ஈரான் வானத்தில் கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும்

Published On:

| By Minnambalam Desk

எஸ்.வி.ராஜதுரை

அமெரிக்கா இனி போர்களில் ஈடுபடாது என்று டொனால்ட் ட்ரம்ப் சென்ற ஆண்டு கூறிய உறுதிமொழி இந்த ஆண்டின் முதல் இரு மாதங்களிலேயே காற்றில் பறக்கவிடப்பட்டது. ஏகாதிபத்திய ட்ரம்ப்பும் போர்க் குற்றவாளி பெஞ்சமின் நெதன்யாஹுவும் ஒன்றிணைந்து ஈரானின் தலைவர் அலி கமெனியைக் கொன்றதுடன் மத்திய கிழக்கு முழுவதிலும் தீயை மூட்டியுள்ளனர்.

இந்தக் கொலைபாதகச் செயல் நிகழ்வதற்கு முன் வெனிசுலா மீது குண்டு வீச்சுகளை நடத்தி அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் நிக்கோலஸ் மடுராவையும் அவரது துணைவியாரையும் அமெரிக்காவுக்குக் கடத்திக் கொண்டு வந்தார் ட்ரம்ப். அதைத் தொடர்ந்து கியூபா மக்களைப் பட்டினி போட்டுக் கொல்வதற்காக ஏகாதிபத்திய அமெரிக்கா கடந்த அறுபத்தியோரு ஆண்டுகளாகச் செய்து வந்த பொருளாதார முற்றுகையை மேலும் இறுக்கமானதாக்கிய ட்ரம்ப், அந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக அறிவித்தார்.

ADVERTISEMENT

அதன் பிறகு பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையையும் காஸாவையும் காஸாவை ஒட்டிய கடல் பகுதியிலுள்ள எண்ணெய் வளத்தையும் கொள்ளையடித்து ஏகாதிபத்திய நாடுகளுடன் பங்கு போட்டுக் கொள்வதற்காக ‘அமைதி வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

ஏகாதிபத்தியக் குண்டர் படைத் தலைவரின் செயல்பாடுகள் மிகவும் கண்மூடித்தனமானவை. ஈரானியத் தலைவர் அலி கமெனியை ‘உலகிலுள்ள தீய மனிதர்களில் மிகவும் கொடுமையானவர்’ என்று வர்ணித்த ட்ரம்ப்பின் தலைமையிலுள்ள அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவத்தால் தற்போது நடத்தப்படும் இராணுவத் தாக்குதல் ஆட்சி மாற்றத்திற்காகவே என்றும், வேறு எந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவரும் செய்யாததை, அதாவது ஈரானிய மக்களை அலி கமெனியிடமிருந்து விடுவிக்கப் போவதாகவும் கூறினார் ட்ரம்ப். ‘ஆடு நனைவதைக் கண்டு ஓநாய் கண்ணீர் வடித்துள்ளது!.

ADVERTISEMENT

சம்பந்தப்பட்ட நாடுகளில் அமைதியும் ஜனநாயகமும் நிலைநாட்டப்படும் என்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் கூறியவை அனைத்தும் பொய்ப்பித்துப் போயின என்பதைக் கடந்த 25 ஆண்டுக் காலத்தை மட்டும் கொண்டு நம்மால் அளவிட முடியும். ஆஃப்கானிஸ்தான், இராக், லிபியா ஆகியவற்றில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய இராணுவத் தாக்குதல்கள் அந்த நாடுகளில் அளவிட முடியாத அழிவுகளை ஏற்படுத்தி, எண்ணிலடங்கா மனிதர்களைக் கொன்று குவித்த பிறகு இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தோல்வியை ஏற்படுத்தின.

