போலீஸ் விசாரணை தொடர்பான மற்றுமொரு படம்!
சில திரைப்படங்களின் டைட்டில் நம்மைக் கவர்ந்திழுக்கும். சிலவற்றில் அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு ஈர்க்கும் விதமாக இருக்கும். டீசர் அல்லது ட்ரெய்லரில் விரியும் கதை, தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு நம்முள் அப்படம் குறித்த அபிப்ராயத்தைத் தோற்றுவிக்கும். சில நேரங்களில் ‘சுமார்’ என்ற ரேட்டிங்கும் கூட, படம் பார்ப்பதற்கு முன்னரே மனதுக்குள் நிழலாடும். அதையும் தாண்டிச் சில திரைப்படங்கள் ‘சூப்பர்’ அனுபவத்தைத் தரும்.
தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, பழ.கருப்பையா, நிகிதா உள்ளிட்டோர் நடிப்பில், பி.மணிவர்மன் இயக்கிய ‘ஒரு நொடி’ திரைப்படம் அப்படியொரு ஆச்சர்யத்தைத் தந்துள்ளது. அப்படியென்ன இப்படத்தில் இருக்கிறது?
இன்ஸ்பெக்டரின் விசாரணை!
மதுரை அருகே அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்). மகள் திருமணத்திற்காக, அவர் ஒருவரிடம் வட்டிக்குக் கடன் வாங்குகிறார். குறிப்பிட்ட காலத்தில் அவரால் வட்டி கட்ட இயலாமல் போகிறது.
அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ரியல் எஸ்டேட் மாஃபியாவாக செயல்பட்டு வரும் தியாகு (வேல.ராமமூர்த்தி) சேகரனின் வசமுள்ள நிலமொன்றைப் பிடுங்கிக் கொள்கிறார்.
ஆறு மாதங்கள் கழித்து சுமார் எட்டு லட்சம் பணத்தைத் திரட்டி தியாகுவிடம் கொடுத்துவிட்டு, அந்த நிலத்தை மீட்கத் திட்டமிடுகிறார் சேகரன். அவ்வாறே பணமும் திரட்டுகிறார். ஆனால், சேகரன் அந்த பணத்தைக் கொடுத்தாரா இல்லையா என்று தெரியாத வகையில் திடீரென்று காணாமல் போகிறார்.
’சேகரனைக் காணவில்லை’ என்று அவரது மனைவி (ஸ்ரீரஞ்சனி) போலீசில் புகார் கொடுக்கிறார். இன்ஸ்பெக்டர் பரிதி இளமாறன் (தமன்குமார்) அது குறித்து விசாரணை மேற்கொள்கிறார்.
அதன் தொடர்ச்சியாகத் தியாகுவையும் அவரது ஆட்களையும் கைது செய்கிறார். அது, அப்பகுதி எம்.எல்.ஏ. திருஞானமூர்த்தியைக் (பழ.கருப்பையா) கோபப்படுத்துகிறது.
சேகரன் என்னவானார் என்ற விசாரணை தொடரும்போதே, அதே பகுதியில் பார்வதி (நிகிதா) எனும் இளம்பெண் ஒருவர் கொலையாகிறார். உடற்கூறாய்வில் அப்பெண் கர்ப்பமாக இருந்தது தெரிகிறது.
அப்பெண் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்ததையும் போலீசார் கண்டறிகின்றனர். அதனால், ஆணவக் கொலை நடந்ததா என்ற திசையிலும் விசாரணை தொடர்கிறது.
ஒருகட்டத்தில் மாறி மாறி சேகரன் காணாமல் போன வழக்கையும், பார்வதி கொலை வழக்கையும் பரிதி தலைமையிலான போலீசார் கையாளத் தொடங்குகின்றனர்.
என்ன செய்தாலும், சேகரனை தியாகு தான் மறைத்து வைத்திருக்கிறார் என்று போலீசாரால் நிரூபிக்க முடிவதில்லை. போலவே, பார்வதி வழக்கிலும் வலுவான சாட்சியங்கள் அமைவதில்லை.
தடைகளைக் கடந்து, அவ்விரு வழக்குகளிலும் குற்றவாளியைக் காவல் துறை கண்டறிந்ததா என்று சொல்வதோடு இப்படம் முடிவடைகிறது.
இரு வேறு வழக்குகளின் விசாரணையை இத்திரைக்கதை கொண்டிருப்பதன் காரணத்தையும் இறுதியில் விளக்குகிறார் இயக்குனர். கூடவே, ‘ஒரு நொடி’ எனும் டைட்டில் எப்பாத்திரம் சம்பந்தப்பட்டது என்பதையும் நமக்கு உணர்த்துகிறார். அது மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.
நல்லதொரு ஒருங்கிணைப்பு!
‘வானத்தைப் போல’ எனும் சன் டிவி சீரியலில் தலைகாட்டிய தமன்குமார் ‘சட்டம் ஒரு இருட்டறை’ உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அவர் மீண்டும் நாயகனாகத் தோன்றியுள்ள படம் இது.
இன்ஸ்பெக்டர் பாத்திரம் என்பதால், படம் முழுக்க சீரியசாகவே வந்து போயிருக்கிறார். ஓரிரு இடங்களில் ‘கமர்ஷியல் ஹீரோ’ போல தெனாவெட்டாக வசனம் பேசியிருக்கிறார் தமன் குமார்.
வேல.ராமமூர்த்திக்கு இதில் வில்லன் பாத்திரம். ‘கிடாரி’, ‘சேதுபதி’ பாணியில் இதிலும் பற்களைக் கடித்து வசனம் பேசியிருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல எளிமையான மனிதராக வந்து நம் மனதை அள்ளுகிறார். அவரது மனைவியாக நடித்துள்ள ஸ்ரீரஞ்சனியும் அப்படியே.
