திருமணம் என்றால் ஒன்றாக வாழ்வது — இது தான் நம்மில் பலரின் இயல்பான புரிதல். ஆனால் இப்போது, அந்த பாரம்பரிய அணுகுமுறைக்கு சற்று வித்தியாசமான ஒரு புதிய கருத்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது — “Soft-Separation”.
பிடித்துப்போய் இணைந்து, பிடிக்காமல் போகும்போது பிரிய முடிவெடுக்கும் ஜோடிகளுக்கு இடையே, இப்போது இந்த புதிய கலாச்சாரம் பிரபலமாகி வருகிறது. மேலைநாடுகளில் தொடங்கி இப்போது இந்தியப் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் மத்தியிலும் இது ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது.
என்னது இது ‘சாஃப்ட் செப்பரேஷன்’? – ஒன்றாக இல்லை… ஆனால் பிரிவும் இல்லை
“Soft-Separation” என்றால், சட்டப்படி விவாகரத்து செய்யாமல், தம்பதிகள் தனித்தனியாக வாழ்வது. ஒரே வீட்டில் வெவ்வேறு பகுதிகளில் வாழலாம், அல்லது வெவ்வேறு வீடுகளில் தங்கலாம். ஆனால் உறவு முற்றிலும் முடிவடையாது.
இவர்கள் தங்களை விவாகரத்து செய்தவர்களாக அறிவித்துக்கொள்வதில்லை. சமூகத்திற்கும் சட்டத்திற்கும் இவர்கள் இப்போதும் தம்பதிகள்தான். இந்த அமைப்பில், இருவரும் co-parenting-ஐ தொடர்ந்து செய்கிறார்கள். குழந்தைகள் மீது எந்த பாதிப்பும் வராமல், பெற்றோர்கள் தங்களின் இடைவெளியையும் பாதுகாக்க முயல்கிறார்கள்.
ஏன் இது இப்போது டிரெண்டாகிறது?
“காதல் போனால் என்ன? மரியாதை இருக்கிறதே!” என்பதுதான் இந்தத் தலைமுறையின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஒரு காலத்தில் விவாகரத்து என்பது கசப்பான கோர்ட் கேஸ்கள், ஒருவரையொருவர் குற்றம் சாட்டுதல் என மன அழுத்தத்தை தருவதாக இருந்தது. ஆனால், ‘சாஃப்ட் செப்பரேஷன்’ முறையில் அத்தகைய கசப்புணர்வு இல்லை.
குழந்தைகளுக்காகவும் சொத்துக்களுக்காகவும் ஒரு ‘மாடர்ன்’ முடிவு
இந்த முறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் முன்வைக்கும் முக்கியமான காரணம் ‘குழந்தைகள்’. விவாகரத்து பெறும்போது குழந்தைகள் ஒரு வாரத்திற்கு அம்மாவோடும், அடுத்த வாரம் அப்பாவோடும் அலைய வேண்டியிருக்கும். ஆனால், இதில் குழந்தைகள் தங்களுக்குப் பழகிய அதே வீட்டில், அதே சூழலில் வளர்கிறார்கள். பெற்றோர் தான் தங்கள் வசதிக்கேற்ப பிரிந்து இருக்கிறார்கள்.
மேலும், விவாகரத்தால் ஏற்படும் சட்ட சிக்கல்கள், சொத்து பிரச்சினைகள், சமூக அழுத்தம் போன்றவற்றையும் தவிர்க்க இது ஒரு வழியாக பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக, சொத்துக்கள் மற்றும் வரிச் சலுகைகள் (Tax Benefits). விவாகரத்து என வரும்போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பிரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். ஆனால், பிரியாமல் இருப்பதால் நிதி ரீதியான இழப்புகள் தவிர்க்கப்படுகின்றன. இது ஒரு “சுயநலமற்ற புரிதல்” என்று பல சமூக ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.
மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்
ஒரே அறையில் சண்டையிட்டுக் கொண்டு வாழ்வதை விட, தள்ளி இருந்து ஒருவருக்கொருவர் மரியாதையையும் நட்பையும் பகிர்ந்துகொள்வது சிறந்தது எனப் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “உறவு என்பது உடலால் இணைந்திருப்பது மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் கொடுக்கும் சுதந்திரமும் தான்” என்பதே இந்த ட்ரெண்டின் அடிப்படை.
இருப்பினும், இது நீண்ட காலத்திற்குச் சாத்தியமா? ஒரு கட்டத்தில் யாராவது ஒருவர் மறுமணம் செய்ய விரும்பினால் என்ன நடக்கும்? போன்ற கேள்விகள் இருந்தாலும், தற்போதைக்குத் திருமண உறவில் ஏற்படும் சிக்கல்களுக்கு இது ஒரு ‘ஸ்மார்ட்’ தீர்வாகப் பலரால் பார்க்கப்படுகிறது.
