27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் தலைமை மேலூருக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸில் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்தது.
டெல்லியில் நேற்றிரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோருடன் ஆலோசனை செய்தனர்.
இந்தநிலையில் இன்று (ஏப்ரல் 3) 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. அதில் மேலூர் தொகுதி இடம் பெறவில்லை.
மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வை பொறுத்தவரை, “கார்த்தி சிதம்பரம் ஒருத்தரை சொல்றாரு.. மாணிக்கம் தாகூர் நான் சொல்றவருக்குதான் சீட் கொடுக்கனும்னு அடம் பிடிக்கிறாரு.. இப்படி மல்லுக்கட்டா இருக்கிறதால இழுபறியா இருக்குது” என்கின்றனர் மாநில காங்கிரஸ் தரப்பில். இதுகுறித்து ஏப்ரல் 1ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தோம்.
அந்தவகையில் மேலூருக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்கவில்லை காங்கிரஸ் தலைமை.
கடந்த சில நாட்களாகவே தேர்தல் பணிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்து விலகி இருந்தார் மாணிக்கம் தாகூர். நேற்று இதை வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தசூழலில் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படாததற்கு இவர் காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
