், இரண்டாயிரம் கோடியை தருகிறோம் என்று அமைச்சர் பிரதான் சொன்னார். இரண்டாயிரம் கோடி இல்லை; பத்தாயிரம் கோடியே கொடுத்தாலும், இந்தியைத் திணிக்க அனுமதிக்க மாட்டேன்… எங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவையும், ஆசிரியர்களுக்கான சம்பளத்தையும் நானே கொடுத்துக் கொள்கிறேன் என்று உறுதியாக சொன்னவன் தான், இங்கே உங்கள் முன்னால் நிற்கின்ற ஸ்டாலின்!

இதுவே அடிமைசாமியாக இருந்தால், எதிர்த்து குரல் கொடுத்திருப்பாரா? இதெல்லாம் R.S.S. அமைப்பின் நீண்ட கால செயல்திட்டங்களின் ஒரு பகுதி.

எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்றால், நம்முடைய குழந்தைகள் கல்வி நிலையங்களைவிட்டு வெளியேற வேண்டும்; அறிவியல்பூர்வமாக சிந்திப்பதை நிறுத்த வேண்டும்; வாட்ஸ்அப் வதந்திகளையும், பிற்போக்குத் தனங்களையும் நம்ப வேண்டும்; அப்போதுதான் அந்தக் காலம் போன்றே நாம் முன்னேறாமல் முடங்கிக் கிடப்போம்; ஒரு சிலர் மட்டும் வாய்ப்புகளை தட்டிப் பறித்து, முன்னேறுவார்கள். இதுதான், அவர்களின் திட்டம்; அவர்களின் எண்ணம். இதற்கான செயல்திட்டங்களுக்கு எல்லாம் ஆமாம்சாமி போடும் முரட்டு அடிமையாக வாய்த்திருப்பவர்தான், இந்த அடிமைசாமி! அடுத்தடுத்த துரோகங்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்தான், N.D.A. கூட்டணி!

பழனிசாமிக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டு மேல் அக்கறை இருந்தால், தர்மேந்திர பிரதான் தொடங்கி, அமித் ஷா – மோடி வரைக்கும் மேடையில் உட்கார வைத்து, “இது தமிழ்நாடு! இங்கு பேரறிஞர் அண்ணா வகுத்துக் கொடுத்த இருமொழிக் கொள்கை மட்டும்தான் இருக்கும்” என்று ஆணித்தரமாக பேச முடியுமா அவரால்? ஒரு அடிமையால் ஓனரை எதிர்த்து பேச முடியாது.

பிரதமர் மோடி அவர்களைப் பார்த்து, “தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் – ‘வணக்கம்’, ‘நன்றி’ என்று மட்டும் சொல்லி, தமிழில் பேச முடியவில்லை என்று வருத்தப்படுவதாக” சொல்கிறீர்களே, பிறகு ஏன், தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிகமாக நிதி வழங்குகிறீர்கள் என்று கேள்வி கேட்பாரா, இந்த அடிமை பழனிசாமி?

அமித்ஷா அவர்களைப் பார்த்து, “சமஸ்கிருதம்தான், அனைத்துக்கும் மூலமொழி” என்று நீங்கள் சொல்வது தவறு என்று பழனிசாமியால் வாதிட முடியுமா? அதற்கான முதுகெலும்பு பழனிசாமிக்கு இருக்கிறதா? அவரை சும்மா ஒன்றும் ஆமாம்சாமி, அடிமைசாமி என்று சொல்லவில்லை. எதற்கெல்லாம் ஆமாம்சாமி போடுகிறார்?

குடியுரிமைத் திருத்தச் சட்டம்! அவர் நினைத்திருந்தால் அவர்கள் எம்.பி.க்கள் ஆதரிக்காமல், அதை தடுத்திருக்க முடியும். ஆனால், ஆமாம்சாமி போட்டு இசுலாமியர்களுக்கு துரோகம் செய்தார்.

அதேபோன்று, வக்பு திருத்தச் சட்டத்தையும் ஆதரித்து, சிறுபான்மையினருக்கு துரோகம் செய்தார் அடிமைசாமி.

அடுத்து, கிறிஸ்தவர்களுக்கு எதிராக F.C.R.A. சட்டம் கொண்டுவரப் போகிறார்கள். கூட்டணியில் இருக்கும் பழனிசாமி, தேர்தலுக்காகவாவது அதை எதிர்த்து பேசியிருக்கிறாரா?

அடுத்து, நீட் தேர்வை பற்றி பேசுகிறார்… நீட் தீர்மானத்தை ஒன்றிய அரசுதான் நிறுத்தி வைத்திருக்கிறது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதையே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலமாக மறைத்து வைத்தவர்தான் பழனிசாமி. அந்த மாதிரி துரோகம் எல்லாம் யாரும் பண்ணவில்லை!

உடனே, நாங்கள் என்ன பண்ணோம் என்று கேட்பார்… நான் ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறேன்… நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருந்திருக்காது. அதற்கான உறுதியை பிரதமர் வேட்பாளராக இருந்த அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்களே பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

ஆனால், கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மோடி அவர்களைப் பார்த்து, “தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு தாருங்கள்” என்று அடிமைசாமியால் கேட்க முடியுமா?

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டப்பூர்வமாக நாங்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். கொள்கையை விற்று பிழைக்கும் அடிமைசாமி கூட்டத்துக்கு சுயமரியாதை உணர்வும் இருக்காது; மாநில உரிமைகளும் புரியாது!

இப்போதுகூட, நாடு முழுவதும் மக்கள், “மோடி ஜி, Where is L.P.G.” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல ஹோட்டல்களை இழுத்து மூடிவிட்டார்கள். பல ஹோட்டல்களில் மெனுவை குறைத்துவிட்டார்கள். பல ஹோட்டல்களில் விலையை ஏற்றிவிட்டார்கள். இதனால், உணவுக்காக ஹோட்டல்களை நம்பியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் முழுவீச்சில் சரிசெய்ய முயற்சிக்காமல், சிலிண்டர் விலையை 200 ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். அதுவும் சரியாக வழங்கப்படுவதில்லை.

இதையெல்லாம் எதிர்த்து பழனிசாமி குரல் கொடுத்திருக்கிறாரா? அதனால்தான், அவரை அடிமைசாமி என்று சொல்கிறோம்.

பழனிசாமி அவர்களே… துரோகத்தில் டாக்டரேட் வாங்கும் அளவுக்கு அனைவருக்கும் இவ்வளவு துரோகம் செய்துவிட்டு, வாய் கூசாமல் பொய்யாய் பேசிக் கொண்டிருக்கிறீர்களே!

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழுக்கும் – தமிழினத்துக்கும் – தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பா.ஜ.க.வின் வழக்கம்! அதற்குத் துணை போவதுதான் அ.தி.மு.க.வின் பழக்கம்! இவர்களின் அத்தனை துரோகங்களையும் கடந்துதான், நாம் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share