ஸ்டாலினை ஏமாற்றிய நிவேதா முருகன்?

Published On:

| By Minnambalam Desk

கடந்த மே 6ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் ஏற்பாட்டில் சுமார் 3,000 பேர் மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் இணையும் விழா அறிவிக்கப்பட்டு, இந்த விழாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலினும் வருகை தந்தார்.

ADVERTISEMENT

இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், “நானும் டெல்டாகாரன் தான். மண்ணின் மைந்தன் தான். குறிப்பாக மயிலாடுதுறையின் மாப்பிள்ளை நான். ஒரு மாப்பிள்ளை ஆக இந்த நிகழ்ச்சியில் உங்களை எல்லாம் நான் வரவேற்கிறேன்” என்று மனம் மகிழ்ந்து பேசி இதற்கு ஏற்பாடு செய்த நிவேதா முருகனையும் பாராட்டினார். Did Nivetha Murugan deceive Stalin

முதல்வர் ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தான் உள்ளது. இந்த வகையில் தான் நான் மயிலாடுதுறையின் மாப்பிள்ளை என்று உரிமை பொங்க பேசினார் ஸ்டாலின்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த சில தினங்களில்… மயிலாடுதுறை மாவட்டத்தின் மூத்த திமுக நிர்வாகிகள் அறிவாலயத்திற்கு சென்று ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து… “நிவேதா முருகன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சுமார் 300 பேர் தான் உண்மையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள். மற்ற அனைவருமே திமுகவை சேர்ந்தவர்கள் தான். ஆனால், தன் மீது கட்சி ரீதியாக பல புகார்கள் இருப்பதால் அவற்றிலிருந்து திசை திருப்ப இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்” என்று புகார் அளித்திருக்கிறார்கள்.

கட்சி ரீதியாக அறிவாலயத்திற்கு இப்படிப்பட்ட புகார்கள் சென்ற அதே நேரம், சீர்காழியிலிருந்து துர்கா ஸ்டாலின் அம்மையாருக்கும் தனிப்பட்ட முறையில் இந்த நிகழ்ச்சி பற்றி புகார்கள் சென்றிருக்கின்றன.

ADVERTISEMENT

இதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதும், அவர் பொறுப்பு அமைச்சர் மெய்யநாதனிடம் விசாரித்திருக்கிறார். இதுகுறித்து உடனடியாக தனக்கு தகவல் தரும்படியும் மெய்யநாதனிடம் முதலமைச்சர் கேட்டிருக்கிறார்.

பொறுப்பு அமைச்சரும் விசாரித்து, ‘இணைந்தவர்களில் பாதி பேர் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள். பாதி பேர் திமுகவை சேர்ந்தவர்கள்’ என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்.

மேலும், இந்த புகார்கள் குறித்து உளவுத்துறையிடமும் கேட்கப்பட்டு கட்சியினரின் புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் மீது கோபத்தில் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்கிறார்கள்.

இது மட்டுமல்ல இன்று மே 15 ஆம் தேதி டெல்டா மண்டல செயலாளரான அமைச்சர் நேரு மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்திலும் இப்பிரச்சனை எதிரொலிக்கலாம் என்கிறார்கள் மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share