வைஃபை ஆன் செய்த உடனேயே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்துதான் ஏகத்துக்கும் தகவல்கள் வந்து குவிந்தன. இவற்றை பார்த்தபடியே வாட்ஸ் அப் மெசேஜை விறுவிறுவென டைப் செய்ய தொடங்கியது
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில்தான் டாக்டர் ராமதாஸ், மே 16-ல் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் 220 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் 110 மாவட்ட செயலாளர்களில் 10 பேரும் 110 மாவட்டத் தலைவர்களில் 12 பேரும் என மொத்தம் 22 பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனராம். Digital thinnai what happened pmk meeting

டாக்டர் ராமதாஸின் பேச்சுக்கு மறுப்பு தட்டாமல் சொல் பேச்சைக் கேட்டு வந்த பாமக ‘சொந்தங்கள்’ இப்படி ‘அய்யா’வுக்கு அதிர்ச்சி தர என்ன காரணம் என அக்கட்சியின் நிர்வாகிகளிடம் நாம் பேசத் தொடங்கிய உடனேயே குமுறல்களை குபுகுபுவென கொட்டித் தீர்த்துவிட்டனர்.
நம்மிடம் பேசிய பாமக நிர்வாகிகள், அய்யாவுக்கும் சின்ன அய்யாவுக்கும் இடையேயான பிரச்சனை நீண்டகாலமாக இருந்தாலும் வெளியே பெரியதாக தெரியாமல்தான் இருந்தது. பெரிய அய்யாவும் எல்லாம் சரியாகும் என நினைத்துக் கொண்டிருந்தார். 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் இருந்துதான் பெரியவருக்கும் சின்னவருக்குமான பிரச்சனை ரொம்ப அதிகமாகிவிட்டது என்றனர்.
2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்குதான் போக வேண்டும் என டாக்டர் ராமதாஸ் உறுதியாக இருந்ததும் இதற்காக அதிமுகவின் சிவி சண்முகம், கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தி தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலைக்கு கொண்டு வந்து வைத்திருந்தார்.
ஆனால், அன்புமணி ராமதாஸ்தான் திடீரென பாஜகவுடன் கூட்டணி என முடிவு செய்து பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அண்ணாமலையை இரவோடு இரவாக தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வந்து டாக்டர் ராமதாஸை சம்மதிக்கவும் வைத்தார் என்பதை நாமும் மின்னம்பலத்தில் எழுதி வருகிறோம்.

இதனைத் தாண்டிய சில விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் பாமக நிர்வாகிகள். அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன்தான் கூட்டணி என அய்யா முடிவு எடுத்திருந்தார்.
இதற்கான பேச்சுவார்த்தைகளை டீலிங்குகளை தீவிரமாக அய்யா நடத்திக் கொண்டிருந்த போது, சென்னையில் சின்ன அய்யாவை பல ‘கட்சி’ பிரமுகர்கள் சந்தித்து பேசியதும் அய்யாவின் காதுகளுக்கு வந்தது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திரைப்பட தயாரிப்பாளரும் கல்வி நிறுவனங்களின் அதிபருமான ஐசரி கணேஷ் பங்களா ஒன்றில்தான் சின்ன அய்யாவின் ஜாகை. அங்குதான் இந்த சந்திப்புகள் நடந்துள்ளன.
இதற்கு பிறகுதான் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வந்து பாஜகவுடனான கூட்டணி ஒப்பந்தமே இறுதியானது. இதனை வேண்டா வெறுப்பாகத்தான் அய்யாவும் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகுதான் சின்ன அய்யா மீதான அய்யாவின் அதிருப்தியும் கோபமும் மிகவும் அதிகரித்தது என விவரித்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே, பாமக பொதுக்குழுவில் மோதல், அன்புமணி தலைவர் பதவி பறிப்பு என்பவை நடந்தனவாம்.
இதனை எல்லாம் சேர்த்து வைத்துதான் மாமல்லபுரம் மாநாட்டில் மொத்தமாக வெளிப்படுத்தினாராம் டாக்டர் ராமதாஸ். அந்த மாநாட்டில் பேசுகையில், சிலர் கூட்டணி பற்றி பேசுகிறார்கள். கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதனை நான் முடிவு செய்வேன். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். வெளி வேஷம், வெளி பேச்சு, கூட்டணி குறித்த பேச்சு, கட்சிக்குள்ளே கூட்டணி இனி இதுவெல்லாம் நடக்காது.
எனவே, உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பிலேயே இருக்க முடியாது. அது யாராக இருந்தாலும் சொல்கிறேன் என்றெல்லாம் ராமதாஸ் சீறியதும் மேலே சொன்ன சம்பவங்களின் அடிப்படையில்தான் என்கின்றனர் பாமக நிர்வாகிகள்.
டாக்டர் ராமதாஸின் இந்த பேச்சுக்குப் பின்னர் அன்புமணி ராமதாஸும் ‘தீர்க்கமான’ ஒரு முடிவெடுத்தவராகவே, பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 500-க்கும் மேற்பட்டோரை அழைத்து மே 14-ந் தேதியன்று திருப்போரூர் சைத்தன்யா திருமண மண்டபத்தில் தடபுடல் பிரியாணி விருந்து கொடுத்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் பாமகவின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். Digital thinnai what happened pmk meeting

