நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டும் மத்திய அரசு- மிகப் பெரிய சதி.. அந்த 2 மசோதாக்கள்.. எச்சரிக்கும் ப.சிதம்பரம்

Published On:

| By Mathi

PChidambaram

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டுவதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது: ஏப்ரல் மாதம் 16, 17, 18 ஆகிய நாட்களில் நாடாளுமன்ற இரண்டு அவைகளையும் கூட்டுவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

26 மார்ச் அதாவது ஏறத்தாழ எட்டு நாட்களுக்கு முன் இது சம்மந்தமாக காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் வந்தது. அன்றே அவர் பதில் எழுதினார். இந்த 106-வது அரசியல் சட்ட திருத்த மசோதா 30 மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.

அதைப்பற்றி 30 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்ப நாடாளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்திருக்கிறீர்கள். நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு முன் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் அவர்கள் தலைமை ஏற்று நாடாளுமன்றத்தை கூட்டுவதைப் பற்றி, நாடாளுமன்றம் கூட்டினால் அதிலே என்ன பொருளைப் பற்றி, என்ன மசோதா நிறைவேற்றுவது என்று முதலிலே விவாதிக்க வேண்டும் என்று பதில் எழுதினார்.

ADVERTISEMENT

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றக் கூட்டம் ஏப்ரல் மாதம் 16, 17, 18 ஆகிய நாட்களில் கூடும் என்று எங்களுக்கு டெல்லியிலிருந்து செய்தி வந்திருக்கிறது.

அதே நேரத்தில் இரண்டு செய்திகளும் வந்திருக்கின்றன.

ADVERTISEMENT

ஒரு செய்தி, இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகையை 543 (மக்களவை), அதை 50% கூட்டுவதாக – அதாவது 543 என்பது 816-ஆக உயரும் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது. அதற்கான ஒரு மசோதாவைக் கொண்டு வரப் போகிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறது.

அடுத்த செய்தி, தொகுதிகளை மறுவரையறை செய்யும் மசோதாவும் கொண்டு வரப்படும் என்று செய்தி வருகிறது.

இந்த இரண்டு செய்திகளும் மத்திய அரசினுடைய 26 மார்ச் கடிதத்தில இல்லை. ஆனால் பரவலாக டெல்லியிலே பேசப்படுகிறது, ஊடகங்களிலே செய்தி வந்து கொண்டிருக்கிறது, உங்கள் ஊடகங்களிலேயும் இந்தச் செய்திகளை நீங்கள் ஒளிபரப்பி இருக்கிறீர்கள்.

இதல பெரிய பேராபத்துகள் இருக்கின்றன.

ஒன்று, தமிழ்நாட்டுல 39 மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சிகளிலே இருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்துல 42 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அதல 28 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

39-ம் 28-ம் 67 உறுப்பினர்கள் அவரவர் மாநிலத்துல தேர்தல் பணிகளில ஈடுபட்டிருப்பார்கள். உதாரணமாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினர் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதிக்கு தேர்தல் நாள் குறித்த பிறகு, எப்படி ஏப்ரல் மாதம் 16, 17, 18 சிவகங்கை தொகுதியை விட்டு டெல்லிக்கு போக முடியும்?

இது ஒரு சதி. 67 மக்களவை உறுப்பினர்கள் அந்த சபைக்கு மக்களவை கூட்டத்துக்கு வரக்கூடாது என்பதற்காக ஏப்ரல் 16, 17, 18 என்ற நாள் குறித்திருக்கிறார்கள். அதற்கு காங்கிரஸ் தலைவர் எழுதிய பதிலில, நீங்க அப்படித்தான் அவையை கூட்டணும்னா ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கூட்டுங்க. ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி கூட்டுவதை விட ஏப்ரல் மாதம் 29 கூட்டுனா எல்லா மக்களவை உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம்னு பதிலளிச்சிருக்காரு.

அதே போல மாநிலங்களவை, தமிழ்நாட்டுல 18 ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்காங்க. ஒருத்தர் ரெண்டு பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகள், மத்திய அரசுக்கு எதிரான கட்சிகள். அதைப் போல மேற்க வங்காளத்துல இருக்கிற ராஜ்யசபா உறுப்பினர்கள் ஒரு சிலரைத் தவிர திரிணாமூல் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக பேசக்கூடிய, வாக்களிக்கக்கூடிய உறுப்பினர்கள்.

இப்ப அரசியல் சாசன திருத்தத்தை மீண்டும் கொண்டு வருகிறார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இன்றைய 543 மக்களவை தொகுதி எண்ணிக்கையை 816 ஆக 50 சதவீதம் கூட்ட வேண்டுமென்றால் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். மறு வரையறை அதற்கும் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும்.

அரசியல் சாசன திருத்தம் என்பது நாடாளுமன்ற அவை கூட்டத்துல கலந்து கொள்கிறவர்கள் அங்கே வாக்களிப்பவர்கள் மூன்றிலே இரண்டு பகுதி பெரும்பான்மை வேணும். ஆங்கிலத்துல டூ தேர்டு மெஜாரிட்டினு (Two-third majority) சொல்லுவாங்க, ஸ்பெஷல் மெஜாரிட்டி (Special majority) சிறப்பு பெரும்பான்மை வேணும்.

