தமிழக சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடவில்லை என கூறி மாற்று வேட்பாளரை அறிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
மக்களவை எம்.பியாக இருக்கும் திருமாவளவன் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவி காலம் இருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்தது திமுக கூட்டணி கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திருமாவளவனிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து மின்னம்பலத்தில் ஸ்டாலின் சொன்ன ஆலோசனை… பாஜக போட்ட ‘அந்த ஸ்கெட்ச்’.. ஏற்காத திருமா என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் கூறியிருந்தோம்.
இந்தசூழலில், திருமாவளவன் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்து, போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்தும் மின்னம்பலத்தில் இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடவில்லை என் ஆதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஏப்ரல் 4) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “மூன்றாண்டு காலம் எம்பி பதவி இன்னும் எனக்கு இருக்கிறது. ஆனால் சட்டமன்றத்துக்கு செல்ல விரும்பினேன். என்னுடைய உள்ளுணர்வு சட்டமன்றத்தில் நான் விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலை பேச வேண்டும் என்று கூறியது.
2001 ஆம் ஆண்டு மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்தேன்.
2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தேன்.
முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக ஆனபோதும் அந்த பதவியில் எனக்கு பிடிப்பு இல்லை. எனவே அதை உதறிவிட்டு வந்தேன்.
2006 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் 9 இடங்கள் புதுச்சேரியில் ஒரு இடம் என 10 இடங்களில் போட்டியிட்டோம்.
அப்போது மங்களூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவது என முடிவு எடுத்து இருந்தேன். கடைசியில் கட்சியில் என்னோடு நின்ற பொறுப்பாளர், எனக்கு கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதி வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
காட்டுமன்னார் கோயிலில் நீங்கள் நின்றால் எனக்கு மங்களூர் தொகுதி வேண்டும் என்றும் ஒருவேளை மங்களூர் தொகுதியில் நீங்கள் என்றால் எனக்கு காட்டுமன்னார்கோயில் வேண்டும் என்றும் அவர் கேட்டார்.
ஆகவே நான் கடைசி நேரத்தில் போட்டியிடுவதை தவிர்த்தேன். 2006 ஆம் ஆண்டிலேயே இது நடந்தது.
நான் போட்டியிடுவதாக கூறி பெற்ற தொகுதி மங்களூர் என்கிற திட்டக்குடி தொகுதி.
வெளிப்படையாக சொல்கிறேன், காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கிற அன்றைய செல்வம், இன்றைய செல்வப் பெருந்தகைக்காக திருப்பெரும்பதூர் தொகுதி வாங்கப்பட்டது. ஆனால் கடலூர் தொகுதி தான் வேண்டுமென்று அவர் சொன்னதால், நம்மை நம்பி இருந்தவர்களுக்காக போட்டியிடுவதில் இருந்தே விலகிக் கொண்டேன்.
ஒரு இடம் கிடைத்தாலும் நான் தான் போட்டியிட வேண்டும் என்று விரும்புபவர்கள் இருக்கிற அரசியல் களத்தில், நான் போட்டியிடுவதற்காக நானே கேட்டு பெற்ற தொகுதியை, போட்டியிடாமல் தவிர்த்து அதை ஒருவருக்கு வழங்கிய வரலாறு உண்டு.
சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் உதறிவிட்டு சட்டமன்றம் செல்லும் வாய்ப்பையும் தவிர்த்தேன்.
2006 தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியபோது தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று கூறி மணி சின்னத்தில் போட்டியிட்டு, காட்டுமன்னார்கோயில் மற்றும் மங்களூர் என்கிற திட்டக்குடி ஆகிய இரு தொகுதியில் விசிக வெற்றி பெற்றது.
2006 சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடாததால், 2009 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அதுவும் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி நட்சத்திர சின்னம் பெற்று அதில் நின்று வெற்றி பெற்றேன்..
அப்போது முதல் தனிச்சின்னத்தில் தான் நிற்பேன் என்று முடிவு செய்தேன்.
இதையடுத்து 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் போட்டியிடும் சூழல் உருவானது. ஆனால் 87 வாக்குகள் வித்தியாசத்தில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது.
250 தபால் வாக்குகளை முறையாக தராமல் போய்விட்டார்க்ள். இதை நான் வாங்கியிருந்தால் கூட வெற்றி பெற்றிருப்பேன்.
5 ஆண்டுகள் எம்.எல்.ஏ பதவியில் இருந்திருந்தால் மீண்டும் 2021, 2026ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருப்பேன்.
இதனால் 2019ல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆனேன். இந்நிலையில் 2021லும் எனது எம்.பி.பதவியை உதறிவிட்டு சட்டமன்றத்திற்கு போகலாம் என்ற எண்ணம் மேலோங்கியது.
ஆனால் அப்போது அந்த முடிவை எடுக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் இல்லை என்று நான் சொல்லிவருகிறேன்.
வலதுசாரிகளின் கைகள் ஓங்கி வருகின்றன. அவர்கள் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார்கள். கடந்த ஓராண்டாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் சங் பரிவார்கள் மேற்கொண்டார்கள். குறிப்பாக எனக்கு எதிராக எல்லா முயற்சிகளையும் எடுத்து என்னை இந்த கூட்டணியில் இருந்து பிரிக்க முயற்சி செய்தார்கள்.
திமுக தலைமையிலான இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக களம் காண்கிறது என்று சொன்னால், அதற்கு விசிகவும் நானும் காரணம் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துகொள்கிறேன்.
இந்த கூட்டணியை பாதுகாப்பதற்கு பெரும் பங்கு செய்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
பதவிக்காக நான் போட்டியிடவில்லை என்று குறிப்பிட்ட திருமாவளவன், “காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தனக்குப் பதிலாக, மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி போட்டியிடுவார்” என்று அறிவித்தார்.
என் நிலைப்பாட்டை தள்ளிவைத்து, உத்தியை மாற்றியமைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, ஷாநவாஸ் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்காதது குறித்து பேசிய அவர், “புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற “சமூக நீதி பார்வை” தான் இதற்கு முக்கியக் காரணம். ஒரே நபர்களே பதவியில் நீடிக்காமல், கட்சியில் உழைத்த மற்றவர்களுக்கும் சட்டமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம்” என்றார்.
