ராஜன் குறை
மனித குலத்தில் அரசியல் எங்கே துவங்குகிறது என்றால் பல பேர் இணைந்து ஒரு செயலைச் செய்யவேண்டும் என்னும்போது, அதற்கான ஒற்றை முடிவினை எடுக்க வேண்டும் என்னும்போது தோன்றுகிறது. ஆடைகளே அணியாத பழங்குடி இனத்தவர் நான்கு பேர் வேட்டைக்குப் போகிறார்கள் என்றால், விலங்குகளின் கால் தடங்கள் இருவேறு திசையில் செல்வதைக் காணும்போது எந்த திசையில் செல்வது என்று முடிவெடுக்க வேண்டும். இப்படிப் போகலாம் அப்படிப் போகலாம் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தால் வேட்டை நடக்காது. அதனால் நால்வரில் யார் தலைவர் என்று முடிவு செய்துகொள்வது வசதி. அனைவரும் கருத்துக்களைக் கூறினாலும், இறுதி முடிவை அவர் எடுப்பார் என்னும்போது வேலை சுலபமாகிவிடும்.
எப்படியாவது வேட்டையை வெற்றிகரமாக முடித்து உணவை உறுதி செய்யும் பொறுப்பு அவருக்கு உண்டு. அதை நிறைவேற்றத் தவறினால் அவர் தொடர்ந்து தலைவராக நீடிப்பது கடினம். திறம்பட நிறைவேற்றினால் அவருக்கு அந்த குழுவில் பல சலுகைகள் கிடைக்கும். பொதுவான முடிவுகள் எடுக்கும் பொருட்டே தலைமை என்பது மானுட சமூகங்களில் இன்றியமையாததாக மாறுகிறது.
மானுட சமூகங்களில் விவசாயம், வர்த்தகம், தொழில்கள் என பல வேலைப்பிரிவுகள் தோன்றியபோது அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரசு நிர்வாகத்தின் தலைவராக மன்னர் உருவானார். அரியணை, செங்கோல், மணிமகுடம், அரண்மனை என மன்னரின் அதிகாரத்திற்கு நிறைய குறியீடுகள் உருவாயின. மன்னர்கள் தெய்வத்தின் ஆசி பெற்றவர்கள் என்பதற்குச் சான்றளிக்க மதகுருமார்கள், ஆலோசனை கூற மந்திரிகள், படையை நடத்த தளபதிகள், வரி வசூலிக்க குறுநில மன்னர்கள் அல்லது நிலபிரபுக்கள் என மன்னர் பேரரசராக உருமாறினார்.
மன்னர் இறந்துவிட்டால் அடுத்து யார் மன்னராவது என்ற போட்டி, அரசமைப்பை சீர்குலைத்துவிடும் என்பதால் மன்னரின் மகனே, இளவரசனே அடுத்த மன்னர் என்ற முறை ஏற்பட்டது. அப்படி மன்னராகும் ஒருவர் திறம்பட ஆட்சி செய்தால்தான் நீடிக்க முடியும். இல்லாவிட்டால் பேரரசு சிற்றரசாகிவிடும்.
மன்னராட்சியின் பிரச்சினை வாரிசுரிமை அல்ல. அதன் பிரச்சினை மன்னர் எந்த அளவு மக்கள் நலனை கருத்தில் கொள்கிறார் என்பதுதான். பல சமயங்களில் தேவையற்ற போர்கள், மாளிகை வாசிகளின் ஆடம்பரம், பெரும் கட்ட டங்களை எழுப்பதல் போன்ற தவறான முடிவுகளால் மக்கள் மீது வரிச்சுமை கூடினால் கலகம் வெடிக்கும். உற்பத்தி சீர்கெட்டு பஞ்சமும், பசியும் பெருகும். உள்நாட்டு பிரச்சினைகள் வெளிநாட்டு தாக்குதலுக்கு வழி வகுத்துவிடும்.
