திருப்பரங்குன்றத்தை தவிர வேற பிரச்சினையே இல்லையா? மனுதாரருக்கு அபராதம்!

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றத்தை தவிர தமிழ்நாட்டில் வேறு பிரச்சனை இல்லையா? என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டதை தொடர்ந்து, பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்குகளை நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் விசாரிக்க நேற்று தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அதில், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்துக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அதிகாரிகள் அனுமதி கொடுப்பதில்லை. ஆனால் ரம்ஜான் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் மலையேறி வழிபட அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

எனவே இந்துக்களையும் மலையேற அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆனால் அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல விடாமல் இந்துக்களை தடுக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப்ரல் 9)விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் பிரச்சனையை தவிர வேறு எதுவும் இல்லையா. திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக எத்தனை வழக்குகள் தான் தொடுப்பீர்கள். நீதிமன்றத்துக்கு வேறு வேலை இல்லையா.

இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டுமானால் மனுதாரர் 10 லட்சம் ரூபாய் கோயில்களில் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். அப்படி பணம் செலுத்தினால் மனுவை விசாரணைக்கு எடுக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்த ராஜன் ஆஜராகி, ‘மனுதாரர் இதே வேலையாகத்தான் இருக்கிறார். எனவே அரசுக்கு மிகப்பெரிய இழப்பீடு ஏற்படுகிறது.

மனுதாரரின் வழக்குக்காக மட்டும் மாநில அரசு வழக்கறிஞர்கள் கட்டணம், மத்திய அரசின் வழக்கறிஞர்கள் கட்டணம் என பல லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.

எனவே இந்த மனுவை சாதாரணமாக தள்ளுபடி செய்யக்கூடாது. அப்படி செய்தால் மீண்டும் அவர் இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, “இதுபோன்ற கோரிக்கைகளுடன் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி ஆகியுள்ளது. மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதித்து இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நீதிபதிகள் மனுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினர்.

இதற்கு மனுதாரர் சார்பில் அபராத தொகையை எங்களால் கட்ட முடியாது. இனி இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்ய மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 50000 ரூபாய் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் கூறினர். இதற்கு மனுதாரர் தரப்பில், இந்தத் தொகையை கட்ட முடியாது. நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும். மனுவை வாபஸ் பெறுகிறோம் என்று வேண்டுகோள் வைத்தனர்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “ஊடகங்களில் தனது பெயர் வர வேண்டும் என்ற விளம்பர நோக்கில் மனுதாரர் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்கிறார் என்பது தெரிய வருகிறது.

இனிமேல் தேவையற்ற மனுக்களை பொதுநல மனுவாக தாக்கல் செய்ய மாட்டேன் என்று நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்தால் அபராதத்தை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கிறோம். இப்போது இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share