ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தியே மீண்டும் போட்டியிடுகிறார்.
ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் அமைச்சர் ஆர். காந்திக்கு இந்த முறை திமுக வாய்ப்பு வழங்கவில்லை. காந்திக்கு பதில் அவரது மகன் வினோத் காந்தி பெயர் திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. எனினும் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யாமலே இருந்து வந்தார்.
இதற்கிடையே தனக்கு சீட் கொடுக்காமல் தனது மகனுக்கு சீட் கொடுத்தது பற்றி அமைச்சர் காந்தி முதல்வர் ஸ்டாலினிடமே பேசியிருக்கிறார். இதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் மாற்றம் என விரைவில் அறிவிப்பு வரும் என திமுக தரப்பில் தெரிவித்தனர்.
இதுகுறித்து மின்னம்பலத்தில், “ராணிப்பேட்டை திமுகவில் ‘திக்.. திக்..’.. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வாரா? என்ன நடக்கிறது?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்
இந்தசூழலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடவில்லை என அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்னை நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.
என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே அமைச்சர் காந்தியே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
