வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் தொடர்பான செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்பு கூட்டம் நாளை நவம்பர் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடக்கும் தொடர் மோதல் போக்கின் விளைவாகவே இந்த சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.
ஆளுநர் ரவி தமிழ்நாடு சட்டமன்றத் தால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களையும் தீர்மானங்களையும் எந்த முடிவும் எடுக்காமல் பரிசீலனை என்ற பெயரில் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இது போலவே எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் மாநில ஆளுநர்களும் பல்வேறு சட்ட மசோதாக்களை ஒப்புதல் கொடுக்காமல் அப்படியே வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் மாநில அரசுகள் போலவே தமிழ்நாடு அரசும் ஆளுநர் உடனடியாக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் ஆளுநரை கடிந்து கொண்டது.

மேலும் வழக்கு விசாரணைக்கு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் நவம்பர் 16ஆம் தேதி காலை தமிழ்நாடு அரசு ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார்.
இந்த தகவல் அறிந்து முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகனிடம் ஆலோசனை செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவுவிடமும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு நவம்பர் 18ஆம் தேதி சிறப்பு சட்டமன்றம் கூட்டுவது என்றும் அதில் ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்புவது என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.
ஆளுநருக்கு இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவர் அதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டிய நிலைமைக்கு உள்ளாவார் என்பது அரசியல் அமைப்பு சட்டம்.

உச்ச நீதிமன்றத்தில் அடுத்து வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆளுரிடம் சட்ட மசோதாக்கள் நிலுவையில் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவசரமாக அவற்றைத் திருப்பியனுப்பினார் ஆளுநர். ஆனால் ஆளுநருக்கு மீண்டும் செக் வைக்கும் விதமாக இதற்கென சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடிவெடுத்திருக்கிறார் முதல்வர்.
அடுத்து, இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என ஆளுநர் தீவிரமான ஆலோசனைகளில் ஈடுபட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஆளுநர் எடுத்த பல்வேறு மோதல் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து அகற்றவேண்டும் என பிடிவாதமாக இருந்தார் ஆளுநர். ஆனால் முதலமைச்சர் அவரை துறை ரீதியாக அமைச்சராக செயல்பட அரசாணை பிறப்பித்தார். இதற்கு எதிராக ஆளுநர் கடிதம் எழுதிய நிலையில், சில மணி நேரங்களில் அந்த கடிதத்தை அவரே நிறுத்தி வைத்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை பெற்று இது குறித்து மீண்டும் தெரிவிப்பதாக கூறிய ஆளுநர் அதற்குப் பிறகு அது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை இவ்வாறு பல்வேறு விஷயங்களில் ஆளுநர் தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் அரசோடு மோதல் போக்கை மட்டும் தொடர்ந்து வருகிறார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் துருவிய போது, ஆளுநருக்கு என்று ஆலோசனை சொல்வதற்காக நான்கு பேர் ஆளுநர் மாளிகையில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். பிகாரைச் சேர்ந்த அபிஷேக், கல்யாணசுந்தரம், மகாலட்சுமி மற்றும் திருஞான சம்பந்தம் ஆகியோர் ஆளுநருக்கு ஆலோசகர்களாக தற்போது செயல்பட்டு வருகிறார்கள்.
இவர்களில் அபிஷேக், கல்யாணசுந்தரம், மகாலட்சுமி ஆகியோர் மத்திய அரசின் உளவுத்துறை, மற்றும் ரா போன்ற அமைப்புகளில் பணியாற்றியவர்கள் என்று தெரிகிறது. இவர்களோடு சேர்த்து திருஞான சம்பந்தமும் ஆலோசகராக இருக்கிறார்.
இவர்கள்தான் ஆளுநருக்கு ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வாறு செயல்படவேண்டும் என்று ஆலோசனைகளை கூறுகிறார்கள். அரசுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருக்கும் அதிகாரிகளோடு பேசி அதன் மூலம் கிடைக்கும் இன்புட்டுகளை வைத்து இவர்கள் ஆளுநருக்கு ஆலோசனைகள் தருவதாக ராஜ்பவன் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சமீபத்தில் ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில்… ஆளுநரை நோக்கிய தாக்குதலாக இந்த சம்பவம் மிகைப்படுத்தப்பட்டது. மேலும், ஐபிசி 124 பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று (அதாவது குடியரசுத் தலைவர்-ஆளுநர் மீது தாக்குதல் நடத்தினால் போடப்படும் சட்டப் பிரிவு) போலீஸாருக்கு ஆளுநர் அழுத்தம் கொடுத்தார்.
இது தொடர்பான ஆலோசனைகளையும் இந்த குழுவே கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த சட்டப் பிரிவில் இந்த சம்பவத்தைச் சேர்க்க முடியாது என்று ஆளுநருக்கு சில அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் எடுத்து கூறிய பின்னரும் இந்த குழுவின் ஆலோசனையின் பேரிலேயே அதுவும் குறிப்பாக திருஞானசம்பந்தத்தின் ஆலோசனையின் பேரிலேயே தொடர்ந்து இந்த விவகாரத்தை அணுகினார் ஆளுநர்.
இந்த பின்னணியில் நாளை சட்டமன்றத்தில் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் நிலையில் அதை என்ன செய்வது என்பது தொடர்பான ஆலோசனைகளையும் இந்த நால்வர் குழுவே வழங்க இருக்கிறது என்கிறார்கள்.
பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைக் குழுவா அல்லது ஆளுநரின் அரசியல் பிம்பத்தை நீட்டிப்பதற்கான ஆலோசனைக் குழுவா என்ற ஆளுநர் மாளிகையிலேயே விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரயில்வே போர்டு உறுப்பினர் பயணிக்க தனி ரயிலா? – சு.வெங்கடேசன் கேள்வி!
“கரை வேட்டி கூட கட்ட முடியல” : பன்னீரை கைவிடும் ஆதரவாளர்கள்!