அராபிய நாடுகள் சிலவற்றில் நிலவும் எதேச்சாதிகார ஆட்சிகளுக்கு எதிராகத் தோன்றியதும் ‘அராபிய வசந்தம்’ என்று சொல்லப்பட்டதுமான அமைதியான மக்கள் கிளர்ச்சியின் தாக்கத்தின் விளைவாக சிரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த  பஷிர் அல் –ஆசாத்தைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காக அந்த நாட்டு மக்கள் அமைதி வழிப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது அமெரிக்க ஏகாதிபத்தியமும் இனக் கொலை இஸ்ரேலும் அந்த நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவ முயற்சிகளை மேற்கொண்டன; மத்தியக் கிழக்கில் தன் நேசசக்தியாக இருந்த சிரியாவைப் பாதுகாக்க ரஷியாவும் முனைந்தது. அந்த நாடுகள் நேரடியாக சிரியாவில் தலையிடாமல் அங்கு தங்கள் ஆதரவு பெற்ற ‘மக்கள் படை’களைத் தோற்றுவித்தன.

ADVERTISEMENT

மதச்சார்பற்ற நாடாக இருந்த சிரியாவில் அல் கொய்தா போன்ற அதிபயங்கரப் படைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் உருவாக்கின. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்; இராக்கில் நடந்தது போலவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களும் நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட்டன அல்லது கொள்ளையடிக்கப்பட்டன. இறுதியில் அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ உதவிகளைப் பெற்றுவந்த பயங்கரவாத, பழைமைவாத இஸ்லாமிய அமைப்பு ஆட்சிக்கு வந்தது. ‘ஆட்சி மாற்றத் திட்ட’த்தில் அமெரிக்கா பெற்ற வெற்றி இது ஒன்று மட்டுமே!

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று அமெரிக்க ஏகாதிபத்தியம், ஈரானில் அணு உலைகள் இருந்ததாகச் சொல்லப்படும் இடங்களை மிகச் சக்தி வாய்ந்த டொமொஹாக் ஏவுகணைக் கொண்டு அழித்தது. அப்போது அமெரிக்காவுக்கு ஒத்துழைப்புத் தந்த இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது ஈரான். ஈரானில் அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்காகவே தான் அணு உலைகளில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் திரட்டப்பட்டு வருகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அது தொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோதுதான் டொமொஹாக் ஏவுகணைகள் வீசப்பட்டன.

ஏறத்தாழ அதேபோன்ற நிகழ்வுதான் இம்முறையும் நடந்தது – ஆனால் மிகக் குரூரமாக. அணு குண்டு எதனையும் தயாரிக்கும் விருப்பம் தனக்கு இல்லை என்று ஈரான் திரும்பத் திரும்பக் கூறிவந்தது. மேலும் ஒபாமா அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த போது அணுசக்தி தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும் முன்வந்தது ஈரானிய அரசாங்கம்.   மறுபுறம் உலக வரலாற்றில் இதுவரை அணுகுண்டுகளை வீசிய ஒரே அரசு அமெரிக்காதான் (ஹிரோஷிமா, நாகசாகி)

அணு சக்தி தொடர்பாக அமெரிக்க, ஈரானியப் பிரதிநிதிகள் ஓமன் நாட்டில் நடத்தி வந்த பேச்சு வார்த்தைகள் சுமுகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தபோதுதான் கள்ளத்தனமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடுத்தன.

இஸ்ரேலைத் தாக்கும் திட்டம் ஈரானுக்கு இருந்ததற்குக் கடுகளவு சான்றுகூட இருக்கவில்லை என்றாலும் அந்த நாட்டின் மீது நடத்தப்படும் போரை நியாயப்படுத்துவதற்காக பினந்தின்னிக் கழுகுகளான இஸ்ரேலும் அமெரிக்காவும், அது ‘ஈரான் இஸ்ரேலைத் தாக்குவதை தடுப்பதற்காக முன்கூட்டியே நடத்தப்படும் தாக்குதல்’ (preemptive) என்று கூறின. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் தன் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறுகிறது.

