முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளார். அந்த கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார் சசிகலா.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டில் இன்று பிப்ரவரி 24-ந் தேதி நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் சசிகலா இதனை அறிவித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா கூறியிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, எந்த வகையிலும் சசிகலாவை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
அதேபோல, அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன் தம்மிடம் சொல்லாமலேயே முடிவு எடுத்துவிட்டார் என்கிற கோபத்தில் சசிகலா இருந்தார்.
இதனையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் தமது ஆதரவாளர்கள் போட்டியிடுவார்கள் என அறிவித்தார் சசிகலா. அத்துடன் சென்னை, தஞ்சாவூரில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இன்று ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ”களம் காண்போம்.. அம்மாவின் ஆட்சி அமைப்போம்” என்ற முழக்கத்துடன் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தினார் சசிகலா.
இம்மாநாட்டில் தாம் புதிய கட்சியைத் தொடங்கி இருப்பதாக அறிவித்த சசிகலா அக்கட்சியின் பெயரை விரைவில் அறிக்க இருப்பதாக கூறினார். மேலும் கட்சியின் கொடியையும் சசிகலா அறிமுகப்படுத்தினார். ”கறுப்பு- வெள்ளை- சிவப்பு” நிறத்திலான இந்த கொடியின் நடுவில் வெள்ளையில் அண்ணா- எம்ஜிஆர்- ஜெயலலிதா உருவங்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய கட்சி ஏன்? சசிகலா பேசியது என்ன?
புதிய கட்சி தொடக்கம் குறித்து சசிகலா பேசியதாவது: 2021 தேர்தல்ல (எடப்பாடி) சொல்றாரு, இப்ப வந்து உடனே வந்து எதுவும் பண்ண முடியாத நேரம். அதனால இந்த ட்ரிப் இருக்கட்டும்ங்க, நாங்க மொதல்ல பார்க்கிறோம் என்றனர்.
சரி, ரைட். அதுக்கும் சரி நீங்க பாருங்க, ஜெயிங்க நல்லது தான் அப்படின்னு சொன்னேன். இதுவரைக்கும் பார்த்தீங்கன்னா 10 முறை தேர்தல்ல தோல்வியை மட்டும் தான் பார்த்திருக்கோம். வெற்றி பெறல.
அதனால எதிர்கட்சிகள் எப்படி இருக்கு? மோசமா இருக்கு. ஏதாவது நல்ல ஆட்சி பண்ணுதா? பண்ணல. ஆனா தமிழ்நாட்டு மக்கள் வந்து நம்மளுக்கு கொடுக்கிற ஆதரவை என்னைக்கும் அவங்க மனசுல இருந்து எடுக்கல. ஆள் சரியில்லை அப்படிங்கிறப்ப அவங்க வேற மாதிரி நினைக்கிறாங்க. இன்னும் திருந்தலையே அப்படிங்கிற நினைப்புக்கு போறாங்க.
அம்மாவை (ஜெயலலிதாவை) எத்தனையோ முறை 13 கேஸ் போட்டாங்க. 13 கேஸ்ல 12 கேஸ்ல நாங்க விடுதலையானோம். அந்த ஒரு கேஸ் தான் கடைசியில இருந்தது. அந்த கேஸையும் நாங்க வந்து சாதாரணமான கேஸ் தான் அது, இதுல இப்படிலாம் ஆகுறதுக்கே வாய்ப்பே இல்லை. இதுல கருணாநிதி என்ன பண்ணாரு அப்பவே ரொம்ப சூட்சமமா பண்ணாரு. அரசாங்க பதவியில இல்லாத என்னையும் அதுல சேர்த்து இவ தான் கூட இருந்துகிட்டு எல்லாம் பண்ணிட்டு இருக்கா, அதனால இவளையும் இந்த கேஸ்ல சேர்த்துரணும்னு தான் 96-ல சேர்த்தது. அதுதான் இப்படி நடந்தது.
ஆனா ஒன்னு சொல்றேன், சட்டமோ அதிகாரமோ கொடுக்கிற தீர்ப்பை விட மக்கள் கொடுக்கிற தீர்ப்பு தான் மகத்தானது. அதை தமிழ்நாட்டு மக்கள் அம்மாவுக்கு தொடர்ந்து கொடுத்திருக்காங்க. நீ என்ன தான் அம்மா மேல தண்டனைன்னு சொன்னாலும், திருப்பி வெற்றி பெற்று வந்து திருப்பி ஜெயிக்கிறாங்க அம்மா. அதனால தமிழ்நாட்டு மக்கள் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. அதனால அவங்க என்னைக்கும் நம்மள விடமாட்டாங்க.
அதனால நான் இப்ப ஒரு இந்த மன்றத்துல தான் அந்த முடிவை எடுக்கணும் அப்படிங்கிறதுக்காக என் மனசுல உள்ளதெல்லாம் உங்களுக்கு சொல்லிட்டேன். எல்லாத்தையும் சொல்லிட்டேன் உங்கள்ட்ட. இப்ப என்ன நினைக்கிறேன், இந்த சமயத்துல நான் வந்து… நான் பேசாம இருந்தேன்னு வைங்க, நான் இந்த மாதிரி 9 வருஷம் இந்த மாதிரி தொடர்ந்து இருந்தேன்னா புரட்சித் தலைவி அம்மாவினுடைய வழிவந்த கழகத் தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் செய்கின்ற பெரிய துரோகமாயிடும்.
அதனால என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்திருக்கேன். தமிழகத்திற்காக, தமிழகத்தில் உள்ள மக்களுக்காக, நம் கழகத் தொண்டர்களுக்காக புதிய களத்தைக் காணப்போகிறோம். ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகிறோம்.
இது ஒரு திராவிடக் கட்சியாக, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் ஏழை எளிய சாமானிய மக்களுக்கான ஒரு கட்சியாக, எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுக்கின்ற ஒரு கட்சியாக இது செயல்படும்.

நமது கட்சியின் கொடியை இங்கே அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் உருவத்தைத் தாங்கி நிற்கின்ற ஒரு கொடியாகப் பட்டொளி வீசிப் பறக்கும். கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன். இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்பதை அனைவருக்கும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். களம் காண்போம், நம் இருபெரும் தலைவர்களின் பொற்கால ஆட்சியை அமைப்போம். இவ்வாறு சசிகலா கூறினார்.
