ADVERTISEMENT

கலைஞர் ஒரு சிங்கம்… அவரை யாரும் சிறை வைக்க முடியாது : ஸ்டாலின்

Published On:

| By Kavi

கலைஞரை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

தருமபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  ‘முன்னாள் முதல்வர் கலைஞரை அவரது இறுதி காலத்தில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கைதி போல வைத்திருந்தார். இந்த ஸ்டாலின் தான் தமிழக மக்களை பாதுகாக்க போகிறாரா என்று விமர்சித்திருந்தார். 

ADVERTISEMENT

இந்தநிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். 

அவர் பேசுகையில்,  “தமிழ்நாட்டில் பா.ஜ.க. என்று சொன்னாலே விரட்டியடிக்கிறார்களே, எப்படி தமிழ்நாட்டில் கால் பதிப்பது என்று நினைத்தார்கள். தமிழர்களுக்கு துரோகம் செய்ய யாராவது கிடைப்பார்களா என்று வலைவீசித் தேடினார்கள். அப்படி கிடைத்தவர்தான் துரோகத்தில் டாக்டரேட் வாங்கிய பழனிசாமி!

ADVERTISEMENT

அவருக்கு NDAவில் கொடுக்கப்பட்டிருக்கும் ரோல் என்ன தெரியுமா? சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.க.வுக்கு வாக்கு கேட்பது! தமிழுக்கு விரோதமான பா.ஜ.க.வுக்கு வக்காலத்து வாங்குவது! இந்தியைத் திணிக்கும் பா.ஜ.க.வுக்குத் துணை போவது! அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் பா.ஜ.க.வுக்கு சாமரம் வீசுவது! ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று ஜனநாயகத்தைச் சிதைக்கும் பா.ஜ.க.வுக்கு, ஜால்ரா போடுவது! இடஒதுக்கீட்டையும் சமூகநீதியையும் அழிக்கும் பா.ஜ.க.வுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது! இறுதியாக, அ.தி.மு.க.-வை, அமித்ஷாவிடம் தாரைவார்ப்பது.

இப்படிப்பட்ட பழனிசாமி, நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய தலைவர் கலைஞர். கலைஞரை நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்தேன் என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசியிருக்கிறார். திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே… தோல்வி பயத்தில் எல்லை மீறிப் பேசத் தொடங்கியிருக்கிறீர்கள்.

ADVERTISEMENT

முதலமைச்சராக என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவரான உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தேர்தலில் அதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள். உங்களுக்குத் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகிறார்கள். ஆனால், தலைவர் கலைஞருடன் ஒரு மகனாக என்னுடைய உறவைப் பற்றி, ஒரு சொல் பேசக் கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்தத் தகுதியும் கிடையாது!

தலைவர் கலைஞரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! வாழ்ந்த காலம் வரை, கோடிக்கணக்கான தொண்டர்களை என் உயிரினும் மேலான ‘உடன்பிறப்புகளே’ என்ற ஒற்றை மந்திரத்தில் கட்டிப் போட்டிருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். முதுமையால் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்தார். நினைவாற்றலை இழந்தபோதுகூட, மருத்துவர்கள் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால், “அண்ணா… அண்ணா…” என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி அவர். முடியாத நிலையில்கூட, அறிவாலயம் செல்ல வேண்டும், முரசொலிக்கு செல்ல வேண்டும் என்று துடித்தவர். அவரை யாரும் சிறை வைக்க முடியாது. அவருடைய இதயச்சிறையில்தான் நான் உட்பட உடன்பிறப்புகள் அத்தனை பேரும் குடியிருந்தோம். எடப்பாடி பழனிசாமி அவர்களே… தலைவர் கலைஞர் பெயரைச் சொல்லக்கூட உங்களுக்குத் தகுதியும் கிடையாது; எந்தவித யோக்கியதையும் கிடையாது.

5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருந்து, இந்தத் தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட ஒரே முதலமைச்சர், தலைவர் கலைஞர். அவருடைய கடைசி ஆசை என்ன? அவருடைய தலைவராகப் பேரறிஞர் அண்ணாவிற்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும். அப்பாவுக்காக அல்ல, தலைவருக்காக. நானே உங்கள் வீட்டுப் படியேறி வந்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டேனே… என்னுடைய தந்தைக்காக அல்ல, தமிழினத்தின் தலைவர் அவர். கடற்கரையில் இடம் கொடுங்கள் என்று அந்தச் சோக சூழ்நிலையில்கூட உங்கள் முன்னால் வந்து நின்றேனே… கொடுத்தீர்களா? இரக்கம் இல்லாமல் மறுத்தவர்தானே நீங்கள்! அப்படிப்பட்ட உங்களுக்கு, எங்கள் தலைவரைப் பற்றி பேச எந்த யோக்கியதையும் கிடையாது.

உங்கள் யோக்கியதை என்ன தெரியுமா? உங்களை நம்பிப் பதவி கொடுத்த சசிகலாவின் காலையே வாரிவிட்டவர் நீங்கள். நம்பிய டி.டி.வி. தினகரனையும், சகோதரர் O.P.S. அவர்களையும் முகுகில் குத்தியவர் நீங்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவால் சட்டமன்ற அவைக்கு வராமல் இருக்க ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை ஆதரித்த இயக்கம் தி.மு.க. இதுதான் உங்களுக்கும் – எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம்!

அடித்துச் சொல்கிறேன்… உங்களால் எந்தக் காலத்திலும் ஆட்சியை பிடிக்கவே முடியாது. உறுதியாக சொல்கிறேன்… கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும் வரை உங்களால் ஆட்சியின் பக்கமே வர முடியாது. இது உறுதி.

தமிழ்நாட்டைக் காக்க, திராவிட முன்னேற்றக் கழகம்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்! இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வளர்ச்சி நீடிக்க வேண்டும் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆள வேண்டும்! தமிழ்நாடு தலைநிமிர்ந்தே இருக்க வேண்டும் என்றால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான், வெற்றி பெற வேண்டும்! அந்த வெற்றி, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மாபெரும் வெற்றியாக இருக்க வேண்டும்!

நீங்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்… நாம் போராடுவது தி.மு.க.வின் வெற்றிக்காக மட்டுமல்ல; நம்முடைய கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக! மறந்துவிடாதீர்கள்.

எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று  வாக்கு சேகரித்தார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share