கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தராவிட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும்; அத்தகைய போராட்டத்தை நடத்தவிடாமல் தடுக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். Vanniyar Reserevation வன்னியர் இடஒதுக்கீடு
வன்னியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது: மாநில வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. 20.6.1980-ல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது.
வன்னியர் சங்கம், வன்னியர் மக்களுக்காக, வன்னியர் மக்களின் பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். வன்னியர் மக்களுக்கு 20% இடஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளோம். வன்னியர் மக்களுக்கு 10.5% இடஒதுக்கீடு பெறுவதற்காக கடுமையான போராட்டம் நடத்தப்படும். வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தராவிட்டால் தமிழ்நாடு கடுமையான போராட்டத்தை சந்திக்கும்.அப்படி ஒரு கடுமையான போராட்டத்தை நடக்காமல் செய்ய வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.
வன்னியர் சங்கத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற்றது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றி பெறுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினோம். பாமகவும் வன்னியர் சங்கமும் எப்போதும் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்; எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாமகவின் மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை அண்மையில் டாக்டர் ராமதாஸ் கூட்டி இருந்தார். ஆனால் இந்தக் கூட்டத்தில் 80%-க்கும் அதிகமான நிர்வாகிகள் புறக்கணித்தனர். ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை அவரது மகன் அன்புமணி மற்றும் அவரதுஆதரவாளர்கள் கூண்டோடு புறக்கணித்தனர். இதனால் பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வன்னியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் இன்று நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