அந்தத் தளங்களை நிறுவ இசைவு தந்த வளைகுடா நாடுகளும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஒரு கோடி இந்தியத் தொழிலாளர்களை உள்ளடக்கிய பல்வேறு நாட்டுத் தொழிலாளர்கள்தான். இது மட்டுமல்ல; வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. எண்ணெய் வாணிகத்துக்கு அடுத்தபடியாக வளைகுடா நாடுகளுக்கு வருவாய் தந்து வரும் சுற்றுலாத் தொழில் நசிவடையும்; அந்த நாடுகளில் ஆயிரக்ககணக்கான பயணிகள் விமான நிலையங்களில் அடைபட்டுள்ளனர்; விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் எண்ணெய்த் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரானின் கட்டுப்பாட்டிலுள்ள ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகளிலிருந்து பிற நாடுகளுக்கு சரக்குக் கப்பல்களால் எண்ணெயைக் கொண்டு செல்ல முடியாது. இதன் காரணமாக உலகப் பொருளாதார மந்த நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

சில அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் வேறு சிலர் காயமடைந்துள்ளதாகவும் ட்ரம்ப்பே ஒப்புக் கொள்வதைப் பார்க்கும்போது ஈரானின் ஏவுகணைகளும் ட்ரோன்களும் அமெரிக்கத் தளங்களைத் தாக்கியுள்ளன என்பது தெரிய வருகின்றது. அமெரிக்கப் போர் விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோவை பிபிசி காட்டியுள்ளது. அது மட்டுமல்ல. மேலும் பல அமெரிக்கப் படைவீரர்கள் கொல்லப்படக்கூடும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள கொலைகாரக் கூட்டாளி இஸ்ரேல் ஈரானின் தொடக்கப் பள்ளியொன்றின் மீது வீசிய ஏவுகணை 150 குழந்தைகளைக் காவு கொண்டுள்ளது. ஈரானின் இராணுவத்தைவிட பன்மடங்கு இராணுவ வல்லமை கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியமும் இஸ்ரேலிய இனக்கொலை அரசும் ஈரானைத் தோற்கடிக்கக்கூடும்.

ஆனால் இன்றைய ஈரானிய அரசு  ஒருபோதும் இரு நாடுகளுக்கு முன் மண்டியிடாது. ஒரு வேளை ஈரானில் ‘ஆட்சி மாற்றம்’ ஏற்பட்டாலும் ஈரானில் அமைதி நிலவாது; ஜனநாயகம் தழைக்காது; பொருளாதாரம் வளர்ச்சியடையாது. அது மட்டுமல்ல; மத்தியக் கிழக்கு முழுவதிலும் கொந்தளிப்புகள் ஏற்படும். அவற்றின் தாக்கம் உலகம் முழுவதிலும் உணரப்படும்.

சர்வதேச விதிகளையும் ஈரானின் இறையாண்மையையும் அமெரிக்காவும் இஸ்ரேலும் மீறி அந்த  நாட்டின் மீதுபோர் தொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் சென்றார். சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்தியாவிற்கு மலிவு விலையில் எண்ணெயை வழங்கி வந்தது ஈரான்; சிலசமயம் கடனுக்குக்கூட எண்ணெயைக் கொடுத்து வந்தது. ஆனால் அமெரிக்கா  ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடையைப் பின்பற்றி ஈரானிய எண்ணெயை வாங்குவதை நிறுத்திக் கொண்டது இந்தியா. ட்ரம்ப்பின் மிரட்டலை எதிர்த்து நிற்க முடியாமல் ரஷியாவிலிருந்து மலிவு விலையில் கிடைத்து வந்த எண்ணெயின் அளவையும் குறைத்து விட்டது இந்தியா. இத்தகைய அரசு ‘மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்த தன் கவலை’யைத் தெரிவிப்பதைத் தவிர வேறு எதைச் செய்யும்?

கட்டுரையாளர் குறிப்பு:

Murderers and bandits in the skies of Iran - special story by SV Rajadurai

எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share