பூந்தமல்லியில் ‘போலீஸ்’ என காரின் முன்பகுதியில் ஸ்டிக்கர் ஒட்டி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த சினிமா தயாரிப்பாளர் உட்பட இருவரை வாகன சோதனையின்போது போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 240 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொரோனா தொற்று காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் வரும் வாகனங்களை போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரின் முன்பகுதியில் போலீஸ் என ஸ்டிக்கரை ஒட்டியதைக் கண்டு போலீஸார் காரை நிறுத்தி விசாரித்தனர். அதில், காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதில் சந்தேகமடைந்த போலீஸார், காரின் பின் பகுதியில் சோதனை செய்தபோது பெட்டிகளில் விலையுயர்ந்த மதுபான பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த நபர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் உறவினர்கள் என்பதும் அவருக்குத் தெரியாமல் காரில் மதுபானம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான கலைச்செல்வம், ஆனந்தராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 240 மதுபான பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து அம்பத்தூர் மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
**-ராஜ்**
