உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மழலையர்கள்!

Published On:

| By admin

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இன்று நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல் மாநிலத்தில் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டன. ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொற்று அதிகமாக இருந்த காலத்தில் ஆன்லைன் மூலமாகவும், தொற்று குறையும்போது நேரடியாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

தற்போது, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் 1-12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எல்கேஜியில் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கே செல்லவில்லை. இந்த குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்பு நடைபெற்று வந்தது. அதனால், நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிரைமரி நர்சரி மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்இ பள்ளிகளின் உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

ADVERTISEMENT

இந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, இன்று(பிப்ரவரி 16) தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 ஆயிரம் அரசு மற்றும் தனியார் நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன. வகுப்பறைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளித்து, கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இன்று காலை முதல் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே குழந்தைகள் வகுப்பறைக்கு சென்றனர். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்கும் வகையில், நுழைவு வாயிலில் குழந்தைகளுக்கு குங்குமம், சந்தனம் வைத்துவிட்டு, இனிப்பு கொடுத்து, மாலை அணிவித்து, கையில் ரோஜா பூ கொடுத்தும் அன்புடன் ஆசிரியைகள் வரவேற்றனர்.

சமூக இடைவெளியுடன் குழந்தைகள் உட்காரும் வகையில், வகுப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக பள்ளிக்கு வந்த குழந்தைகள், தங்கள் நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் விளையாடி தங்களின் பள்ளி வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். முதல் நாளான இன்று ஆசிரியைகள் குழந்தைகளுக்கு, நடனமாடி பாடல் கற்றுக் கொடுத்தனர். குழந்தைகளும் உற்சாகமாக நடனமாடினர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், “இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது என்றதுமே, குழந்தைகள் ஆர்வமாக கிளம்பினர். என்னதான் வீட்டில் பாடம் சொல்லி கொடுத்தாலும், பள்ளிக்கு வந்து பாடம் கற்பதுபோன்று இருக்காது. இந்த சூழல் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம். அவர்கள் தங்கள் நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் பேசி பழகும் வாய்ப்பு வீடுகளில் கிடையாது. அதனால், அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது சந்தோஷம்தான்” என்று கூறினார்.

அனைத்து பெற்றோர்களுமே தங்கள் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிந்தே பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களால் நீண்ட நேரம் முகக்கவசம் அணிய முடியாது என்பதால், மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. திரையரங்குகள்,உணவகங்கள், துணிக்கடைகள் ஆகியவற்றில் 100 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share