கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் கரூர் சென்று விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வில்லை.இன்று, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வரவழைத்து ஆறுதல் கூறி வருகிறார்.
இதற்கிடையே கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுபோன்று அரசியல் கட்சி பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு, தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் கேட்ட மனு ஆகியவை இன்று (அக்டோபர் 27) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா, மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் முதல் வழக்காக காலை விசாரணைக்கு வந்தது.
முதலில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்ஜாமின் கேட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரர் சார்பில் இந்த மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதை ஏற்று அம்மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
மேலும் கரூர் கூட்ட மெர்சல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கேட்டு மதுரையைச் சேர்ந்த ராஜன் தொடர்ந்த வழக்கு, ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு என அனைத்தையும் ஒத்திவைத்த நீதிபதிகள் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
அப்போது அரசியல் கட்சிகளின் பேரணிகள் பொதுக்கூட்டங்களை ஒழுங்கு படுத்துவதற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 10 நாட்கள் அவகாசம் வழங்கியது.
அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் இடைக்கால வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தால் வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறினார்.
அனைத்து வழக்குகளும் நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
