புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 6) புதுச்சேரிக்கு வருகைத் தந்தார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “இங்கே வருகின்ற போது என் மனதில் கவலைகள் உண்டானது. ஏனென்றால் இந்த மாநிலத்தை நடத்துகின்ற முறை – இப்பொழுது இந்த மாநிலத்தை நடத்துகிறவர்கள், ஆட்சி செய்கிறவர்கள் இந்த மாநிலத்தின் மண்ணின் மைந்தர்கள் அல்ல. அவர்கள் எங்கேயோ இருந்து இந்த மாநிலத்தை ஆட்சி செய்கிறார்கள்” என்று பாஜகவை விமர்சித்தார்.
பாஜாவின் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் இந்த மண்ணில் புகுத்த நினைக்கிறார்களேதவிர, புதுச்சேரியினுடைய மக்களுடைய எண்ணத்தை உள்வாங்கி அவர்கள் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு நடத்துகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி நடக்கவில்லை என்று கூறிய ராகுல் காந்தி, “துணை நிலை ஆளுநரை வைத்துக்கொண்டு இந்த மாநிலத்தை ஆட்டி படைக்கிறார்கள்.
இந்த மாநில மக்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ அல்லது மக்களுடைய விருப்பமோ இங்கே நிறைவேற்றப்படுவதில்லை. இங்கு பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதில்லை.
இங்கே உயிரோட்டமாக இருந்த தொழில்துறை கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து இறந்து கொண்டிருக்கிறது புதுச்சேரியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.
இங்கே பாஜக அரசு தாங்கள் நினைக்கின்ற எண்ணங்களையும் சித்தாந்தங்களையும் மட்டுமே இங்கே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறது.
இங்கே இருக்கின்ற காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே அதானிக்கு விற்கப்பட்டுவிட்டது.
இங்கு பாஜக அரசு தொடர்ந்தால் மாநிலத்தில் இருக்கின்ற மின்சாரம் முதற்கொண்டு அத்தனை அரசாங்க இயற்கை வளங்களும் அதானி குடும்பத்திற்கு விற்கப்பட்டுவிடும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

இங்கு நிறைய அளவிலே உற்பத்தி தொழில் நடந்து கொண்டிருந்தது, வேலைவாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நசிந்து வருகின்ற சூழ்நிலை இருக்கிறது.
எல்லோருக்கும் தெரியும், புதுச்சேரி மாநில அரசிலே கொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் 30 %கமிஷன் வாங்கப்படுகிறது.
குடிநீர் திட்டங்களாக இருந்தாலும் சரி, வடிகால் திட்டங்களாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடத்திற்கு கட்டிடங்கள் கட்டுவதாக இருந்தாலும் சரி, அரசாங்கத்திலே எந்த துறை நடந்தாலும் அதிலெல்லாம் கமிஷன் வாங்குவது மட்டுமே இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.
இங்கு பள்ளி, கோயில்களுக்கு அருகே மதுபான கடைகள் திறக்கப்படுகின்றன. பொதுமக்கள் எவ்வளவு தூரம் தங்களுடைய ஆட்சேபனை தெரிவித்தாலும் கூட, அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் கல்வி நிலையங்களுக்கு எதிராகவும் வழிபாட்டு தலையங்களுக்கு அருகிலும் திறக்கப்படுகின்ற மதுபான கடைகள் புதுச்சேரியிலே சமூக அமைதிக்கு பங்கம் வருகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இங்கே மக்களிடமிருந்து கொள்ளை அடிக்கவில்லை, அவர்கள் கடவுளிடமிருந்தும் இறைவனிடமிருந்தும் இங்கே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே ஆலயங்களுக்கு சொந்தமான இடங்களை கொள்ளை அடித்து அதையும் விற்பனை செய்திருக்கிறார்கள்.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை” என்று என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி, “புதுச்சேரியில் வேலை இல்லாமல் இருக்கின்ற ஒவ்வொரு இளைஞருக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும்.
ஆட்சிக்கு வந்த உடனே அரசாங்கத்திலும் தனியார் துறையிலும் 30,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
புதுச்சேரியில் பெண்கள் இலவசமாக பேருந்துகளிலே பயணம் செய்யக்கூடிய நல்ல வாய்ப்பை பெறுவீர்கள்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீட்டு வசதியை பெறும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “எல்லாவற்றிற்கும் மேலாக மிக உறுதியான உறுதிமொழி என்னவென்று சொன்னால், வரக்கூடிய அரசு புதுச்சேரி மக்களுடைய உணர்வுகளையும் ஆசைகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்க கூடிய அரசாக இருக்கும்.
புதுச்சேரியை ஒரு துணைநிலை ஆளுநர் மட்டுமே ஆள்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. புதுச்சேரியின் மண்ணின் மைந்தர்களே ஆள வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
காங்கிரஸ் ஆட்சி பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் புதுச்சேரி மாநிலத்திலே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
காங்கிரஸ் கட்சியினுடைய வேட்பாளர்களையும் நம்முடைய கூட்டணி கட்சியினுடைய வேட்பாளர்களையும் ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என வாக்கு சேகரித்தார்.