மன்னர் அனைவர் ஆலோசனைகளையும் பெற்று, மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்தால் வளம் பெருகும். எதேச்சதிகாரமாக ஆட்சி செய்தால் அவர் ஆதரவுத் தளம் சுருங்கிவிடும். ஆட்சிக்கு எதிர்ப்பு அதிகரிக்கும். அதனை தவிர்க்க விரும்பும் மன்னர்கள் தங்களிடம் அதிகாரத்தை குவித்துக் கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் சோழப் பேரரசில் கிராம அளவில் குடவோலைச் சீட்டு என்ற முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி அதிகாரப் பரவலுக்கு உதாரணம்.
மக்களாட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்
அச்சு இயந்திரம் உருவானபிறகு நூல்கள் அச்சிடப்பட்டு பெருகியதில் மக்களிடையே கல்வியும், வாசிப்பும் பெருகியது. நில உடமை சமூகம் நிலைபெற்றதில் உற்பத்தி பெருகிய போது வர்த்தகம் பெருகியது. புதிய நிலப்பரப்பான அமெரிக்கா கண்டறியப்பட்டதும், இந்தியாவிற்கு கடல் வழி காணப்பட்டதும் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல மாற்றங்கள் உருவாகத் துணை புரிந்தன. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தது. நகரங்கள் பெரிதாயின.
இந்த சூழலில்தான் மன்னர்களின் எதேச்சதிகாரத்திற்கும், தான்தோன்றித்தனமான வரிவிதிப்பிற்கும் எதிர்ப்பு பெருகியது. பதினேழாம் நூற்றாண்டில் பெருகிய புதிய சிந்தனைகள், அறிவியல் நோக்கு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்தும் இணைந்து மன்னர்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் ஆலோசனை சபைகள் வலுப்படுத்தப்பட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1776-ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னரின் ஆளுகையிலிருந்து போராடி சுதந்திரம் பெற்ற ஐக்கிய அமெரிக்க அரசுகள் தங்களுக்கென ஒரு அரசியலமைப்பு சட்டத்தை எழுதிக்கொண்டு மக்களாட்சி குடியரசை உருவாக்கிய போது மானுட வரலாற்றின் நவீன அரசியல் சகாப்தம் துவங்கியது. இதன் தாக்கத்தால் 1789-ஆம் ஆண்டு வெடித்த ஃபிரெஞ்சுப் புரட்சி சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம் என்ற முழக்கத்தை மானுடத்திற்கு வழங்கியது.
இதன் பிறகுதான் அரசமைப்பு சட்டத்தின் ஆட்சி என்ற குடியரசுத் தத்துவமும், மக்கள் தங்களைத் தாங்களே பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆண்டுகொள்வது என்ற மக்களாட்சி தத்துவமும் வளர்ந்து உலகின் பல நாடுகளிலும் பரவத் துவங்கியது. இதனை சாத்தியமாக்க தேசியம் என்ற பொது உணர்வு தேவை என்று உணரப்பட்ட தால் ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்த பல்வேறு சிற்றரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு தேசிய அரசுகள் தோன்றின.
அந்த அரசுகளில் மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் எப்படி அரசை உருவாக்குவார்கள் என்ற கேள்விக்கு விடையாகத்தான் அரசியல் கட்சிகள் உருவாயின. மக்கள் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பதும், தேர்தல்களில் அந்த கட்சிகள் சார்பில் பிரதிநிதிகளாக ஆவதற்கு போட்டியிடுவதும், எந்த கட்சியின் பிரதிநிதிகள் அதிகம் வெற்றி பெருகிறார்களோ அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதுமான நடைமுறை உருவானது.

இந்த தேர்தல் நடைமுறைகளில் கட்சியினை ஒருங்கிணைக்க, ஆட்சியை வழிநடத்த தலைவர்கள் தேவைப்பட்டார்கள். ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன் ஆகியோர் அமெரிக்கக் குடியரசு உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தார்கள். பின்னர் ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தினார். அனைத்து நாடுகளிலும் மக்களை ஒருமைப்படுத்த, சமூக விழுமியங்களை நிலைநிறுத்த முக்கியமான தலைவர்கள் தோன்றியுள்ளார்கள். மற்ற நேரங்களில் மக்களாட்சி அரசை வழிநடத்த நிர்வாகத் திறமையுள்ளவர்கள் போதும்.
