எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். Sengottaiyan meets Nirmala Sitharaman
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி குறித்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கேற்றார் போல முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அமித்ஷாவை ’இரும்பு மனிதர்’ என்று கூறியது, திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுக, பாமக, பாஜக நாங்கலாம் கூட்டணிங்க, என்று கூறியதும் அதன்பின் மாற்றி பேசியதும்” கூட்டணிக்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று காலை(மார்ச் 28) மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் தொழிலதிபர் பெருந்துறை ஸ்ரீதர், வெங்கட்ராமன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் டெல்லி சென்றனர்.
ஏற்கனவே டெல்லியில் இவர்கள் வருகைக்காக காத்திருந்த பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் மூலம் நிர்மலா சீதாராமனை நேற்று இரவு சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசியிருக்கின்றனர்.
அப்போது, “அதிமுகவை ஒன்றிணைப்பது பற்றியும், அதற்கான வழிகள் குறித்தும் பேசப்பட்டது” என்கிறார்கள் செங்கோட்டையனுக்கு நெருங்கிய ஆதரவாளர்கள்.
“ஏற்கனவே அமித்ஷா – எடப்பாடி சந்திப்பின் போது, அதிமுகவில் பிரிந்திருப்பவர்களை ஒன்று சேர்க்க அமித்ஷா வலியுறுத்தியிருக்கிறார், அதை எடப்பாடி ஏற்க விரும்பவில்லை. அதனால் செங்கோட்டையனுக்கு முக்கியத் துவம் கொடுத்து பாஜக அழைத்தது” என்றும்
‘செங்கோட்டையன் மூலமாக சசிகலாவுக்கு முக்கிய மெசேஜ் ஒன்றையும் நிர்மலா சீதாராமன் கொடுத்தனுப்பினார் என்றும் டெல்லிக்கு சென்று சந்திப்பதற்கு முன்னாள் நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்த போது இந்தியன் வங்கி கெஸ்ட் அவுஸிலும் அவரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்’ என்றும் சொல்கிறார்கள்.
தொடர்ந்து இன்று காலை டெல்லியில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்தடைந்த செங்கோட்டையன் அங்கிருந்து அவரது வீட்டுக்கு வந்து, வழக்கம்போல் கட்சி ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இதற்கிடையே இன்று காலை சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் டெல்லி சென்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்காமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Sengottaiyan meets Nirmala Sitharaman









