ADVERTISEMENT

‘வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை’- தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டு – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Published On:

| By Kavi

பீகாரில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி (SIR) நடைபெற்று வந்தது. கடந்த 2003ம் ஆண்டுக்கு பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

முதல் கட்ட திருத்த பணிகள் முடிந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில் தனது பெயர் இல்லை என்று ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (ஆகஸ்ட் 2) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “வரைவு வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை. நான் எப்படி தேர்தலில் போட்டியிடுவது” என கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

செய்தியாளர் சந்திப்பிலேயே தனது மொபைலில் எல்இடி திரையில் வரைவு வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததையும் காட்சிப்படுத்தி காட்டினார். தனது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள EPIC எண்ணை வைத்து தேடியபோது எந்த தரவுகளும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் மோசமான செய்தியை தெரிவித்து இருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் வரிசை எண் 416-ல் பட்டியலிடப்பட்டுள்ளது எனவே வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று அவர் கூறும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அவர் தனது பழைய EPIC எண்ணை வைத்து தேடியதால் அவரால் தனது பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், புதிதாக வழங்கப்பட்ட EPIC எண் – RABO456228 மற்றும் சீரியல் எண் 416-ல் தேஜஸ்வி யாதவின் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை விமர்சித்து வரும் நிலையில் தேஜஸ்வி யாதவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share