மக்களவை தொகுதியில 67 உறுப்பினர்களை கழித்துவிட்டு, மாநிலங்களவை உறுப்பினர்களில ஏறத்தாழ 25, 30 பேரை கழித்துவிட்டா நாடாளுமன்ற இரண்டு அவைகளிலேயும் திருத்தம் நிறைவேறும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. அது நம்பிக்கையா நப்பாசையானு தெரியாது. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்த்து வாக்களித்தால் மக்களவையிலேயும் இந்த அரசியல் திருத்த மசோதா தோற்கும், மாநிலங்களவையிலேயும் அரசியல் திருத்த மசோதா தோற்கும்.

அது அவங்களுக்குத் தெரியும். பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சருக்கெல்லாம் தெரியாதது அல்ல, கணக்குதானே? இரண்டு அவைகளிலேயும் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டுமென்றால் அந்த மசோதாக்கள் தோற்கும். அதற்காகத்தான் தமிழ்நாடு, மேற்க வங்கம் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி இருக்கும் நிலையில ஏப்ரல் 16, 17, 18 நாட்களிலே அவையைக் கூட்டுகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கல, நாங்கள் திடமாக நம்புகிறோம். இது சதி, இது அரசியல் சாசனத்திலே ஒரு மோசடி, இது நாடாளுமன்ற விதிகளுக்கு மோசடி. 67 உறுப்பினர்கள் மக்களவையில ஒதுக்கி வைத்துவிட்டு என்ன அரசியல் சாசனம் திருத்தம் நிறைவேற்றுவீங்க?

இதில் இன்னொரு கேலியையும் பாருங்க. இன்னைக்கே உத்தரப் பிரதேசத்துல 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள். தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40. பாதிக்குப் பாதிங்கிறது ஒரு பக்கம். நமக்கும் அவர்களுக்கும் இடைவெளி 40 இடங்கள். 40 ஓட்டுக்கள் அவர்களுக்குக் கூட.

இப்ப 80, 120 ஆகி, 40, 60 ஆகி, 50% கூட்டினால் 80, 120 ஆயிடும், 40, 60 ஆயிடும். இடைவெளி 40-லிருந்து 60 ஆயிடும். ஏற்கனவே தென் மாநிலங்கள் குரல்கள் ஓங்கி ஒலிப்பதில்லை நாடாளுமன்ற மக்களவையில். இந்த இடைவெளி விரிந்தால் இன்னும் குறைந்த ஒலியில்தான் தென் மாநிலக் குரல் ஒலிக்கும்.

இப்பவே நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருக்கு 10 நிமிடம் பேச வாய்ப்பு இருந்தால் அதுவே அதிகம். 543 பேருக்கு பதிலாக 816 பேர் இருந்தால் 5, 6 நிமிடம் கூட பேச முடியாது. 5, 6 நிமிடங்கள் பேசி ஒரு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஏறத்தாழ ரெண்டரை, 3 லட்சம் வாக்காளர்களைப் பிரதிநிதி செய்பவர், பிரதிநிதித்துவம் செய்பவர் என்ன பேச முடியும்? இதெல்லாம் நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக மாற்றுவதற்கான முயற்சி.

இந்த இரண்டு மசோதாக்களும் வருகின்றனவா இல்லையா என்று எனக்குத் தெளிவில்லை. ஆனால் ஊடகங்களில் பரவலாக, அதிகார வட்டாரங்களில், அரசியல் வட்டாரங்களில் டெல்லியில் பேசப்படுவது இந்த இரண்டு மசோதாக்களும், அரசியல் சாசனத் திருத்த மசோதாக்களும் வருகின்றன. விவாதம், மசோதா நிறைவேற்றம் – ரெண்டு விஷயம். விவாதமே கூடாதென்றால் இரண்டு பெரிய மாநிலங்களில் தேர்தல் நாள் ஏப்ரல் 23-ஆம் தேதி என்று குறித்த பிறகு எதற்காக அவசரமாக ஒரு வாரத்துக்கு முன்னாடி நாடாளுமன்றத்தைக் கூட்டணும்? ஒரு வாரத்துக்குப் பின்னாடி கூட்டப்படாதா?

இந்த மசோதாக்களும் வந்தால் மிகப்பெரிய மோசடி, மிகப்பெரிய சதி. இதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கண்டித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த விபரீதம், விபரீத நடவடிக்கைகளைத் தெரிய வேண்டும் என்பதற்காக நான் இன்று உங்களைச் சந்திக்கிறேன். இதைக் கடுமையாக எதிர்க்கிறோம். வெறும் விவாதம்னா ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி நாடாளுமன்ற அவையைக் கூட்டட்டும். மசோதாக்கள் கொண்டு வருவார்கள் என்றால் அதற்குப் பிறகு கொண்டு வரட்டும். நாங்கள் அந்த மசோதாவைப் பரிசீலித்து ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்று முடிவு எடுப்போம். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share