இவ்வாறு மக்களாட்சியிலும் தொடரும் தலைவர்களுக்கான தேவை, மீண்டும் எதேச்சதிகார நோக்குள்ள தலைவர்கள் தோன்றக் காரணம் ஆனது. இத்தாலியில் முசோலினி மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப் பட்டு, பின்னர் பாசிச சர்வாதிகாரியாக மாறினார். தொடர்ந்து ஜெர்மனியில் தேர்தலில் வெற்றி பெற்ற நாஜிக் கட்சியின் தலைவரான ஹிட்லர், மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று சர்வாதிகாரியானார்.

முசோலினி போலவோ, ஹிட்லர் போலவோ முழுமையான சர்வாதிகாரி ஆகாவிட்டாலும், மக்களாட்சி அமைப்பின் பலவீனங்களைப் பயன்படுத்தி, அரசிற்குள்ள இறையாண்மையை பயன்படுத்தி, எதிர்ப்புகளை ஒடுக்கி, எதேச்சதிகாரிகளாக மாறும் சாத்தியம் எப்போதும் நிலவத்தான் செய்கிறது. எதேச்சதிகாரத் தன்மை கொண்ட கட்சித் தலைவர், ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தால் மக்களாட்சி பெயரளவில் இருந்தாலும் கூட, மக்கள் உரிமைகளும், நலன் களும் புறக்கணிக்கப்படுவது சாத்தியமாகத்தான் இருக்கிறது. இதற்கு இன்றைய முக்கிய உதாரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவில் “வேண்டாம் மன்னர்” போராட்டம்
அமெரிக்கக் குடியரசு துவங்கி இருநூற்றம்பைது ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் சமயத்தில் சென்றவாரம் வியப்பூட்டும் ஒரு போராட்டம் நிகழ்ந்துள்ளது. அதன் பெயர் “வேண்டாம் மன்னர்” (No King) போராட்டம். இரண்டாம் முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் உள்நாட்டு பிரச்சினைகளிலும் சரி, அயலுறவு கொள்கைகளிலும் சரி தான்தோன்றித்தனமாக முடிவுகள் எடுக்கிறார். மக்களாட்சி விழுமியங்களை மதித்துத்தான் நடப்பார் என்ற நம்பிக்கையில் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தன்னிஷ்டப்படி பயன்படுத்துகிறார்.
அவருடைய நடவடிக்கைகள் அமெரிக்க குடியரசு விழுமியங்களை சிதைத்து பாழாக்குவதால் எழுபது இலட்சம் மக்கள் அமெரிக்க நகரங்களில் திரண்டு “வேண்டாம் மன்னர்” போராட்ட த்தை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு டிரம்ப் அளித்த எதிர்வினை பெரும் அதிர்ச்சியளிப்பது. அவர் ஒரு அனிமேஷன் காணொலியை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு மன்னரைப் போல ஆடை அணிந்த டிரம்ப் விமானத்தில் பறக்கிறார். அப்போது அவர் கழிக்கும் மலம் “வேண்டாம் மன்னர்” போராட்டக்காரர்கள் மீது பெருமழையாகப் பொழிகிறது. துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் மன்னரைப் போன்ற அலங்காரத்தில் டிரம்ப்பின் பட த்தை வெளியிட்டுள்ளார்.