இதில் கடுப்பாகிப் போன நிலையில்தான் தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலாளர்களைக் கூட்டினார் ராமதாஸ். ஆனாலும் அன்புமணியும் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க வெறும் 22 நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தாம் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை முதல் முறையாக மகன் உட்பட அத்தனை கட்சி நிர்வாகிகளும் கூண்டோடு புறக்கணித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே, அன்புமணிக்கும் அழைப்பு விடுத்தேன்.. மாநாடு களைப்பில்தான் சிலர் வராமல் இருந்திருக்கலாம். கூட்டணி நிச்சயம் உண்டு. அதை பின்னர் அறிவிப்போம். 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான ஆலோசனைகளை இன்றைய கூட்டத்தில் வழங்கினேன் என கூட்டத்திலும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ராமதாஸ்.
ஆனால், அன்புமணி ஆதரவாளர்களோ, நாங்கள் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் எப்போது தைலாபுரம் தோட்டத்துக்குப் போனாலும் பெரிய அய்யா கேட்கிற முதல் கேள்வியே.. கட்சி நிதி எவ்வளவு கொண்டு வந்தீங்க? தேர்தல் நிதி என்னாச்சுய்யா என்பதுதான்.. வசூலாகவில்லை என்று சொன்னாலும் திண்டுக்கல் மாவட்டமா… இன்னாரைப் போய் பாரு… கேளு.. கொடுப்பாங்க என உத்தரவிடுவார்.. நாங்களும் ஒரே ஆளிடம் எத்தனை முறைதான் கேட்பது என சலிப்படைந்துவிட்டோம். Digital thinnai what happened pmk meeting
ஆனால், சின்ன அய்யா அப்படி இல்லை.. பொருளாதார ரீதியாகவும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுக்கு மிகவும் உதவியாகவும் இருக்கிறார்.. அது மட்டுமல்ல.. எப்படி இருந்தாலும் பாமகவைப் பொறுத்தவரை சின்ன அய்யா எடுக்கிற முடிவுக்குதான் பெரியவர் கட்டுப்படுவார்.
இதுதான் அண்மைக்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் சின்ன அய்யா பக்கமே நிற்கிறோம்.. அவருக்கு பக்கபலமாக நிற்கிறோம் என ராமதாஸ் கூட்டத்தைப் புறக்கணித்ததன் பின்னணியை விலாவாரியாக நம்மிடம் தெரிவித்ததாக கூறிவிட்டு Sent-ஐ தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போக முயன்ற வாட்ஸ்அப் மீண்டும் மெசேஜை வேகமாக டைப் செய்தது.
தமிழ்நாட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் டாஸ்மாக் அமலாக்கத்துறை ரெய்டு பற்றிதான் அந்த ‘ஹாட்’ மெசேஜ். Digital thinnai what happened pmk meeting

டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக இன்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் முந்தைய ரெய்டுகளைப் போல இன்றைய சோதனை இல்லை என்பதையே டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன், அவரது மனைவியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றது வெளிப்படுத்தி இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
அத்துடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் ரதீஷ், அமைச்சர் அன்பில் மகேஸின் உறவினர்களான திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் வாலாடி கார்த்திக் தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில்தான் இன்று அவரையும் அவரது மனைவியையும் தங்களது அலுவலகத்துக்கு அழைத்துப் போயுள்ளனராம்.. அங்கேயும் விசாகன், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி கைது செய்யலாமா என டெல்லி மேலிடத்திடம் கேட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனராம் அதிகாரிகள். Digital thinnai what happened pmk meeting

அமலாக்கத்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரை, செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாத 14 மாத காலங்களில் டாஸ்மாக் தொடர்பான விவகாரங்களைத்தான் விசாகனிடம் கேட்கிறதாம். விசாகனிடம் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த வாட்ஸ் அப், மெசேஜ்களை வைத்து இந்த தகவலை யார் அனுப்பியது? இது எதற்காக அனுப்பி வைக்கப்பட்டது? என துருவித் துருவி கேட்கின்றனராம் அதிகாரிகள். ஆனால் எதற்குமே விசாகன் பதிலளிக்காமலேயே இருப்பதால்தான் ‘கைதுக்கு நேரம்’ குறித்துவிடலாமா என டெல்லியிடம் கேட்கின்றனராம் அதிகாரிகள் என டைப் செய்துவிட்டு இறுதியாக Sent பட்டனை தட்டிவிட்டது வாட்ஸ் அப்.