ADVERTISEMENT

ஒப்பனையை அழித்த உடனே அரியணையா – மோகன்லால்; மம்முட்டியால் முடியுமா – சீமான் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Seeman strongly criticized actor Vijay

ஒப்பனையை அழித்த உடனேயே அரியணை.. நீங்கள் நடிக்கும் போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு; நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்ற கோட்பாட்டை அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் ஏற்கிறதா? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் 37 குடும்பங்களை இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது குறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், வரலாறு திரும்புகிறது என்று அவரே தெரிவித்துள்ளார். ஆன்றோர்களும் சான்றோர்களும், மிகப்பெரிய அறிஞர் பெருமக்களும், வீர மறவர்களும் இருந்து அரசியல் செய்த நிலம் இது முத்துராமலிங்க தேவர், முக்கையா தேவர், காமராஜர், கக்கன், ஜீவானந்தம், சிங்காரவேலர், அயோத்திதாசன், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்களைப் பார்த்து அது போல் நாட்டில் ஒரு நல்ல அரசியல் உருவாக வேண்டும். இந்நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாட்சி மலர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும்போது அது வேறு பக்கம் திசை திருப்பி போகிறது. தமிழன் ஏன் அடிமையானான் என்பதற்கு க.ப.அறவாணன் புத்தகத்தில் பல காரணங்களை சொல்கிறார். தன்னினப்பகை, தன்னிடத்தில் இருப்பதைவிட பிறரிடத்தில் இருப்பது உயர்ந்தது என்கின்ற சிந்தனை, போர்குணம் அற்றுப்போனது, அளவுக்கு அதிகமான திரைக் கவர்ச்சி, இதுவெல்லாம் அடிமையானதற்கு பெரிய காரணம் என்கின்றார். இந்த நடுக்கம் நமக்கு வருகிறது. இந்தச் சமூகம் எதை நோக்கிப் போகிறது.

ADVERTISEMENT

இந்த கல்வி என்பது அரசியலை கற்பிக்கவில்லை. அரசியலை தாண்டிய கல்வி இங்கு ஒன்றுமில்லை. நம்முடைய கல்வி அறிவையோ, ஒழுக்க நெறியையோ வளர்க்கும் கல்வியாக இல்லாமல் வியாபாரமாக மாறிவிட்டதால் வரும் சிக்கல் இது. கலையை போற்ற வேண்டியது தான்; கலைஞர்களை கொண்டாட வேண்டியதுதான். ஆனால் நடித்தாலே போதும் நாட்டை ஆளுகிற அனைத்து திறமையும் வந்துவிடுகிறது என்று ஒரு நாட்டு மக்கள் கருதுவார்கள் என்றால் அது மிகவும் கொடுமையான போக்காக மாறிவிடும்.

ஒப்பனையை அழித்த உடனேயே அரியணை.. நீங்கள் நடிக்கும் போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு; நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்ற கோட்பாட்டை அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் ஏற்கிறதா?

ADVERTISEMENT

உலகத்திற்கு கலை, இலக்கியம், பண்பாடு, வேளாண்மை, நாகரீகம் என எல்லாவற்றையும் கற்பித்துக் கொடுத்த உலகின் மூத்த இனம் இதை ஏற்கிறதா?

இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் திரைப்படம் உள்ளது ஆனால் எந்த மாநிலத்திலும் இல்லாத விபத்து இங்கு தொடர்ந்து நிகழ்வது ஏன். அருகில் உள்ள கேரளாவில் மோகன்லாலோ, மம்முட்டியோ இதுபோல் செய்ய முடியுமா.. இந்த திரைக் கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் தமிழ் இளம் தலைமுறையினர் விழிப்புற்று எழ வேண்டும். அரசியல் என்பது வேறு. அரசியல் என்பது வாழ்வியல். நமது முன்னோர்கள் எப்படி எல்லாம் அரசியல் செய்தார்கள் என்ற வரலாற்றை வாசித்து தெரிந்து தெளிவு பெற வேண்டும். இல்லையென்றால் பெரும் சிக்கலாகி விடும் என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share