ADVERTISEMENT

புதுச்சேரி ரோடு ஷோவில் பிரதமர் பங்கேற்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Modi

புதுச்சேரியில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 3) பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வந்துள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வந்த அவரை, முதலமைச்சர் என். ரங்கசாமி, பாஜக தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் என்.டி.ஏ. வேட்பாளர்களும் வரவேற்றனர்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, கார் மூலம் அஜந்தா சந்திப்புக்கு வந்த பிரதமர் மோடி, மாலை 4:15 மணியளவில் ரோட் ஷோவைத் தொடங்கினார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அண்ணா சாலை வழியாக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வரும் பிரதமர் மோடி, நேரு வீதி சந்திப்பில் ரோடு ஷோவை நிறைவு செய்ய உள்ளார்.

சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் இந்த ரோடு ஷோவை ஒட்டி, அஜந்தா சிக்னல் முதல் நேரு வீதி வரை அண்ணா சாலை விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆங்காங்கே சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளுடன் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பகுதியில் திரண்டிருக்கும் மக்களிடம் உற்சாகமாகக் கை அசைத்தவாறு, என்.டி.ஏ. கூட்டணிக்கு வாக்குகளைச் சேகரித்து வருகிறார் பிரதமர் மோடி.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share