கோவை தெலுங்குபாளையம் ராமசாமி கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் சோமு. இவர் மாநகராட்சி 73-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும், நகரமைப்பு குழு தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி சுகன்யா. இவர்களது 8 வயது மகள் வெண்பா.
கடந்த பிப்.23 உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூளையில் இரத்தக்கசிவு காரணமாக வெண்பா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சிறுமி கே.எம்.சி.எச் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் இருந்த சிறுமி 24ம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
இதைத்தொடர்ந்து வெண்பாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில், 7 பேருக்கு உடற்பாகங்கள் தானம் செய்யப்பட்டு உள்ளது. வெண்பாவின் கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோலை அகற்றி தானமாக வழங்கினர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 27) கோவை வந்த நிலையில் வெண்பாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்
பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மாந்தநேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறுப்புகளைக் கொடையளித்த பெற்றோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்!
சோமு நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.
உடலுறுப்புகளைக் கொடையளிப்பது குறித்து நான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதேபோல், கொடையாளரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கடந்த 23-09-2023 அன்று அறிவித்திருந்தேன். இதனைத் தொடர்ந்து, தங்களது உடலுறுப்புகளைக் கொடையளிப்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மட்டுமல்ல; இந்திய மாநிலங்களிலேயே அதிகளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுவரையில், இறப்பிலும் பலருக்கு வாழ்வளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு வளரட்டும்!
இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் இந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்!”என குறப்பிட்டுள்ளார்.
