மூத்த எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் பதிப்பாசிரியருமான அரவிந்தன் (வயது 62) இன்று ஏப்ரல் 3-ந் தேதி காலமானார்.
1990களில் இந்தியா டுடே இதழில் ஊடகவியலாளராக பணியைத் தொடங்கிய அரவிந்தன், இலக்கியத் துறைக்குள்ளும் தடம் பதித்தார். இந்தியா டுடேயின் போற்றத் தகுந்த இலக்கிய சிறப்பு மலர்களை உருவாக்கியவர் அரவிந்தன்.
பின்னர் காலச்சுவடு இதழில் பணிபுரிந்த காலத்தில் இலக்கியம், கலைகள், சமூகம் என எழுத்துப் பணியில் தீவிரமாக இயங்கினார்.
நமது மின்னம்பலத்தில் அரவிந்தன் துணை ஆசிரியராகப் பணிபுரிந்த போது அரசியல், இலக்கியம், விளையாட்டு- குறிப்பாக கிரிக்கெட் என அனைத்து துறைகளிலும் பல்வேறு சிறப்புக் கட்டுரைகள் வெளிவர காரணமாக இருந்தார். இந்த துறை சார் வல்லுநர்களை தேடித் தேடி போய் சிறப்புக் கட்டுரைகளை வாங்கி குவித்தார்.
நமது மின்னம்பலத்தில் இப்போதும் வாசகர்கள் பலராலும் பாராட்டப்படுகிற மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை தந்து கொண்டிருந்தவர் அரவிந்தன்.
மொழிபெயர்ப்பு ஆற்றலுக்காக விருதைப் பெற்றவர். மொழிபெயர்ப்புத் துறையில் முன்னோடியாக திகழ்ந்தவர்.
எழுத்தையே வாழ்வின் மூச்சாக கொண்டு இயங்கிய அரவிந்தன், காலச்சுவடு இதழின் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்த நிலையில் இன்று நம்மை விட்டு பிரிந்தார் என்பதை பெருந்துயருடன் பகிர்கிறோம்.
அரவிந்தனின் மறைவு நமக்கும் ஊடகம், இலக்கியம், விளையாட்டு, அரசியல், மொழிபெயர்ப்பு துறைகளுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அரவிந்தன் மறைவுக்கு நமது மின்னம்பலம் நிறுவனத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
