வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவின் மண்டல பொறுப்பாளர்கள் நடத்தி வருகிற ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட திமுகவின் ஆலோசனைக் கூட்டம் டெல்டா மண்டல பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மே 15 ஆம் தேதி மாலை மயிலாடுதுறையில் நடைபெற்றது. Mayiladuthurai DMK clash
‘இதுவரை நான் எத்தனையோ மாவட்டத்தின் பஞ்சாயத்துகளை தீர்த்து வச்சிருக்கேன். ஆனா இது போல ஒரு மாவட்டத்தை பார்த்ததில்லை’ என அமைச்சர் நேருவே வேதனையோடு சொல்லும் அளவுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுகவின் நிலைமை இருக்கிறது. Mayiladuthurai DMK clash

நேற்று மே 15 மின்னம்பலத்தில் ஸ்டாலினை ஏமாற்றும் நிவேதா முருகன்? என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். Mayiladuthurai DMK clash
அதாவது மே 6ஆம் தேதி சென்னையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் திமுகவில் இணையும் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடத்தினார் நிவேதா முருகன். அந்த கூட்டத்தில் சுமார் 300 பேர் தான் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள். மற்ற அனைவரும் ஏற்கனவே திமுகவில் இருப்பவர்கள் தான் என்று மற்ற நிர்வாகிகள் மூலமாகவும், உளவுத்துறை மூலமாகவும் முதலமைச்சருக்கு தகவல் கிடைத்து அவர் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் மீது கோபமாக இருக்கிறார் என அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். Mayiladuthurai DMK clash
இந்நிலையில், மே 15 ஆம் தேதி மாலை நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் கிட்டத்தட்ட பெரும்பாலான நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக அமைச்சர் நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் குரல் கொடுத்தனர்.

அவர்களுக்கு எதிராக நிவேதா முருகனின் ஆதரவாளர்களும் எதிர்க்குரல் எழுப்ப, ஒரு கட்டத்தில் கைகலப்பு ஆகும் நிலை ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், “இந்த மாவட்டத்தின் மீது முதலமைச்சர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். முதல்வரை மாப்பிள்ளையாக பெற்ற மாவட்டம் இது.
ஆனால், இங்கே நிலைமை எதுவும் நன்றாக இல்லை. நிர்வாகிகள் நன்றாக இல்லை. கட்சிக்காரனுக்கு மாவட்ட செயலாளர் எதுவுமே செய்யவில்லை. மாவட்ட செயலாளர் முன்னெடுத்துள்ள ஜாதி அரசியல் இங்கே கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடந்த இணைப்பு விழா பற்றி கூட இங்கிருக்கும் நிர்வாகிகள் பலரும் தலைமையிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் நமக்கு அது சரியாக இருக்காது” என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் இன்னொரு மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி எழுந்து, ஞானவேலனை நோக்கி, ‘மாவட்டத்தை பத்தி குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு நீ உட்காரு’ என்று குரல் எழுப்பினார். அப்போது மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலனுக்கு ஆதரவாக திரண்டார்கள்.
மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணியோடு சில நிர்வாகிகள் சேர்ந்து கொண்டு நிவேதா முருகனுக்கு ஆதரவாக திரண்டார்கள். இரு தரப்பினரும் மேடையை நோக்கி சென்று தடித்த வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.
இதையெல்லாம் பார்த்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
அப்போது சடாரென எழுந்த அமைச்சர் நேரு மாவட்ட செயலாளருக்கு எதிர்ப்பான நிர்வாகிகள், ஆதரவு நிர்வாகிகள் என இரு தரப்பினரையும் கையைப் பிடித்து பின்னோக்கித் தள்ளி போய் உட்காருய்யா போய் உட்காருய்யா என்று சத்தம் போட்டு ஒரு வழியாக கூட்டத்தில் சலசலப்பை சற்று அமைதிப்படுத்தினார்.

உடனே மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் பக்கம் திரும்பிய மண்டல பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு, ‘என்னங்க இதெல்லாம்?’ என்று கேட்டார்.
அப்போது மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மெய்யநாதன், “நிர்வாகிகள் மாவட்ட செயலாளருக்கு எதிரா சொல்றதெல்லாம் உண்மைதான். நானும் இதை பலமுறை அவரிடம் சொல்லிப் பார்த்து விட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கே மரியாதை இல்லை” என்று ஓப்பனாக நேரு முன்னிலையில் போட்டு உடைத்து விட்டார்.
இதற்குப் பிறகு பேசிய அமைச்சர் மண்டல பொறுப்பாளர் கே.என்.நேரு,
“நானும் எத்தனையோ மாவட்ட பஞ்சாயத்துகளை பார்த்திருக்கேன். மயிலாடுதுறை நிலைமைய பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு. தேர்தல் நெருங்கும் நேரத்துல இவ்வளவு பேர் இவ்வளவு புகார்கள் சொல்வது கட்சி வளர்ச்சிக்கு ஏற்றதா இல்லை. உடனடியாக இதுகுறித்து தலைவருக்கு தெரியப்படுத்துவேன். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பேசி கூட்டத்தை முடித்தார். Mayiladuthurai DMK clash
நேற்று மாலை கூட்டம் முடிந்த நிலையில், இன்று மே 16-ஆம் தேதி அதிகாலை மயிலாடுதுறையிலிருந்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான சீனியர் நிர்வாகிகள் பலர் புதுக்கோட்டை சென்று அங்கே பொறுப்பு அமைச்சரான மெய்யநாதனை சந்தித்து பேசியிருக்கிறார்கள். Mayiladuthurai DMK clash