மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசு அதிகாரிகள் நியமன மசோதா டெல்லி மக்களை அடிமைப்படுத்தும் மசோதா என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனங்கள், பதவி உயர்வு இடமாற்றம் தொடர்பாக துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டமியற்றியது. இந்த சட்ட மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தினர்.
இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஊழலை மறைக்கவே அதிகாரிகள் நியமன மசோதாவை டெல்லி அரசு எதிர்க்கிறது. டெல்லிக்கான சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. கூட்டணியில் இருப்பதால் டெல்லி அரசின் ஊழலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள் நியமன மசோதா நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த மசோதாவை எதிர்த்து மக்களவையில் பேசினர். எதிர்க்கட்சி எம்.பிக்களின் கடும் அமளிக்கு மத்தியில் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் அமித்ஷாவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லி மக்களின் உரிமைகளை பறிக்கும் மசோதா குறித்த அமித்ஷாவின் பேச்சை கேட்டேன். மசோதாவை ஆதரிப்பதற்கான ஒரு சரியான வாதமும் அவரிடம் இல்லை. அவர் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசுகிறார். இது டெல்லி மக்களை அடிமைப்படுத்தும் மசோதா. டெல்லி மக்களை ஆதரவற்றவர்களாக்கும் மசோதா. இந்த மசோதாவை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் வணிகர் சங்க நிர்வாகிகள்!