டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (மார்ச் 26) அக்கட்சியினர் பேரணி செல்ல டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் மார்ச் 21 அன்று கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவல் வரும் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் வெடித்தன. தமிழகத்திலும் திமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மார்ச் 31ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்த பேரணியை நடத்த ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இந்த பேரணியை முன்னிட்டு, டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றுப்பாதை போன்ற முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.
அதன்படி, துக்ளக் சாலை, சப்தர்ஜங் சாலை மற்றும் கெமல் அட்டதுர்க் மார்க் போன்ற சாலைகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த பகுதிகளில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அதேபோல், பேரணி செல்லக்கூடிய சாலைகள் வழியாக செல்பவர்கள் அவர்களது பயணத்தை முன்னதாக திட்டமிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் தொழிலாளர்கள் இன்று காலை 10 மணிக்கு டெல்லி படேல் சவுக் பகுதியில் இந்த பேரணியை தொடங்க இருந்தனர்.
அங்கிருந்து துக்ளக் சாலை வழியாக உயர் பாதுகாப்பு லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாக செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ஆம் ஆத்மி கட்சியினர் இந்த பேரணியை நடத்த, தற்போது டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…