மனம் வெந்து போகிறது… மன்னிக்கவே முடியாது : சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி வேதனை – முழு தண்டனை விவரம்!

Published On:

| By Kavi

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

2020ஆம் ஆண்டு கொரோனா பொது முடக்கத்தின் போது, ஊரடங்கு உத்தரவை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

ADVERTISEMENT

அப்போது போலீசார் தாக்கியதில் ஜெயராஜும், பென்னிக்ஸும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், போலீசார் தாக்கியதால் தான் இருவரும் உயிரிழந்தனர் என்று 2000 பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்தநிலையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி முத்துக்குமரன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

தொடர்ந்து இன்று தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 9 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

இந்த உத்தரவை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களான விஸ்வராஜ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார். இவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நீதிமன்றத்துக்கு இல்லை.  

குற்றத்தின் அளவை பார்க்கும் போது, கொரோனா காலத்தில் கடையை திறந்தார்கள்  என்பதற்காக கொடூரமாக தாக்கியுள்ளனர்.  உயர் நீதிமன்றம் இந்த வழக்கை  சூமோட்டோவாக எடுத்து விசாரிக்காவிட்டால், உடலை அடக்கம் செய்வதற்கு முன்பே இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் என்று நீதிபதி குறிப்பிட்டார். 

இது முழுக்க முழுக்க மனித கண்ணியத்தை மீறும் செயலாக அமைந்திருக்கிறது என்றும் உத்தரவின் போது நீதிபதி முத்துக்குமரன் கூறினார்.

இவர்கள் செய்த குற்றத்தை மன்னிக்கவே முடியாது. இந்த குற்றவாளிகளின் குடும்ப சூழலை காரணம் காட்டி இவர்களை விட வேண்டிய அவசியமில்லை. கல்வியறிவு உடையவர்களாக இருந்துகொண்டு இந்த செயலை செய்துள்ளனர். வேலியே பயிரை மேய்ந்த கதை என்று நீதிபதி இரண்டு முறை குறிப்பிட்டார். 

இரவு முழுவதும் இருவரையும் அடித்திருக்கிறீர்கள். இதை பார்க்கும் போது மனமே வெந்து போகும் அளவுக்கு இருக்கிறது. 

பென்னிக்ஸின் தாயாரின் துக்கத்தை யாராலும் நீக்க முடியாது. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது. 

தனிநபர் தவறு செய்வதற்கும் அரசு அதிகாரிகள் தவறு செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. 

ஒரு குடும்பத்தின் ஆணிவேரே பிடுங்கப்பட்டுள்ளது.  இது சாதாரண குற்றம் அல்ல.  அரிதினும் அரிதான வழக்கு. 

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை தான் கொடுப்பார்கள். 14 ஆண்டுகளில் வெளியே வந்துவிடலாம் என்று குற்றவாளிகள் நினைப்பார்கள். ஆனால்  இவர்களை இப்படி விடுவதற்கு தயாராக இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். 

இதுபோன்ற குற்றத்துக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழக்குகளில் கூறியிருக்கிறது.  பென்னிக்ஸும், ஜெயராஜும் தாங்களே தாக்கிக் கொண்டனர் என குற்றவாளிகள் கூறுகிறார்கள். ஆனால் ஏற்கனவே  இதுபோன்று  உங்கள் காவல்நிலையத்துக்கு வந்த இருவருக்கு காயம் இருந்திருக்கிறது. அப்படியானால் உங்கள் காவல் நிலையத்துக்கு வருபவர்கள் எல்லாம் அவர்களே தாக்கிக் கொள்வார்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இன்றைய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.  இது உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட வழக்கு. எனவே இவர்கள் உயர் நீதிமன்றம் சென்றாலும் வழக்கு டிஸ்மிஸ் ஆகிவிடும்” என்றனர்.

மேலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரத்தை கூறிய அவர்கள், ”முதல்குற்றவாளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனையும் 201ஆவது பிரிவுபடி இரண்டு 7ஆண்டுகள் சிறை தண்டனையும், 84 லட்சத்து  10 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது குற்றவாளி பாலகிருஷ்ணனுக்கு இரட்டை மரண தண்டனையும், ஒரு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதம் 84 லட்சத்து 10,000மும் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

மூன்றாம்  குற்றவாளி  எஸ்.ஐ ரகு கணேசிற்கு  இரட்டை மரண தண்டனையும், இரண்டு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், ஓராண்டு சிறை தண்டனை ஒன்றும், 52 லட்சம் அபராதமும் நீதிமன்றம் விதித்திருக்கின்றது.

நான்காம்  குற்றவாளி தலைமை காவலர் முருகனுக்கு இரட்டை மரண தண்டனையும்,  ஏழாண்டுகள் சிறை தண்டனை இரண்டு பிரிவுகளிலும் ஓராண்டு சிறை தண்டனை ஒரு பிரிவிலும், மூன்றாண்டு சிறை தண்டனை ஒரு பிரிவிலும் நீதிமன்றம் வழங்கி இருக்கின்றது. 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கின்றது.

ஐந்தாவது குற்றவாளி சாமிதுரைக்கு இரட்டை தூக்கு தண்டனையும் ஒரு பிரிவின் கீழ் ஏழாண்டு சிறை தண்டனையும். மற்றொரு பிரிவின் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்திருக்கின்றது.

ஆறாவது குற்றவாளி முத்துராஜுக்கு இரட்டை மரண தண்டனையும் , ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை இரண்டு பிரிவுகளிலும்,  மூன்றாண்டுகள் சிறை தண்டனை ஒரு பிரிவிலும் ஓராண்டு சிறை தண்டனை ஒரு பிரிவிலும் 32 லட்சம் அபராதமும் நீதிமன்றம் விதித்திருக்கின்றது.

ஏழாம் குற்றவாளி காவலர் செல்லதுரைக்கு இரட்டை மரண தண்டனையும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை ஒரு பிரிவிலும் ஓராண்டு சிறை தண்டனை ஒரு பிரிவிலும் நீதிமன்றம் விதித்திருக்கின்றது.

எட்டாம் குற்றவாளி தலைமை காவலர் தாமஸ் பிரான்சிஸுக்கு இரட்டை மரண தண்டனையும், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை ஒரு சட்டப்பிரிவிலும், ஓராண்டு சிறை தண்டனை ஒரு சட்டப்பிரிவிலும், ஒரு சட்டப்பிரிவில் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், 40 லட்சத்து 46,000 அபராதமும் நீதிமன்றம் விதித்திருக்கின்றது.

ஒன்பதாவது குற்றவாளி காவலர் வெயிலுமுத்துவுக்கு இரட்டை மரண தண்டனையும், ஏழாண்டுகள் சிறை தண்டனை ஒரு சட்டப்பிரிவிலும், ஓராண்டு சிறை தண்டனை ஒரு சட்டப்பிரிவிலும் வழங்கி இருக்கின்றது. 10,54,000 ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது.

மற்றொரு குற்றவாளி பால்துறை இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை எதுவும் நீதிமன்றம் வழங்கவில்லை” என்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share