மக்கள் அதிபர் டிரம்ப்பை மன்னர் என்று விமர்சித்தால், அவர் அதற்கு மறுப்புச் சொல்லாமல், நான் அப்படித்தான், மன்னர்தான் என்று கூறுகிறார். அவரது குடியரசுக் கட்சியும் அவரைக் கண்டிக்க இயலாமல் பம்முகிறது. ஒரு அமெரிக்க அதிபர் இவ்வளவு கேவலமாக மக்களின் போராட்ட த்தைக் கொச்சைப்படுத்துவார் என்பது எண்ணிப் பார்க்க முடியாததாக இருக்கிறது. நாளுக்கு நாள் அவரது எதேச்சதிகார செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
பொதுவுடமைப் புரட்சி நடந்த ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளிலுமே முதலீட்டிய பொருளாதாரம் நடைமுறைக்கு வந்துள்ளது மட்டுமன்றி, இரண்டிலுமே அதிபர்கள் ஆயுட்காலம் முழுவதும் அந்தப் பதவியில் நீடிப்பார்கள் என்ற நிலையே காணப்படுகிறது. ரஷ்யாவின் புடினும், சீனாவின் ஷி ஜின் பிங்கும் மன்னர்களைப் போலவே செயல்படுகிறார்கள் எனலாம். உலகின் பல நாடுகளிலும் மக்களாட்சி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

தமிழ்நாட்டு நிலை
இந்திய ஒன்றிய அரசில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சி, இந்திய கூட்டாட்சிக் குடியரசை, ஒற்றை தேசிய அரசாக மாற்ற முனைந்துள்ளது. மாநில உரிமைகளை பறித்து, அதிகாரத்தை ஒன்றிய அரசில் குவிக்கிறது. எதிர்கட்சிகளை பிளந்து அழித்து, தனக்கு அரசியல் எதிர்ப்பே இல்லாமலாக்க முயற்சிக்கிறது.
குறிப்பாக தேர்தல் நடைமுறைகளில் அது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் புறக்கணிக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் அது வாக்காளர்களை முறையின்றி அகற்றுவதாக க் கூறப்படும் புகார்கள் மக்களாட்சியின் அஸ்திவாரத்தையே தகர்க்கக் கூடியவை.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரலுக்கு சிறிதும் பாஜக மதிப்பளிப்பதில்லை. முக்கியமாக கடந்த பதினோரு ஆண்டுகளில் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்ததே இல்லை என்பதைக் கருதும்போது எப்படி ஆட்சியில் எதேச்சதிகாரத்தன்மை கூடிக்கொண்டே போகிறது என்பதைக் காணலாம்.
பாஜக-வின் இத்தகைய இந்துத்துவ பாசிச முன்னெடுப்பை தமிழ்நாட்டில் வளர விடாமல் தடுக்க தி.மு.க தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகள் அணி திரண்டுள்ளன. தி.மு.க துவக்கம் முதலே மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என கூட்டாட்சிக் குடியரசை வலியுறுத்தி வருவதால் பாஜக-வின் முக்கிய எதிரியாக விளங்குகிறது. இதைத்தவிர பாஜக-வின் வர்ண தர்ம மீட்புவாத சிந்தனையையும் அது கடுமையாக எதிர்த்து சமூக நீதி பேசுகிறது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டு கட்சிகள் தி.மு.க-வை மக்களாட்சிக்கு எதிரான கட்சியாக சித்தரிக்க முயல்கின்றன. தி.மு.க மக்களாட்சி விழுமியங்களை வளர்த்தெடுத்த ஒரு பேரியக்கம் என்பதை நாம் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். சில உதாரணங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

தி.மு.க-வின் வளர்ச்சியே மக்களாட்சியின் வளர்ச்சி
துவக்கம் முதலே தி.மு.க தனவந்தர்களின் கட்சியாகவோ, தொழிலதிபர்கள், நிலவுடைமையாளர்கள் கட்சியாகவோ விளங்கவில்லை; மாறாக சாமானியர்களை அரசியல்மயப்படுத்திய கட்சியாகவே உருவானது. கிளைகள், வட்டம், மாவட்டம், பொதுக்குழு, செயற்குழு என்ற பரவலான, வலுவான கட்சி அமைப்பை கட்டி எழுப்பிய கட்சி அது.
