திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்குகளை தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகளை காரணம் காட்டி இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அதிகாரி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மேற்குறிப்பிட்ட அனைவரும் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூண் அருகே நீதிமன்றம் குறிப்பிடும் ஐந்து பேரை பூஜை செய்ய அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இந்த சூழலில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகர காவல் துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் ஆறு மனுக்கள் இரு நீதிபதிகள் அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா கதிரவன் மற்றும் ரவீந்திரன், ‘ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கும் நிலையில் தனி நீதிபதி மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்பது சட்டப்படி சரியல்ல. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதம் முன்வைத்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மோகன் மற்றும் வாஞ்சிநாதன், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த மாதிரி தூணில் தீபம் ஏற்றி தீபம் நிச்சயம் ஏற்றப்படும் என்று கூறியுள்ளார். இது நடுநிலைத் தவறிய செயல். எனவே இந்த வழக்கை அவர் விசாரிக்க கூடாது என்று தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து நீதிமன்றத்தை யாரும் அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி விசாரிப்பது சரியானதா அல்லது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து ஆழமான சட்ட விளக்கம் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த அடிப்படை சட்ட விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை வதித்து உத்தரவிட்டனர்.
