டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜி வழக்கு… ஸ்டாலினிடம் உண்மைகள் மறைக்கப்பட்டதா? க்ளைமேக்ஸ் ஆலோசனை!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் உச்ச நீதிமன்றம் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு  விடுத்த எச்சரிக்கை உத்தரவின் முழு விவரம் இன்பாக்சில் வந்து விழுந்தது. Senthilbalaji case facts hidden from Stalin?

அதை முழுமையாக படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என திங்கள் கிழமைக்குள் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏப்ரல் 23 ஆம் தேதி இறுதி எச்சரிக்கை விட்டிருக்கிறது.

எகிறும் எதிர்பார்ப்பு!

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று திமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்ல பிற கட்சி வட்டாரங்களிலும் அரசு அதிகாரிகள் மத்தியிலும், வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதே சட்டமன்றம் நடந்துகொண்டிருந்தபோது, ஏப்ரல் 8 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் ஆளுநர் வழக்கில் அளித்த தீர்ப்பால், உற்சாகமான முதலமைச்சர் சட்டமன்றத்திலேயே அறிவிப்பும் வெளியிட்டு உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார், திமுகவினரும் இந்தத் தீர்ப்பை உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.Senthilbalaji case facts hidden from Stalin?

சரியாக இரண்டு வாரத்தில் சட்டமன்றம் நடக்கும் காலகட்டத்தில்தான் செந்தில்பாலாஜி தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவும் வந்தது.

உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் ஸ்டாலின் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூட,  செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்தை தெரிவித்துள்ளது. அரசின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு…‘இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்காது’ என்று பதிலளித்தார் .

சட்டமன்றத்திலேயே நேற்றும் இன்றும் திமுகவின் மூத்த அமைச்சர்கள் முதல் ஜூனியர் அமைச்சர்கள் வரை பலரும், சட்டமன்ற உறுப்பினர்களும்… ‘தியாகி என்று வர்ணித்த செந்தில்பாலாஜியை இப்போது முதல்வர் என்ன செய்யப் போகிறார்?” என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செந்தில்பாலாஜி தந்த நம்பிக்கை!

sendhilbalaji supreme court

அவர்களிடம் விசாரித்தபோது…. ‘செந்தில்பாலாஜிக்கு நீதிமன்றங்களால் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில்பாலாஜியை அழைத்துப் பேசுவார்.

அப்படி பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ‘தலைவரே…பயப்படுற மாதிரி ஒண்ணும் நடக்காது. நான் டெல்லியில பேசிக்கிட்டிருக்கேன். எல்லாம் சரியாகிடும்’ என்று சொல்லி முதல்வருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஸ்டாலின் இது தொடர்பாக சில ஆலோசகர்களிடமும் கருத்து கேட்பார். ‘செந்தில்பாலாஜி வழக்கில் கோர்ட் இப்படி கருத்துகளை வெளியிட்டாலும் சட்ட ரீதியாக ஒன்றும் செய்யமுடியாது’ என்று அந்த ஆலோசகர்களும் முதல்வருக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலேயே அவரிடம் தெரிவித்து வந்துள்ளனர்.

முதல்வருக்கு சொல்லப்பட்டதா?

new ministers rajbavan

செந்தில்பாலாஜி அமைச்சராக இல்லை. அதனால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பில்லை என்ற அடிப்படையில்தான் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். ஆனால், ஜாமீன் அளிக்கப்பட்ட 3 ஆவது நாளே அவர் அமைச்சராக பதவியேற்றார். அப்போதே மூத்த அமைச்சர்களுக்குள் இது சரியா வருமா என்ற கருத்துப் பரிமாற்றம் நடந்தது.

உடனடியாக செந்தில்பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டால் அது உச்ச நீதிமன்றத்தை கோபப்படுத்தும் வகையில் அமையும் என்றும், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததற்கான முகாந்திரத்தையே கேள்விக்கு உள்ளாக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் சட்டம் தெரிந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த உண்மைகள் அப்போது முதல்வரிடம் முறைப்படி எடுத்துச் செல்லப்படவில்லை.

செந்தில்பாலாஜியும் சிறைக்கு செல்வதற்கு முன் விட்ட இடத்திலிருந்து தனது அமைச்சர் பணிகளை மீண்டும் தொடர்ந்தார். Senthilbalaji case facts hidden from Stalin?

ஆனால், டிசம்பர் மாதமே உச்ச நீதிமன்றம் செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்தது பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டது. அப்போதும் முதல்வரிடம், ‘இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை’ என்றுதான் தெரிவிக்கப்பட்டது. Senthilbalaji case facts hidden from Stalin?

உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு சூடுபிடித்தபோது கூட முதல்வரிடம், ‘நம் பக்கமே வெற்றி’என்று செந்தில்பாலாஜி தரப்பினரால் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜாமீனுக்கும் அமைச்சர் பதவிக்கும் முரண் இல்லை!

இந்த அடிப்படையில்தான் ஏப்ரல் 8 ஆம் தேதி செந்தில்பாலாஜி தரப்பில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூட, ‘சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஜாமீன் உத்தரவில் நான் அமைச்சர் பதவி ஏற்பதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. நான் அமைச்சராக நியமிக்கப்பட்டது ஜாமீன் நிபந்தனைகளுக்கு எதிரானது இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையேதான் முதல்வரிடமும் செந்தில்பாலாஜி தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார். ஆனால், ஏப்ரல் 23 ஆம் தேதி உச்ச நீதிமன்றம், ‘அமைச்சராக இல்லாத காரணத்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பில்லை என்று செந்தில்பாலாஜி குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், ஜாமீன் பெற்ற இரு நாட்களிலேயே அவர் மீண்டும் அமைச்சராகிறார் என்றால் அவரது நேர்மையின்மையை காட்டுகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாது’ என்று கடுமையாக குறிப்பிட்டு கெடு விதித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது” என்கிறார்கள். Senthilbalaji case facts hidden from Stalin?

அதுமட்டுமல்ல சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களிடம் இந்த விவகாரம் பற்றி அதிமுக உறுப்பினர்களும் விவாதித்திருக்கிறார்கள். ‘எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில்  அமித் ஷாவை டெல்லியில் சென்று சந்தித்தபோது செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கை பற்றி சொல்லியிருக்கிறார். அதற்கு அமித் ஷா ஆர்வம் காட்டவில்லையாம். ஒருவேளை செந்தில்பாலாஜி அமைச்சர் பதவி இல்லாமல் திமுகவில் இருப்பதற்கு பதிலாக பாஜகவுக்கு போய்விட்டால் என்ன செய்வீர்கள்?’ என்றும் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த சூழலிலும் செந்தில்பாலாஜி நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.

க்ளைமாக்ஸ் ஆலோசனை!

உச்ச நீதிமன்றம் வரும் 28 ஆம் தேதி திங்கள் கிழமைக்குள் ஜாமீனா, அமைச்சர் பதவியா என்று முடிவெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். Senthilbalaji case facts hidden from Stalin?

ஒன்று செந்தில்பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதை ஏற்றுக் கொண்டு அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவிக்குமாறு ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை செய்யலாம். அல்லது முதல்வரே செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம்.

இந்த இரு வாய்ப்புகள் குறித்து முதல்வர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கிடையில் போலீஸ் மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் முதலில் 29, 30 என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்கூட்டியே அதாவது 28, 29 என தற்போது மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திங்கள் கிழமை சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து பேசுவார். அதையடுத்து செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஒரு முடிவு அறிவிக்கப்படலாம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share