2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, எந்த கூட்டணியிலும் இடம் பெறாது; தனித்துதான் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். Seeman no alliance
கோவையில் நேற்று நடைபெற்ற மே 18- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய சீமான், கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா என கேட்கிறார்கள்.ஆனால் கொள்கையே இல்லாமல் எப்படி கூட்டணி வைப்பது என யாருமே கேட்பது இல்லையே? நாங்கள் 8 கோடி மக்களுடன் இணைந்துதான் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலில் விவசாயி சின்னத்தில் தனித்தே போட்டியிடுவோம் என்றார்.
மேலும், பிற கட்சிகளுக்கு தேர்தல் என்பது அரசியல்; நாம் தமிழர் கட்சியினருக்கு இது ஒரு போர்; இனமானம் காக்கும் போர்; இந்த நிலம் காக்கும் போர் என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை கூட்டணியில் சேர்க்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இணைந்த போதே, நாம் தமிழர் கட்சியையும் சேர்க்க வேண்டும் என டெல்லி மேலிடம் விரும்பியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் நாம் தமிழர் கட்சியுடன் பாஜக மற்றும் அதிமுக தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தபட்டதாக கூறப்பட்டது. அதேபோல நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த பின்னணியில், யாருடனுமே கூட்டணி இல்லை; தனித்தே போட்டி என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் சீமான்.