இந்த காரணத்தினால் அண்ணா, கலைஞர் போன்ற அரசியல் பேராளுமைகள் தலைமையேற்று நட த்தினாலும், கட்சி அணியினருக்கும் தலைமைக்கும் பெரிய இடைவெளி இருந்ததில்லை. அதே போல மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடைவெளி உருவானதில்லை; பத்திரிகையாளர்கள் எப்போதும் அணுக க் கூடியவர்களாகவே தலைவர்கள் இருந்தார்கள். எத்தனை குதர்க்கமான கேள்விகளைக் கேட்டாலும் பொறுமையாக பதில் சொல்லும் பண்பையும், ஆற்றலையும் கொண்டிருந்தார்கள்.
முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் பதவியை அண்ணா வகித்த போது தன் தொகுதியில் ஒரு கிராமத்திற்கு மக்கள் குறைகளைக் கேட்க அன்றைய முதலமைச்சர் காமராஜரை அழைத்துச் சென்றார். எதிர்கட்சி உறுப்பினர் என்று கருதாமல் காமராஜரும் சென்றார். மக்கள் நேரடியாக தங்கள் தேவைகளைச் சொல்லக் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கும், பங்கேற்றதற்கும் காமராஜரும், அண்ணாவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர்.
தி.மு.க-வின் வரலாற்றில் இத்தகைய உயர்ந்த மக்களாட்சி விழுமியங்களைக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். அந்த செழுமையான வரலாற்றின் வாரிசாக இன்றைய முதல்வர் ஸ்டாலின் விளங்கி வருகிறார். கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தினரும், பிற எதிர்கட்சியினரும் தி.மு.க அரசை எவ்வளவு விமர்சித்தாலும், முதல்வர் மிகுந்த பண்புடன் அதனை கடந்து செல்வது அவரது அசாதாரணமான அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
முதல்வரை வாரிசுத் தலைவர் என்று விமர்சித்தார்கள். ஒருவர் எப்படித் தலைவர் ஆகிறார் என்பது முக்கியமல்ல. அவர் எப்படி மக்களாட்சி மாண்புடன் செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம். வாரிசுத் தலைவராக இல்லாதவர் எதேச்சதிகாரியாக இருந்தால் அது மக்களாட்சிக்கு உதவுமா? உதாரணமாக ஜெயலலிதாவை எடுத்துக்கொண்டால் கட்சிக்காரர்களோ, பத்திரிகையாளர்களோ அவரை எளிதில் அணுகிவிட முடியாது. மக்கள் அணுகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஜெயலலிதாவின் அமைச்சரவை சகாக்களே பொதுமேடையில் அவர் காலில் விழுந்து வணங்குவார்கள். அவர் வரும் ஹெலிகாப்டரை வணங்குவார்கள். காரின் முன் விழுந்து வணங்குவார்கள். காரணம் அவர் எந்த நிமிட த்திலும் யாரை வேண்டுமானால் பதவியிலிருந்து விலக்குவார். எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து ஜெயலலிதாவிற்கு இருந்த வாக்குகளைக் கவரும் ஆற்றலே அ.இ.அ.தி.மு.க-வின் வெற்றிக்குக் காரணம் என நினைத்ததால் அனைத்து தலைவர்களும் அவர் காலில் விழக்கூடியர்களாக இருந்தார்கள்.
அவரைப் போல வெகுமக்கள் ஈர்ப்பு இல்லாதபோதும் இன்றைய அ.இ.அ.தி.மு.க தலைவர் பழனிசாமி அவர் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவரான செங்கோட்டையனையே சந்திக்க மறுக்கிறார். தன்னை முதல்வராக்கியவர்களையே எக்காரணம் கொண்டும் கட்சியில் இணைக்க முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறார். கட்சி விதிகளைத் திருத்தி இரட்டைத் தலைமை என்று அறிவித்து அதனை ஓ.பன்னீர்செல்வத்துடன் பகிர்ந்து கொண்டவர், அவரைத் திடீரென விலக்கிவிட்டு இன்று அருகில் சேர்க்க மறுக்கிறார். தான் பொதுச்செயலாளராகத் தொடரவேண்டும், முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்பதையே மையப்படுத்தி செயல்படுபவர், தி.மு.க தலைமை குறித்து விமர்சிப்பது வேடிக்கையானது.
