தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டலை விடுவித்து தேர்தல் ஆணையம் இன்று (ஏப்ரல் 11) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக எம். சாய்குமார் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை இயக்குநராக சந்தீப் மிட்டலை நியமித்து தலைமைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.கழகத்தின் சார்பில், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதில் டாக்டர் சந்தீப் மிட்டலை DVAC-இன் தலைமை இயக்குநராக (DGP) நியமித்திருப்பதற்கு கடும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. மேலும் மிட்டல் பொதுவெளியில் வெளியிட்டுள்ள கருத்துக்கள், அவர் RSS மற்றும் பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்பதையும், முஸ்லிம்களுக்கும் இடதுசாரிச் சித்தாந்தத்திற்கும் எதிராக வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய நீண்டகாலப் பின்னணியைக் கொண்டவர் என்பதையும் எங்கள் மனதில் எவ்வித ஐயமுமின்றி உறுதிப்படுத்துகின்றன. அவர் மீது கடுமையான ஊழல் மற்றும் முறைகேடான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன. இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒரு அதிகாரியை DVAC-இன் (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை) தலைவராக நியமிப்பது, பொதுமக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது என திமுக தரப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக இருந்த சந்தீப் மிட்டலை விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய மாற்றத்தால் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
