கரூர் பெருந்துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ம் தேதி நடிகர் விஜய் தவெக பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அன்று நள்ளிரவில் சென்னையில் இருந்து கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதய ஸ்டாலின், சீமான், திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் செப்டம்பர் 28ம் தேதி கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்திருந்தார். ஆனால் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தவெக தரப்பில் யாரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தவெக தரப்பின் செயல்பாடுகள் குறித்தும், விஜய்யின் தலைமை பண்புகள் குறித்தும் கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய் விரைவில் அவர்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார்.
இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜய்யின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து கரூரில் பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தினர் நேற்று மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கையை த.வெ.க. தலைவர் விஜய் எழுத்துப்பூர்வமாக பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக கரூர் சம்பவத்தில் உயிரிழந்த மோகன் (19) என்பவரின் தந்தையை ஹோட்டலுக்குள் அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ஹோட்டல் வாசலில் காத்திருந்ததை தொடர்ந்து அவர் எடுத்து வந்த மகனின் இறப்பு சான்றிதழை காட்டிய பின்பு அவரை அனுமதித்தனர்.