ஆனால் தி.மு.க அவர் விமர்சனத்திற்கு பொறுப்பாக பதிலளிக்கிறது. நெல் கொள்முதல் பிரச்சினைகள் குறித்து பழனிசாமி பேசினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் களத்திற்குச் சென்று பணிகளை முடுக்கி விட்டார். தக்க தரவுகளுடன் எதிர்கட்சித் தலைவருக்குப் பதிலளித்தார். பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். களத்தில் கட்சியினருடனும், மக்களுடனும் எளிதில் கலந்து பழகுகிறார். முதல்வரைப் போன்றே எதேச்சதிகாரத்தன்மை சிறிதும் இல்லாதவராக துணை முதல்வர் உதயநிதியும் விளங்குகிறார்.
அ.இ.அ.தி.மு.க-வுடன் இணைந்து தி.மு.க தலைமையை விமர்சிப்பவர்கள் பாஜக கட்சியினர். அவர்கள் யாரும் சுலபத்தில் பிரதமர் மோடியை சந்தித்துவிட முடியாது. இந்திய வரலாற்றிலேயே பதினோரு ஆண்டுகாலம் பத்திரிகைகளையே சந்திக்காமல் கழித்த பிரதமர் இவர் ஒருவராகத்தான் இருப்பார். அவர் ஏழைத்தாயின் மகன், டீ விற்றவர், எளிய பின்னணியைச் சேர்ந்தவர் என்பதாலெல்லாம் மக்களுக்கு என்ன பயன்? இன்றைய நிலையில் எதேச்சதிகாரியாகத்தானே இருக்கிறார்?

அதற்கு நேர் மாறாக வாரிசு அரசியல் தலைவர் என விமர்சிக்கப்படும் ராகுல் காந்தி விளங்குகிறார். அனைத்து மக்களுடனும் எளிமையாகக் கலந்து பேசுகிறார். யார் கூறுவதையும் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கிறார். பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் கூறுகிறார். தமிழ்நாடு தேர்தல் பிரசாரத்தின்போது அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு, சாலையைக் கடந்து சென்று, ஸ்டாலினுக்கு இனிப்புகள் வாங்கியதை நினைத்தால் வியப்பாக இருக்கும்.
மக்களிடையே செல்ல அச்சப்படுபவர் தலைவராக இருக்க முடியாது. நடிகர் விஜய் தன் நட்சத்திர நடிகர் பிம்பத்தைத் தகர்த்து வெளியேறாமல், அரசியல் தலைவராக மாற முடியாது. அவர் சுலபமாக வெளியே சென்றால்தான் அந்த பிம்பத்தை தகர்க்க முடியும். பிரச்சினை என்னவென்றால் அந்த பிம்பம் இல்லாவிட்டால் விஜய் எந்த அரசியலும் பேச முடியாதவராகத்தான் இருக்கிறார். அவர் கட்சியும் அந்த பிம்பத்தை மட்டுமே நம்பியிருப்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. தன் பிரசாரத்தில் நெரிபட்டு இறந்தவர்கள் குடும்பங்களைக் கூட அவர் மாமல்லபுரத்திற்கு வரவழைத்துதான் சந்திக்கிறார் என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, மோடியின் தொண்டர்கள், விஜய் ஆதரவாளர்கள்தான் தி.மு.க எப்படி மக்களாட்சியை காக்க வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள் என்பது நகைச்சுவை. எழுபத்தி ஐந்து ஆண்டுகள் இந்த குடியரசுடன் இணைந்து வளர்ந்து மக்களாட்சியை நிலைபடுத்திய தி.மு.க-விடம் அவர்கள் கற்பதற்குத்தான் நிறைய இருக்கிறது.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
