இந்தியா பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. Petrol and diesel shortage
இந்தியா பாகிஸ்தான் இடையே ராணுவ தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்பதாகவும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று (மே 8) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “எங்கள் நிறுவனம் நாடு முழுவதும் போதுமான எரிபொருள் இருப்புகளைக் கொண்டுள்ளது.
பெட்ரோல் டீசல் மற்றும் எல்பிஜி கேஸ் ஆகியவை போதுமான அளவு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எங்கள் விநியோக சங்கிலி சீராக இயங்குகின்றன.
அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் எளிதாகக் கிடைக்கும். பீதியுடன் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அமைதியாக இருப்பதன் மூலமும் தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதன் மூலமும் விநியோக சங்கிலியைத் தடையின்றி பராமரிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.
பாரத் பெட்ரோலியம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா முழுவதும் எங்கள் நெட்வொர்க்கில் பெட்ரோல் டீசல் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகியவை போதுமான அளவு இருப்புள்ளது.
நுகர்வோரின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் கவலைப்படவோ மீதியடையவோ வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்து வருவதால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தச்சூழலில் இந்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. Petrol and diesel shortage