தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜகவிற்கு எதிராக ஜீரோ பிஜேபி என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் ‘ஜீரோ பிஜேபி’ முயற்சி என்பது இது வெறும் அரசியல் ரீதியான போர் மட்டுமல்ல. இது தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் நடத்தப்படும் ஒரு போர் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று தொடங்கப்பட்டுள்ள ‘ஜீரோ பிஜேபி’ (Zero BJP) எனும் இந்த முன்முயற்சி மிகவும் முக்கியமானது. இந்த முயற்சிக்கு ஆதரவாக நிற்கவும், இதை ஆதரிக்கவும் நான் இங்கு வந்துள்ளேன்.
ஏன்? ஏனென்றால், பாஜக-விற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் நமது அரசியலமைப்புச் சட்டம் போற்றிப் பாதுகாக்கும் விழுமியங்கள், மத நல்லிணக்கம், மொழி நல்லிணக்கம்,பிராந்தியங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, பிராந்திய பன்முகத்தன்மை, மொழி சார்ந்த பன்முகத்தன்மை,குறிப்பாக உங்களுக்கு மிகவும் பிரியமான அந்த பன்முகத்தன்மை , மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு விழும் மரண அடியாகும்.
உங்களுக்குத் தெரியும், நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எந்த மொழியில் பேச வேண்டும், எந்த மொழியைப் பயில வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உங்கள் உரிமையை அது மறுக்கும். இது அரசியல் ரீதியான மற்றும் நிதி ரீதியான கூட்டாட்சித் தத்துவத்திற்கு விழும் மரண அடியாகும்.
எனவே, தயவுசெய்து உறுதி செய்யுங்கள். தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கும் சட்டமன்றத்தில் பாஜக-வின் பிரதிநிதித்துவம் எதுவும் இருக்கக்கூடாது என்பதே உங்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள். புதிய சட்டமன்றத்தில் ‘ஜீரோ பிஜேபி’ (பாஜக இல்லாத நிலை) இருக்க வேண்டும்.
இறுதியாக ஒன்றைக் கூற விரும்புகிறேன், தமிழக மக்கள் வெறும் பாஜக-வை மட்டும் எதிர்த்துப் போராடப் போவதில்லை. அவர்கள் பாஜக, இந்தியத் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளின் கூட்டு வலிமையையும் எதிர்த்துப் போராடத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் எச்சரிக்கையாக இருங்கள். இது ஒரு சமமானப் போர் அல்ல. இது வெறும் அரசியல் ரீதியான போர் மட்டுமல்ல. இது தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் நடத்தப்படும் ஒரு போர். எனவே, நீங்கள் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்து, இத்தகைய நச்சு சக்திகள் தமிழக சட்டமன்றத்திற்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
