மத்திய இணை அமைச்சர் எல் முருகன்.. பழனி முருகனை வேண்டுகிறேன் எல். முருகனை தோற்கடித்து டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கடமை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 12) கோவை நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் தவெக கவுண்டம்பாளையம் வேட்பாளர் கனிமொழி, மற்றும் மேட்டுப்பாளையம் வேட்பாளர் சுனில் ஆனந்த் ஆகியோரை நேரில் சந்தித்து தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், புதிய தலைமை தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருப்பதாகவும் தற்பொழுது ஆண்டு வரும் நிலைமையை பார்த்து வரும் பொழுது தீய சக்தியாகவும் ஊழல் ஆட்சியாகவும் இருக்கக்கூடிய திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான்.
நாம் தேர்தல் பணி ஆற்ற உள்ளோம். மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள் அந்த வாக்கை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டியது நம்முடைய கடமை, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படக்கூடிய ஒரே இயக்கம் தமிழக வெற்றி கழகம் தான். நான் ஒவ்வொரு பகுதிக்கும் செல்கின்ற பொழுதும் பத்து முறை தோற்ற பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது அதற்கு மாற்றாக நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம் அது வீணாகிவிடும் ஆகவே அனைத்து ஓட்டுகளையும் திமுகவை வீழ்த்த தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் நீங்க சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தவெகவிற்கும் திமுகவிற்கும்தான் போட்டி. திமுக 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்துள்ளது. எட்டு கொடுத்தால் முடிந்து விட்டது. என்றைக்கும் ஓடாது என்றார். திமுக வெற்றி பெற முடியாது என்பது எண்ணில் தெரிகிறது ஆகவே நாம் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார்.
நம்மிடம் உழைப்பு, உற்சாகம், மக்கள் ஆதரவு அனைத்தும் உள்ளது என்றார். மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன் என்று விஜய் கூறியுள்ளார், இதனை வேறு எந்த கட்சிகளும் கூற முடியாது .
ஜனநாயகன் திரைப்படம் முழுமையாக வெளியானதை குறிப்பிட்டு பேசிய அவர் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ளார்கள். அதை யார் செய்தார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் அந்த துறைக்கான அமைச்சர் யார்.. மத்திய இணை அமைச்சர் எல் முருகன்.. பழனி முருகனை வேண்டுகிறேன் எல். முருகனை தோற்கடித்து டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.
இத்தனையையும் தாங்கிக் கொண்டு ஒரு தலைவர் நமக்காக வருகிறார் என்றார்.