கஜராஜ், பழ.கருப்பையாவோடு தீபா சங்கர், கருப்பு நம்பியார் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். நிகிதாவின் தாயாக நடித்துள்ள தீபா, மகளின் மறைவை நினைத்து ஏங்கியழும் காட்சியில் ‘டப்பிங்’கில் அசத்தியிருக்கிறார்.
அதேபோல அருண் கார்த்தி, சலூன்கடைக்காரர் ஆக வருபவரும் நம் கவனத்தை ஈர்க்கும் வகையிலான நடிப்பைத் தந்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரதீஷ், கிடைத்த பட்ஜெட்டில் நிறைவான காட்சியனுபவத்தை ரசிகர்கள் பெற வேண்டுமென்ற தனது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். அதேநேரத்தில், சில இடங்களில் ஷாட்கள் ‘குறும்பட’ பாணியில் இருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
படத்தொகுப்பாளர் குருசூரியா, ஒரே காட்சி பலமுறை வந்தாலும் அது சலிப்பூட்டாதவாறு தொகுத்திருக்கிறார். முக்கியமாக, திரையில் பரபரப்பு குறையாதவாறு எல்லா காட்சிகளையும் கனகச்சிதமாக ‘நறுக்’கியிருக்கிறார்.
கொலை விசாரணை குறித்த திரைக்கதை என்றபோதும், திரையில் கோரத்தைக் காண்பிக்காமல் தவிர்த்திருக்கிறது எஸ்.ஜே.ராமின் கலை வடிவமைப்பு.
சஞ்சய் மாணிக்கத்தின் இசையில் அமைந்துள்ள இரண்டு பாடல்கள் ஓகே ரகம். அதேநேரத்தில், அவரது பின்னணி இசை நம்மைக் காட்சிகளுடன் ஒன்ற வைக்கிறது.
இயக்குனர் பி.மணிவர்மன், மனித வாழ்வில் ஒவ்வொருவரும் தவறும் அந்த ஒரு நொடியை இக்கதையில் மையப்படுத்தி இருக்கிறார். ‘அது எப்படிப்பட்டதாக இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பையும் திரைக்கதையின் தொடக்கத்திலேயே ஏற்படுத்திவிடுகிறார். பார்வையாளர்கள் மனதில் இருக்கும் அந்த எதிர்பார்ப்பையும் மீறி கிளைமேக்ஸில் அவர் அசத்துகிறாரா இல்லையா என்பதில் இப்படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.
பரபரப்பில் குறை இல்லை!
வழக்கமாக, இது போன்ற ‘த்ரில்லர்’ திரைக்கதைகள் முக்கால் கிணறு தாண்டியவுடன் தனது பணி முடிந்தது என்று நின்று கொள்ளும். ‘ஒரு நொடி’ அதற்கு மாறான அனுபவத்தைத் தருகிறது. முடிவும் கூட, ‘இவ்ளோதானா’ என்று சொல்லும்படியாக இல்லாதிருப்பது சிறப்பு.
இப்படம் தரும் பரபரப்பில் குறை இல்லை. சேகரன் பாத்திரம் காணாமல்போன வழக்கு முடிவடைதற்குள், பார்வதி எனும் பெண் கொலையானதை நோக்கி நாயகனும் இதர பாத்திரங்களும் நகர்வது ரசிகர்களுக்கு ‘ஜெர்க்’கை தரலாம். ஆனால், அடுத்தடுத்த காட்சிகள் இரு வழக்குகளுக்கும் தொடர்பு இருக்கிறதோ என்ற எண்ணத்தை நமக்குள் உருவாக்குகின்றன. அதுவே இப்படத்தின் முதல் வெற்றி.
படத்தில் சிலரது நடிப்பு ‘ப்ளூப்பர்ஸ்’ டைப்பில் உள்ளது. திரைக்கதையில் பிரமாண்டத்திற்கு இடம் இல்லை. நாயகன் நினைத்த மாத்திரத்தில், தனது காவல் நிலையத்தை விட்டு மாவட்டத் தலைமையகத்திற்குச் செல்கிறார் என்பது போன்ற சில லாஜிக் குறைபாடுகள். கிளைமேக்ஸ் எழுப்பும் சந்தேகங்கள் உள்ளிட்ட சில குறைகளைப் புறந்தள்ளிவிட்டால், ‘ஒரு நொடி’ தரும் காட்சியனுபவம் நிச்சயம் ஆச்சர்யமிக்கதாக இருக்கும். மேற்சொன்ன விஷயங்களும் கூடத் திரையில் படம் ஓடும்போது நம் நினைவுக்கு வராது.
எல்லா அம்சங்களும் கலந்த ஒரு மசாலா எண்டர்டெயினர் வேண்டும் என்பவர்களுக்கு இப்படம் அறவே ஆகாது. அதேநேரத்தில், ஓடிடியில் தேடிப் பிடித்து ‘மர்டர் மிஸ்டரி’ வகையறா படம் பார்ப்பவர்களுக்கு ‘ஒரு நொடி’ பிடித்தமானதாக இருக்கும். ’நல்லதா, ப்ரெஷ்ஷா ஒரு படம் பார்க்கணும்’ என்பவர்களையும் கூட, இப்படம் நிச்சயம் திருப்திப்படுத்தும்..!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதீத வெப்பம்: தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
ரூ.4 கோடி பறிமுதல்… நயினார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த எடுத்த நடவடிக்கை என்ன? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!