ADVERTISEMENT

அதிமுகவில் புறக்கணிக்கப்படுகிறேனா? உடல்நலக் குறைவு, வாய்ப்பு மறுப்பு – தனபால் உருக்கம்!

Published On:

| By Kavi

எனக்கு ஆதியும் அந்தமும் அதிமுகதான் என்று முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவிநாசி தொகுதி என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் முன்னாள் சபாநாயகருமான தனபால் அதிருப்தியில் இருக்கிறார். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது நான்தான்… எனக்கே இந்தநிலைமை என்று தனபால் வருத்தத்தோடு கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் தனபால் இன்று (ஏப்ரல் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மக்கள் இயக்கத்தை தொடங்கிய 1972 ஆம் ஆண்டிலிருந்து நான் என்னை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 1977-80, 1980-84 மற்றும் 1985-88 என தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றி இருக்கிறேன்.

ADVERTISEMENT

எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட்டவன் . 2001-2006, 2011-2016, 2016-2021 2021-2026 2001-2006 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். இக்காலகட்டத்தில், ஆதி திராவிடர் நலன், கூட்டுறவு போன்ற இலாக்காக்களுக்கு அம்மா என்னை அமைச்சராக நியமித்தார்.

2011 ஆம் ஆண்டு என்னை பேரவைத் துணைத் தலைவராக்கிய அம்மா , 2012 ஆம் ஆண்டு பேரவைத் தலைவர் பொறுப்பினை எனக்கு வழங்கினார் 2016 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பேரவைத் தலைவர் பொறுப்பினை அம்மா எனக்கு வழங்கினார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவன் நான்.

ADVERTISEMENT

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நீண்ட நாட்கள் பேரவைத் தலைவர் பதவியை வகித்தவன் என்ற பெருமையை எனக்கு அம்மா வழங்கினார். இதனை நினைக்கும்போது எனது நெஞ்சம் நெகிழ்கிறது.

இந்தச் சூழ்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் என்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யாரும் வந்து பார்க்கவோ, தொலைபேசி மூலம் விசாரிக்கவோ இல்லை. இந்தத் தருணத்தில், 1988 ஆம் ஆண்டு எனக்கு விபத்து காரணமாக கால் முறிவு ஏற்பட்டபோது சம்பவ இடத்திற்கு நேரில் வந்து எனக்குத் தேவையான முதலுதவியை அளித்து என்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அம்மாவை நினைத்துப் பார்த்தேன். என் கண்களில் நீர் ததும்புகிறது. அந்தத் தாயின் கருணைக்கு என்னுடைய கோடானுகோடி நன்றிகள். தாயில்லாத நிலையை நான் இப்போது உணர்கிறேன்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நான் வாய்ப்பு கேட்டேன் என்பது உண்மை. ஆனால், எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதில் எனக்கு வருத்தம் ஏதுமில்லை. உடல் நலம் குன்றியிருக்கும் என்னை வந்து பார்க்கவில்லை என்பதுதான் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில்தான் என்னுடைய மகன் லோகேஷ் தனபால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தற்போது ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

என்னைப் பொறுத்த வரையில், எனக்கு ஆதியும், அந்தமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share