காங்கிரஸை விளாசிய திமுக MLA தளபதி.. கொந்தளித்த செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார்

Published On:

| By Mathi

Congress DMK

ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்துப் பேசிய மதுரை வடக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ. கோ. தளபதி மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்கள் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ADVERTISEMENT

மொழி, சமூக நீதி, ஜனநாயக உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்ற வேண்டிய மேடையில், கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கோ.தளபதி அவர்களின் பேச்சு தேவையற்றதும், கண்டிக்கத்தக்கதுமானதும் ஆகும்.

காங்கிரஸ் பேரியக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வருகிறது. 100% பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது; 85% கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைப்பு சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராம சபை தொடர்பான பணிகள் மூலம், மக்களின் உரிமை, மரியாதை, வாழ்வாதாரம் குறித்த போராட்டத்தை காங்கிரஸ் பேரியக்கம் நேரடியாக மக்களிடையே கொண்டு சென்று வருகிறது.

ADVERTISEMENT

கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார்: ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்பதுபோல் காங்கிரஸ் கட்சியை தாக்குவது பொறுப்பற்ற அரசியல்; அடுத்த கட்சிகளின் சீட்டு விவகாரங்களில் தலையிடுவது அரசியல் நாகரிகமல்ல.
மதவாத பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கும் இடையிலான நல்ல நட்புக்கும், ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களை யாரும் மேற்கொள்ளக் கூடாது.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பிக்களான திரு. மாணிக் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோரைக் குறித்து பேசப்பட்ட கருத்துகளுக்கு கோ. தளபதி MLA அவர்கள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

திமுக எம்.எல்.ஏ. தளபதி பேசியது என்ன?:

மதுரையில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாளில் பேசிய தளபதி MLA, “மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் எம்பி ஆகிவிட்ட நிலையில் தற்போது ஆட்சியில் பங்கு வேண்டும் கேட்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் இனி சீட்டே கொடுக்கக் கூடாது. தலைமை புரிந்துகொள்ள வேண்டும்” என பேசியிருந்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share